Published:Updated:

ஐ.ஏ.எஸ் அகாடமி சூப்பர் குரு சங்கரை வீழ்த்திய விஷயங்கள்!

ஐ.ஏ.எஸ் அகாடமி சூப்பர் குரு சங்கரை வீழ்த்திய விஷயங்கள்!
ஐ.ஏ.எஸ் அகாடமி சூப்பர் குரு சங்கரை வீழ்த்திய விஷயங்கள்!

ஐ.ஏ.எஸ் அகாடமி சூப்பர் குரு சங்கரை வீழ்த்திய விஷயங்கள்!

டெல்லியில் செயல்படும் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனங்களுக்கே போட்டியாக விளங்கிய சென்னை சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் சங்கர் இன்று அதிகாலை சென்னை மயிலாப்பூரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

திருச்செங்கோடு அருகே உள்ள நல்லாங்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சங்கர், ஐ.ஏ.எஸ்.கனவோடு சென்னை வந்தார். ஆனால், இன்டர்வியூ வரை சென்ற அவரால் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக முடியவில்லை. தன்னுடைய கனவை, மற்றவர்கள் மூலம் நிஜமாக்கினார். முன்பெல்லாம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்று ஐ.ஏ.எஸ். கோச்சிங் பெற்ற காலம் மாறி, சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயில ஆந்திரா, கர்நாடகா என பிற மாநிலங்களிலிருந்து சென்னை வந்தனர். இதற்காக சங்கர் உழைத்த உழைப்பு... அசாத்தியம். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் செயல்படும் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமிக்குச் சென்றவர்களுக்கு மட்டுமே தெரியும் அங்குள்ள வசதிகள். நட்சத்திர ஹோட்டலுக்கு இணையான வசதிகளைக் கொண்ட அந்த ஐ.ஏ.எஸ் அகாடமி கட்டடத்தில் ஒரே நேரத்தில் பல வகுப்புகள் நடத்தப்படும். 
 

சாதாரணமாக இருந்த சங்கர், ஐ.ஏ.எஸ். அகாடமி மூலம் பிரபலமானார். அவருடைய மாணவர்கள் பலர், உயர்பதவிகளில் உள்ளனர். இதுவே அவருக்கு கிடைத்த அங்கீகாரமாக மாறியது. சங்கர் என்றதும் அவரின் புன்சிரிப்புதான் நினைவுக்கு வரும். எளிதாக அவரை யார் வேண்டும் என்றாலும் சந்திக்கலாம் என்பது கூடுதல் ப்ளஸ். ஐ.ஏ.எஸ். தேர்வில் தோற்றுப்போனவர்களிடம் உன்னால் முடியும் என்ற சங்கரின் வார்த்தையால் பலர் இன்று ஐ.ஏ.எஸ்களாக உருவாகியுள்ளனர். 
சங்கரின் தனிப்பட்ட வாழ்க்கை கொஞ்சம் சுவாரஸ்யமானது. காதலித்து திருமணம் செய்துகொண்டவர் சங்கர். சங்கரின் மாமனார் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து சங்கரும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். `சண்டிவீரன்' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். கலர், கலராக பைஜாமா அணிவது சங்கருக்கு ரொம்பவே பிடிக்குமாம். நண்பர்களோடு ஜாலி அரட்டை முதல் சீரியஸ் விவாதங்கள் வரை மேற்கொள்வது அவருக்குப் பிடிக்கும்! 
சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் படித்து உயர் பதவிகளில் இருப்பவர்களுடன் நட்பில் இருந்துவந்த சங்கருக்கு செல்வாக்கு உயர்ந்தது. அது அவருடைய வளர்ச்சிக்கும் சில வகைகளில் உதவியது. வளர்ச்சி இருக்குமிடத்தில் பகை, விரோதமும் உண்டாகும்தானே..! சென்னையில் செயல்படும் இன்னொரு ஐ.ஏ.எஸ் கோச்சிங் சென்டரின் உரிமையாளருக்கும் சங்கருக்கும் இடையில் சில மனஸ்தாபம். சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் வளர்ச்சியைக் கண்டு பொறமைப்பட்ட இதர கோச்சிங் சென்டர்கள் அரசு தேர்வு முறைகேடு விவகார சிக்கலில் சிக்கின. அதுதொடர்பான விசாரணை நடந்துவரும் நேரத்தில் சங்கர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். அவரின் முடிவுக்கு குடும்ப பிரச்னைதான் காரணம் என்று சொல்லப்பட்டாலும் அதற்கு வேறு சில பின்னணியும் இருக்கும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். 
சங்கர், கடந்த சில மாதங்களாக கடும் மனஉளைச்சலில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. நண்பர்கள் அவ்வப்போது ஆறுதல் கூறினாலும் அவரால் மனஉளைச்சலிலிருந்து விடுபட முடியவில்லை என்கிறார்கள். சம்பவத்தன்றுகூட குடும்பத்தில் தகராறு என்றதும் அவருக்கு நெருக்கமான இரண்டு நண்பர்கள் மயிலாப்பூருக்குச் சென்றுள்ளனர். அவர்கள் பிரச்னைக்கு சுமுக தீர்வை ஏற்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால்தான் அதிகாலையில் தூக்குப்போட்டு தற்கொலை முடிவை சங்கர் எடுத்துள்ளார். 

சங்கரிடம் பழகியவர்கள் எல்லாம் அவரை நல்லவர், உதவி செய்யக்கூடியவர் என்றுதான் சொல்வார்கள். ஆனால், சங்கரின் நிஜ வாழ்க்கையில் சொல்ல முடியாத சில சங்கடங்கள் இருந்துள்ளது சிலருக்கு மட்டும்தான் தெரியும். சங்கருக்கு அதிகார வட்டாரத்தில் இருப்பவர் ஒருவரின் நட்பு கிடைத்த பிறகு அவரின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பணமும் புகழும் சேர்ந்தபிறகும்கூட சங்கரின் நடவடிக்கைகள் மாறவில்லை. இருப்பினும் ஒருசில செயல்கள் சங்கரின் குடும்பத்தில் புகைச்சலை உண்டாக்கி இருக்கிறது. அந்தப் பிரச்னையிலிருந்து சங்கரால் விடுபட முடியவில்லை. தன்னம்பிக்கை கொடுத்து மற்றவர்களின் வாழ்க்கையில் ஏணியாக இருந்த சங்கர், இன்று சடலமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையில் கிடந்தார். அவரைப் பார்க்க ஏராளமானவர்கள் வந்திருந்தனர். சோகத்தில் மூழ்கிய நண்பர்கள், உறவினர்கள் சங்கருக்கா இந்த முடிவு என்று புலம்பிக் கொண்டிருந்தனர்!
அடுத்த கட்டுரைக்கு