Published:Updated:

அப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி!

அப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி!
அப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி!

பள்ளி மாணவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கி, அவர்களுடன் நன்கு பழகி அறிவுரைகளை வழங்கியவர், முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாம். அவரைப் பின்பற்றி சாதிக்க விரும்பும் மாணவர்கள், தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுக்கவே இருக்கின்றனர். சில பள்ளிகளில் அப்துல் கலாம் வகுப்பறை என்றே வைத்திருக்கிறார்கள். அத்தகைய குழந்தைகளின் நாயகன் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று. அதனால், பள்ளிகளில் பல்வேறு விழாக்களை நடத்திவருகின்றனர். 

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அப்துல் கலாம் பிறந்தநாளைப் பயனுள்ள வகையில் கொண்டாடியுள்ளனர். அதுகுறித்து, பள்ளியின் ஆசிரியை யுவராணி பகிர்ந்தார். "மாணவர்களுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் தரும் பெயர், அப்துல் கலாம். அவர் இந்த மண்ணை நேசித்தார். இயற்கையை நேசித்தார். அதனால், அவரின் பிறந்தநாளை இயற்கை வளத்தைப் போற்றவும், நம்மால் இயன்ற அளவில் உதவும் விதத்திலும் கொண்டாட முடிவுசெய்தோம். கலாமின் பெருமைகளைத் தாங்கிய பதாகைகளுடன் பேரணி நடத்தினோம். மேலும், 500 பனை விதைகளை நட இருக்கிறோம். இந்த 500 விதைகளும் மரங்களாகி, அப்துல் கலாமின் பெயரை இந்த உலகுக்குச் சொல்லும்; இயற்கையைப் பாதுகாக்கும். தலைமை ஆசிரியர் வழிகாட்டலில் அமைந்த இந்த நிகழ்ச்சிக்கு, கல்வி அதிகாரிகள் நேரில் வந்திருந்து பாராட்டினர்" என்கிறார் உற்சாகம் பொங்கும் குரலில்.