தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் நெகிழ்வுடனும் ஆச்சர்ரியத்துடனும் பேசப்படும் கனவு ஆசிரியர் பகவானையும், ஆசிரியர் எங்கள் பள்ளிக்கூடத்தை விட்டுப் போகவே கூடாதென்று அன்புக் கோட்டைக் கட்டி அவரைத் தடுத்து நிறுத்திய, அந்த மாணவ மாணவிகளையும், சந்திப்பதற்காக வெளியகரம் கிராமத்துக்குச் சென்றேன்.
திருத்தணியிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் சோமேஸ்வரன் மலையடிவாரத்தில் இருக்கிறது வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளி. பள்ளிக்குள் நாங்கள் கேமராவுடன் சென்றதும், “அண்ணா, எங்க சார் ஸ்கூலைவிட்டுப் போறாரா? சொல்லுங்க’’ என மாணவர்கள் அனைவரும் எங்களைச் சூழ்ந்து கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டனர். எதுக்கு உங்க சாரை இவ்ளோ பிடிச்சிருக்கு? எனக் கேட்க... ஒவ்வொரு பிள்ளைகளும் பேச ஆரம்பித்தனர்.
“பகவான் சார் ஏன் எனக்குப் பிடிக்கும்னா. வெளிய போனா எப்படி நடந்துக்கணும், எப்படி பேசணும்னு சொல்லித் தருவாரு. தாங்க்ஸ், சாரி இதெல்லாம் எதுக்கு சொல்லணும் சொல்லக் கூடாதுன்னு பாடத்துக்கு நடுவிலேயே அப்போ அப்போ சொல்லிக் கொடுப்பாரு. அவரு எங்க ஸ்கூலை விட்டு போறதை ஏத்துக்கவே முடியலை அண்ணா. அவர்கிட்ட போக வேணாம்னு சொல்லுங்க அண்ணா” என என் கைகளைப் பிடித்து அழுத ஏழாம் வகுப்புச் சிறுவன் லோகேஷை என்ன சொல்லி சமாதானப்படுத்துவதென்று தெரியவில்லை.

“பகவான் சார், வந்த அப்புறம்தான் ‘இங்கிலீஷ்ங்கிறது அறிவு இல்லை. மற்ற மொழிகள் போல அதுவும் ஒரு மொழிதான்னு எங்களுக்குப் புரிஞ்சது. ‘தமிழ் பேச வரல, தமிழ் படிக்க வரலைன்னாதான் நீங்க கவலைப்படணும்’னு சொல்லுவாரு. ‘அதே சமயம் இங்கிலீஷ் பாடத்தை வெறும் மார்க்குக்காக மட்டும் படிக்காதீங்கன்னு சொல்லிட்டே இருப்பாரு’ என்றான் பத்தாம் வகுப்பு மாணவன் அன்பரசு. “இந்த வருஷம் நான் பத்தாவது படிக்கிறேன். பகவான் சார் இல்லாம எப்படி பாஸ் ஆகப்போறோம்னு நினைச்சாலே பயமா இருக்கு அண்ணா” என சோகத்தில் ஆழ்ந்திருந்த முகத்தோடு சொன்னான்.
“எங்களுக்கு கிராமர் சொல்லித் தரும்போது அவர் வாழ்க்கையில் ரியலா நடந்த விஷயங்களை உதாரணமா சொல்லி அந்த வார்த்தையை எங்களுக்குப் புரிய வைப்பாரு. அது அப்டியே மனசுல பதிஞ்சிடும். பரிட்சையில எழுதும்போது ஈசியா ஞாபகம் இருக்கும்” என்றாள் ஒன்பதாம் வகுப்பு தீபிகா.
“என்கிட்டே பாடம் சம்பந்தமாத்தான் டவுட் கேக்கணும்னு இல்லடா. எதைப்பத்தி வேணா கேக்கலாம்னு பாடம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சொன்னதும். பசங்க எல்லாம் ஆளாளுக்கு ஒரு டவுட் கேக்க கிளாஸ் கொஞ்ச நேரம் காமெடியா போகும்... அப்டியே எப்படி பாடத்துக்குள்ள வந்தோம்னே தெரியாது. சார் அவ்ளோ நேக்கா சொல்லிக் கொடுப்பாரு” என்றான் இன்னொரு சிறுவன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நான் பத்தாவது படிக்கிறேன். எங்க பகவான் சார், ஒரு பாடத்தை எடுத்தார்னா அதை பாடமா சொல்லாம கதையா சொல்லித்தான் புரிய வைப்பாரு. ஷ்யாம்னு ஒரு பாடம் இருக்கு. அது ஒரு நாயைப் பத்தி. அதைச் சொல்லும்போது அவர் வளர்த்த நாய், அவர்கிட்ட எப்படியெல்லாம் இருந்துச்சு, அதை அவர் எவ்ளோ மிஸ் பண்றார்னு சொல்லிட்டு அப்டியே பாடத்துக்குள்ள போவாரு. இப்படித் திடீர்னு அவர் பாதியில விட்டுட்டுப் போனார்னா நாங்க எப்படி பாஸ் பண்ணுவோம் ஒண்ணுமே புரியலைண்ணா” எனக் கண் கலங்குகிறான் ரஞ்சித்.
இப்படி நாங்கள் பேசிய மாணவர் ஒவ்வொருவரும் அவர்கள் ஆசிரியர் பகவானைப் பற்றி அழுகையும், புன்னகையுமாகச் சொன்னார்கள்.
“அண்ணா, எங்க சார் பத்தி இன்னும் நிறைய சொல்றோம். அவரை எங்க ஸ்கூலை விட்டு மட்டும் போகச் சொல்லாதீங்க” எனப் பிள்ளைகள் ஆளாளுக்குச் சொல்ல அவர்களை ஆசிரியர் பகவானே சமாதானப்படுத்தினார்.

ஏழ்மையான நெசவுக் குடும்பத்தில் பிறந்த பகவான் தன் பரம்பரையில் முதல் தலைமுறை பட்டதாரி. `உங்க மேலே எல்லாப் பசங்களும் ஏன் இவ்ளோ அன்பா இருக்காங்க’ எனக் கேட்டேன். புன்னகைத்துக் கொண்டே பகவன் சொன்ன பதில் இது “எனக்கும் தெரியலை சார். இவங்க எல்லாம் ரொம்பக் கஷ்டப்படுற குடும்பத்துல இருந்து படிக்க வர்ற பசங்க. இவங்ககிட்ட இருக்கிற ஒரே ஆயுதம் கல்வி மட்டுந்தான். அதை என்கிட்டே இருக்கிற ்அனுபவ அறிவால் பட்டை தீட்டுறேன் அவ்ளோதான்” என அமைதியாகச் சிரித்தார். மற்ற ஆசிரியர்களும் பகவானின் கூற்றுப்படி நடந்துகொண்டார்கள் என்றால், எல்லோருமே கனவு ஆசிரியர்கள்தானே!
அட்டை, படங்கள்: ப.சரவணகுமார்