Published:Updated:

"அந்தப் பள்ளிக்கே ஆசிரியை ஆகணும்!”

"அந்தப் பள்ளிக்கே ஆசிரியை ஆகணும்!”
பிரீமியம் ஸ்டோரி
"அந்தப் பள்ளிக்கே ஆசிரியை ஆகணும்!”

வெ.நீலகண்டன், படங்கள்: எம்.விஜயகுமார்

"அந்தப் பள்ளிக்கே ஆசிரியை ஆகணும்!”

வெ.நீலகண்டன், படங்கள்: எம்.விஜயகுமார்

Published:Updated:
"அந்தப் பள்ளிக்கே ஆசிரியை ஆகணும்!”
பிரீமியம் ஸ்டோரி
"அந்தப் பள்ளிக்கே ஆசிரியை ஆகணும்!”

“இதோ, இந்த இடத்துலதான் தண்ணிப்பானை இருந்துச்சு.  வழக்கமா, இன்டர்வெல் பெல் அடிக்கிறப்போ ரெண்டு வரிசை நிக்கும். ஒரு வரிசையில நாங்கள்லாம் நிப்போம். இன்னொரு வரிசையில வேற சாதிக்காரங்க நிப்பாங்க. நாங்க டம்ளரைத் தொடக்கூடாது. குடத்துக்கிட்டே ஒரு ஆயா நிப்பாங்க. அவங்க டம்ளர்ல தண்ணியெடுத்து ஊத்துவாங்க. நாங்க கையேந்திக் குடிக்கணும். அப்போ, நான் ஒண்ணாவது படிச்சுக்கிட்டிருந்தேன். அன்னைக்கு ரொம்பத் தாகம் எடுத்துச்சு. ஆயாவைக் காணோம். நானே டம்ளரை எடுத்து தண்ணியெடுத்துக் குடிச்சுட்டேன். சவரியூர் வாத்தியார், ஜன்னல் வழியா அதைப் பாத்துட்டார். உள்ளேருந்து வேகமா ஓடிவந்து மூங்கில் குச்சியால தலையில, மூஞ்சியில எல்லாம் அடிச்சார். கண்ணுக்குள்ள இருந்து ரத்தம் கொட்டுச்சு...” - சம்பவம் நடந்து 23 வருடங்களாகின்றன. ஆனாலும், தனத்தின் வார்த்தைகளில் இன்னும் வலியும் வடிந்த ரத்தமும் படிந்திருக்கிறது.

கல்விக்கூடங்களில் புரையோடிக்கிடந்த சாதி வெறியை அம்பலப்படுத்தியது அந்தச் சம்பவம்தான். சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம், கட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில்  ஒன்றாம் வகுப்பு படித்த தனம், பொதுக்குடத்தில் தண்ணீர் எடுத்துக் குடித்த ‘குற்றத்துக்காக’  ஆசிரியர் அடித்த அடியில் பார்வை பாதிக்கப்பட்டார். ‘இனி மாணவர்களை அடிக்கவே கூடாது’ என்று ஆசிரியர்களிடமிருந்து பிரம்பைப் பிடுங்க இந்தச் சம்பவமே காரணமாக அமைந்தது. இயக்குநரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ஞானராஜசேகரன், இந்தச் சம்பவத்தை, ‘ஒரு கண் ஒரு பார்வை’ என்ற பெயரில் குறும்படமாக்க, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அதைத் தெருக்கள் தோறும் திரையிட்டது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடனடியாக மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய, ஓரளவுக்கு மீண்டது தனத்தின் பார்வை.

இப்போது தனத்துக்கு வயது 28. திருமணம் முடிந்துவிட்டது. பி.எட் முடித்துவிட்டார். தனம் படித்த கட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இப்போது நடுநிலைப்பள்ளியாக மாறிவிட்டது.  நாட்டின் ஒட்டுமொத்தப் பார்வையும் விழுந்ததால், அடிப்படை வசதிகள் கூட இல்லாமலிருந்த இந்தப் பள்ளியை  வேகவேகமாக மேம்படுத்தியிருக்கிறது அரசு. பள்ளியை ஒட்டிய காலனியில்தான் இருக்கிறது தனத்தின் வீடு.

"அந்தப் பள்ளிக்கே ஆசிரியை ஆகணும்!”

“அந்தச் சம்பவத்தை எப்படியாவது மறந்திடணும்னு நினைப்பேன் சார். ஆனா, ஒவ்வொருமுறை கண்ணாடி பார்க்கும்போதும் அது நினைவுக்கு வந்துகிட்டே இருக்கு. அந்த சார் பேரு சுப்பிரமணியன். நாங்க சவரியூர் வாத்தியார்னுதான் சொல்வோம். ஒண்ணாவதுக்கும், ரெண்டாவதுக்கும் அவர் தான் சார்.  எங்களை அவர் எப்பவுமே வித்தியாசமாத்தான் நடத்தினார்.

ஸ்கூல்ல மட்டுமில்லே... ஊர்லயும் அதே நிலைமைதான். தெருக்கள்ல நடக்கமுடியாது; கிணத்துல தண்ணி எடுக்க முடியாது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு எல்லாமே மாறிடுச்சு. ஸ்கூல்ல ரெண்டு வரிசை  மாறுச்சு. ஊருக்குள்ளயும் சாதி ரீதியான பிரச்னைகள் குறைஞ்சிடுச்சு.ஆனாலும், இன்னும் எங்களால இந்த மாரியம்மன் கோயிலுக்குள்ள சுதந்திரமாப் போயி அம்மனைக் கும்பிட முடியலே” விரக்தியாகச் சிரிக்கிறார் தனம்.

“அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. அம்மாதான் செங்கல் சூளைக்குப் போய் கல் சுமந்து எங்களை வளர்த்துச்சு. ஒரு அக்கா, ஒரு தங்கச்சி, ஒரு தம்பின்னு நாலு பேரு நாங்க. சவரியூர் வாத்தியார் அடிச்ச பிறகு, அப்பா அவர்கிட்ட எவ்வளவோ கெஞ்சிப்பாத்தாரு. ‘நான் இல்லாதவன்... எப்படியாவது வைத்தியம் பாத்து எம்புள்ளையைக் குணப்படுத்தி விட்டுருங்க’ன்னு. ‘நான் அடிக்கவே இல்லை. உங்க புள்ள கையவச்சு கண்ணுல கீறிக்குச்சு... என்னால எந்த உதவியும் பண்ண முடியாது’ன்னு சொல்லிட்டாரு. அம்மாவோட தாலியை வித்துதான் அப்பா என்னை மதுரைக்குத் தூக்கிட்டு ஓடினார். ‘கம்பைக் கொண்டு அடிச்சதால நரம்பு பாதிச்சிருக்கு... பார்வை வர்றது கஷ்டம்’ன்னு சொல்லிட்டாங்க.

அதுக்கப்புறம்தான் அப்பா, கலெக்டருக்கெல்லாம் மனு கொடுத்தார். முதலமைச்சருக்குத் தெரிஞ்சு, ஸ்கூலுக்கே  கலெக்டரை அனுப்புனாங்க. 25 ஆயிரம் பணமும் கொடுத்தாங்க. அந்த சாரை வேலைநீக்கம் செஞ்சாங்க. என்னைச் சிகிச்சைக்காக சென்னை அழைச்சிட்டுப் போனாங்க. அதுக்குள்ள அடிபட்ட கண்ணுல பூவிழுந்து மொத்தப் பார்வையும் போயிருச்சு. ஆபரேஷன் பண்ணி லென்ஸ் வச்சதால ஓரளவுக்குப் பார்வையை மீட்க முடிஞ்சது. 

நான் ஆஸ்பத்திரியில இருந்தப்போ கமல்ஹாசன் சார் வந்து பாத்து பணம் கொடுத்தார். சென்னையில சர்ச் பார்க்  கான்வென்ட்ல என்னையும் அக்காவையும் ஒரு நல்ல மனிதர் சேர்த்துவிட்டார்.  ஆனா, ஒருமாதம்கூட அந்தச் சூழல்ல தாக்குப்பிடிக்க முடியலே. ஊருக்கே கிளம்பி வந்துட்டோம்.

திரும்பவும் ஊர்ல அதே பள்ளி. ஆனா, நிலைமை மாறிடுச்சு... சாரெல்லாம் கனிவா நடந்துகிட்டாங்க. மூணாவது படிச்ச அக்காவை, என்னோட பாதுகாப்புக்காக திரும்பவும் ஒண்ணாவதுலயே போட்டாங்க.  ஒரு வழியா  பிளஸ் டூ முடிச்சேன். வளர, வளர,  ‘நாமளும் ஆசிரியராகணும், சவரியூர் வாத்தியார் மாதிரி இல்லாம எல்லோரையும் சமமா அரவணைக்கணும்’கிற கனவும் வளர்ந்துச்சு. பிளஸ் டூ முடிச்சதும் 
செ.கு.தமிழரசன் ஐயா மூலமா முதலமைச்சரைப் போய்ப் பார்த்தேன்.

"அந்தப் பள்ளிக்கே ஆசிரியை ஆகணும்!”

முதலமைச்சர் பரிந்துரையால் சேலம் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில இடமும் கிடைச்சுச்சு.  ஆசிரியர் பயிற்சி முடிச்சதும், மேல படிக்க உதவி பண்ணணும்னு முதலமைச்சருக்குக் கடிதம் எழுதினேன். இடைப்பாடி அரசுக்கல்லூரியில இடம் கிடைச்சுச்சு. ஒரு வழியா இப்போ பி.எட் படிப்பையும் முடிச்சுட்டேன்.

முகத்துல வெப்பம் படக்கூடாது, தலையில் காயம்படக் கூடாது, கண்ணைக் கசக்கக் கூடாது, உச்சி வெயில்ல நடக்கக் கூடாது.   கொஞ்சம் அழுத்தமாப் பாத்தாலும் கண்ணுல இருந்து தண்ணி வடிய ஆரம்பிச்சிரும்.  இந்தப் பிரச்னைகளைச் சுமந்துகிட்டுதான் படிப்பை முடிச்சிருக்கேன்.

எனக்காக அக்காவும் தங்கச்சியும் படிப்பை விட்டுட்டாங்க. என்னை வளர்க்கணுங்கிறதுக்காக செங்கல் சூளையில கல்லு சுமந்துதான், என்னை இந்த அளவுக்குக் கொண்டுவந்திருக்காங்க. அவங்களை உக்கார வச்சு நல்ல சோறு போடணும். இப்போ முதலமைச்சரா இருக்கிற எடப்பாடி ஐயா  எங்க தொகுதி எம்.எல்.ஏவும்கூட. அவரைப் பாக்க நாலு தடவை மெட்ராஸ் வந்தோம். சந்திக்கவே முடியலை.

எங்க ஊர் ஸ்கூல்லயே என்னை ஆசிரியராக்குங்க.

நான் படிச்ச, தீராத காயத்தை ஏற்படுத்தின இந்தப் பள்ளிக்கே நான் ஆசிரியரா வரணும். சாதி பார்க்காத, பாகுபாடில்லாம  குழந்தைங்களை வழிநடத்துற நல்ல ஆசிரியையா இருக்கணும்.”

 கனவு நிறைவேறும், நிறைவேற வேண்டும் தனம்!