Published:Updated:

ஆசிரியர் ஆனால் ஆனந்தம்!

ஆசிரியர் ஆனால் ஆனந்தம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆசிரியர் ஆனால் ஆனந்தம்!

கு.ஆனந்தராஜ்

ஆசிரியர் ஆனால் ஆனந்தம்!

கு.ஆனந்தராஜ்

Published:Updated:
ஆசிரியர் ஆனால் ஆனந்தம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆசிரியர் ஆனால் ஆனந்தம்!

‘`இன்னைக்கு எல்லாத் துறைகளிலும் வொர்க் பிரஷர் அதிகமாயிட்டே வருது. அதிலிருந்து நம்மை மீட்டெடுக்க, யோகா வகுப்புகள் முதல் மலை உச்சி கேம்ப்கள்வரை பலரும் தேடி ஓடிப் போறாங்க. அப்படி ஒரு ரிலாக்சேஷனை நாங்க இணையத்தில் தேடியபோது, சிக்கிம் மாநிலம், புரியாகாப்(Puriakhop) கிராமத்தில் இருக்கும் ஆரம்பப் பள்ளியான ‘சிக்கிம் இமாலயன் அகாடெமி’, ‘எங்க பள்ளிக்கு வாலன்டியரா வாங்களேன்’னு கொடுத்திருந்த அறிவிப்பைப் பார்த்தோம். அங்க போய்ச் சேர்ந்தோம். வாழ்க்கைக்கு ரெஃப்ரஷ் பட்டனை அழுத்தின மாதிரி ஆயிடுச்சு’’ என்கிறார்கள் தமிழகத்தைச் சேர்ந்த பூஜா, தினேஷ் மற்றும் சந்தோஷ். சிக்கிம் இமாலயன் அகாடமியில் தன்னார்வலர்களாக நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் செட்டில் ஆகியிருப்பவர்களை, வீடியோ காலில் பிடித்தேன். முதலில், பள்ளியின் முதல்வர் ஜி.வி.குர்ங்கை நமக்கு அறிமுகப்படுத்தினார் பூஜா.

“நேபாள மொழி பேசும் இம்மக்கள், தங்களின்  முதன்மைத் தொழிலான விவசாயத்தில் குழந்தைகளையும் ஈடுபடுத்திவந்தார்கள். கல்வி பற்றிய விழிப்பு உணர்வின்மை, புத்தகம், சீருடை வாங்கக்கூட வசதியில்லாத நிலை ஆகிய காரணங்கள் இக்குழந்தைகளைப் படிப்பறிவில் இருந்து விலக்கிவைத்திருந்தன. 15 வருடங்களுக்கு முன், கிராமத்துக்கு டூரிஸ்டாக வந்த இரண்டு டச்சுக்காரப் பெண்கள் அந்தச் சூழலைப் பார்த்து, ஊர்ப் பிரமுகர்களிடம் பேசி, நிலம் வாங்கி, வகுப்பறை கட்டினார்கள். பெற்றோர்களிடம் இலவசக் கல்வி கொடுப்பதாக வலியுறுத்தி, 2003-ல் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுடன் ‘சிக்கிம் இமாலியன் அகாடமி’ என்ற இந்தப் பள்ளியைத் தொடங்கினார்கள். பின்னர் என் அண்ணனிடம் நிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டு, தங்களின் சொந்தநாட்டுக்குத் திரும்பினார்கள். பல வருடங்களாக இந்தப் பள்ளியை நான் நிர்வகித்துவருகிறேன்’’ என்றார் ஜி.வி.குர்ங்க்.

ஆசிரியர் ஆனால் ஆனந்தம்!

“சேலம்தான் என் பூர்விகம். வளர்ந்ததெல்லாம் மும்பையில். கெமிக்கல் இன்ஜீனியரா 12 வருஷம் வேலைபார்த்தேன். வாலன்டியரா ரெண்டு மாசம் இந்தப் பள்ளியில் இருந்துட்டுக் கிளம்பிடலாம்னுதான் வந்தேன். ஆனா, மும்பைக்குத் திரும்பின பிறகும் இந்தக் குழந்தைகள் ஞாபகமாவே இருந்துச்சு. அந்த மெஷின் வாழ்க்கையை உதறிட்டு, வீட்டில் சம்மதம் வாங்கிட்டு, இங்கேயே நிரந்தரமா இருந்திடலாம்னு முடிவுபண்ணி ரெண்டு வருஷம் முந்தி வந்தேன். டீச்சரா வேலையில் சேர்ந்து, இப்போ ஸ்கூல் மேனேஜிங் டைரக்டரா புரொமோஷன் ஆகியிருக்கேன். எல்கேஜியில தொடங்கி ஐந்தாம் வகுப்புவரை இங்க வகுப்புகள் இருக்கு. ஒவ்வொரு வகுப்புலயும் சராசரியா 8 - 10 குழந்தைங்கதான். ஸ்கூலுக்குப் பக்கத்துல வீடு இருக்கிற 30 குழந்தைங்க தினமும் டேஸ் ஸ்காலர்ஸ். எல்லாக் குழந்தைகளுக்கும் மதியம் லன்ச் உண்டு. மாணவர் எண்ணிக்கை குறைவு என்பதால் எல்லாக் குழந்தைகளுக்கும் தனிக்கவனம் செலுத்த முடியுது’’ என்கிறார் பூரிப்புடன் பூஜா. 

இப்பள்ளியில் முழுநேர ஆசிரியர்கள் எட்டு பேர், ஊழியர்கள் மூன்று பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் சில ஆயிரங்கள் மட்டுமே ஊதியம். மாதம்தோறும் சராசரியாக ஐந்து வாலன்டியர்கள் வந்துவிடுகிறார்களாம்.

“வாலன்டியர்ஸூக்குத் தங்க இடமும், மூணு வேளை உணவும் இங்க தர்றாங்க. ஆனா, ஊதியம் இல்லை’’ என்கிறார், ஐந்து மாதங்களாக அங்கிருக்கும் தினேஷ் பாபு சுகுமார். “வெளிநாடுகளில் பள்ளிப் படிப்பு, வேலூர்ல பி.டெக் பயோடெக்னாலஜி, லண்டன்ல மாஸ்டர் டிகிரி, பெங்களூரிலுள்ள ஒரு ஃப்ரெஞ்சு கம்பெனியில அஞ்சு வருஷம் வேலைனு இருந்தேன். கை நிறையச் சம்பளம். அதனால ஸ்ட்ரஸ் ரிலீஃப்க்காக சமூக சேவை செய்யலாம்னு நினைச்சுகிட்டிருந்த நிலையில, ஒருமுறை ட்ரக்கிங் போனப்போ அஜின்க்யா என்பவர் நண்பரானார். என் எண்ண ஓட்டங்கள் படியே இருந்த அவர், இந்த ஸ்கூலுக்கு வந்து வொர்க் பண்ணினார். அவர் மூலமா கேள்விப்பட்டு நானும் கடந்த மார்ச் மாசம் இங்க வந்தேன். பனிமலைகளுக்கு மத்தியில எந்த ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான வாழ்க்கை, குழந்தைகளின் அன்புனு வார்த்தைகளில் சொல்ல முடியாத சந்தோஷம் இது. நான் இங்கிலீஷ், சயின்ஸ், ஜென்ட்ரல் நாலேட்ஜ், கம்யூட்டர் சயின்ஸ் பாடங்களைச் சொல்லித்தர்றேன்” எனும் தினேஷ், பெங்களூருக்குத் திரும்பிப்போகும் எண்ணத்தைத் தள்ளிப்போட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆசிரியர் ஆனால் ஆனந்தம்!

“இந்தக் கிராமத்தில் புகை பிடிக்க அனுமதியில்லை. இங்க என்னோட எல்லாத் தேவைகளுக்கும் சேர்த்தே ஒரு மாசத்துக்கு 2,000 ரூபாய்தான் செலவாகுது. பெங்களூருல அப்பார்ட்மென்ட் வாடகை மட்டும் ரூ.33 ஆயிரம் கொடுத்தேன். இங்க வெறும் ரூ.600 தான். ஆனா ஆத்ம அமைதி, ஆனந்தம், அன்பு எல்லாம் அன்லிமிட்டடாக் கிடைக்கும்.  வாழ்க்கைக்குப் புது அர்த்தம் கிடைச்சிருக்குது’’ என்று சிரிக்கிறார் தினேஷ்.

இப்பள்ளிக்கு வாலன்டியராக வந்த குறும்பட இயக்குநர் சந்தோஷ், இப்பள்ளி மற்றும் குழந்தைகளின் சூழலை மையப்படுத்தி ‘புளூட்டோ இன் மை மோமோஸ்’ என்ற இந்தி திரைப்படம் ஒன்றை உருவாக்கிவருகிறார்.

“இந்த ஸ்கூலைப் பத்திக் கேள்விப்பட்டு, கடந்த மார்ச் மாசம் டீச்சரா இங்க வந்தேன். ஒரு மாசம் கழிச்சு இங்கிருந்து கிளம்பினப்போ, இவங்களைவெச்சு ஓர் இந்திப் படமெடுத்து, அதன் வருமானத்தை இந்தப் பள்ளிக்கே கொடுத்துடலாம்னு தோணுச்சு. 14 பேர் கொண்ட டீமுடன் இக்கிராமத்துக்கு வந்தேன். கிட்டத்தட்ட பெரும்பகுதி ஷூட்டிங் முடிஞ்சுடுச்சு. படம் சில மாதங்கள்ல ரிலீஸாகிடும்” என்கிறார் சந்தோஷ்.

‘’சிக்கிம் மாநிலத்தின் 48 சதவிகிதப் பரப்பளவு காடுகள்தான். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துற மாதிரியான தொழிற்சாலைகள் அமைய இம்மாநில அரசு அனுமதிக்கிறதில்லை. மாநில தலைநகர் கங்க்டாக்லேருந்து 150 கி.மீ. தொலைவில் இருக்குற இக்கிராமத்துக்கு, மேற்கு வங்காளத்திலுள்ள பேக்போக்ரோ (pagpogro) விமான நிலையத்துல இருந்து மூணு டாக்ஸியில மாறி வந்து சேர அரை நாளாகிடும். சிட்டி வாழ்க்கையில, ஆர்டர் பண்ணின பீட்சா வர லேட்டானாக்கூட டென்ஷன் ஆவோம். ஆனா, இங்க மழைக் காலங்கள்ல போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டு, அடுத்த மூணு நாளைக்கு கரன்ட் இருக்காது. ஆனாலும் மக்கள் இயல்பு வாழ்க்கையில் இருப்பாங்க. வேலை, டார்கெட், இ.எம்.ஐ-னு எப்பவும் எதுக்காகவாவது விரைந்துகொண்டே இருந்த நாங்க, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்றதுனா என்னனு இங்கதான் உணர்ந்திருக்கோம்’’ என்கிறார்கள் மூவரும் மகிழ்ச்சியுடன்.

பின்னணியில் பூத்திருந்த குளிரும், குழந்தைகளும் அவ்வளவு அழகு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism