Published:Updated:

இவர்கள் வாழ்வு இப்படி சிதைபட்டிருக்கக்கூடாது!

இவர்கள் வாழ்வு இப்படி சிதைபட்டிருக்கக்கூடாது!
பிரீமியம் ஸ்டோரி
இவர்கள் வாழ்வு இப்படி சிதைபட்டிருக்கக்கூடாது!

இவர்கள் வாழ்வு இப்படி சிதைபட்டிருக்கக்கூடாது!

இவர்கள் வாழ்வு இப்படி சிதைபட்டிருக்கக்கூடாது!

இவர்கள் வாழ்வு இப்படி சிதைபட்டிருக்கக்கூடாது!

Published:Updated:
இவர்கள் வாழ்வு இப்படி சிதைபட்டிருக்கக்கூடாது!
பிரீமியம் ஸ்டோரி
இவர்கள் வாழ்வு இப்படி சிதைபட்டிருக்கக்கூடாது!

கிழ்ச்சியாகக் கிளம்பிப்போய், மனமுடைந்து வந்த கதை இது... அவ்வளவு எளிதில் விவரித்துவிட முடியாத வலி இது...

தமிழக வீதிகளெங்கும் இப்போது வடஇந்தியத் தொழிலாளர்கள் சல்லிசாகக் காணக் கிடைக்கிறார்கள். பிழைப்புத் தேடி தமிழகம் வரும் அவர்கள், சிறு நகரங்களில் உள்ள  கடைகளிலும் நீக்கமற நிறைந்துவிட்டார்கள். பொழுதுக்கும் வாயில் பாக்கைப் போட்டுக் குதப்பிக்கொண்டு, 200 ரூபாய்க்கும் 300 ரூபாய்க்கும் நாள்முழுக்க மாடுபோல உழைக்கும் அவர்களை, ‘சுகாதாரமற்றவர்கள்’ என்று சொல்லி முகம் திருப்பிக்கொள்கிறோம். ‘தமிழர்களின் வேலைவாய்ப்பை அபகரிக்கிறார்கள்’ என்று கோபம்கொள்கிறோம்.

இதைத் தாண்டி, அந்தத் தொழிலாளர்களின் குடும்பங்களையும் குழந்தைகளையும் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. அந்தக் குழந்தைகள் எங்கு படிப்பார்கள், என்ன படிப்பார்கள், யாருடன் விளையாடுவார்கள், அவர்களின் பால்யம் மகிழ்ச்சி நிறைந்ததாகக் கழியுமா, அல்லது வேருடன் பிடுங்கப்பட்டு வேறிடத்தில் நடப்பட்ட செடிபோல வாடிவிடுமா... இந்தக் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இருக்கிறதா?  

இவர்கள் வாழ்வு இப்படி சிதைபட்டிருக்கக்கூடாது!

கோவை தொண்டாமுத்தூருக்கு அருகில் உள்ளது கெம்பனூர். இங்கு தேசியக் குழந்தைகள் தொழிலாளர் திட்டத்தின்கீழ் செயல்பட்டுவரும் சிறப்புப் பயிற்சி மையத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 30 குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்கள் தமிழ் படிக்க முயற்சி செய்துவருகிறார்கள் என்ற தகவல் அறிந்து, அவர்களைப் பார்க்க மகிழ்ச்சியுடன் விரைந்தோம்.

ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டால் ஆன சிறு கொட்டகைதான் பயிற்சி மையம். அதை தங்களால் முடிந்தவரை ஓவியங்களாலும், சார்ட் தோரணங்களாலும் அழகாக்கியிருந்தார்கள் அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள். நாம் சென்ற நாளில், 30 குழந்தைகளில் 15 பேர் ஆப்சென்ட். அவர்கள் அசாம் சென்றிருப்பதாகத் தகவல் சொன்ன மல்லிகா டீச்சர், மற்ற பிள்ளைகளுக்கு நம்மை அறிமுகப்படுத்தினார். சட்டென எழுந்து அவர்கள் சொன்ன கோரஸ் வணக்கம், தமிழ்ப் பண்பாடு அவர்களைத் தழுவிக்கொண்டதற்கான சாட்சி.

‘நிலா நிலா ஓடிவா...’ ‘அறம் செய விரும்பு...’ ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என மல்லிகா டீச்சர் சொல்லச் சொல்ல, அந்த அசாம் குழந்தைகள் திக்கித்திணறித் தமிழ் படித்த அழகை ஓர் ஓரமாக நின்று மகிழ்ச்சியுடன் ரசித்தோம். பாடம் முடித்து மல்லிகா டீச்சர் நம்மிடம் வந்து, ‘‘இவங்களெல்லாம் ரொம்பப் பாவம் சார்!’’ என்று பேச ஆரம்பித்த நொடியில் அந்த மகிழ்ச்சி கரையத் தொடங்கியது.

இவர்கள் வாழ்வு இப்படி சிதைபட்டிருக்கக்கூடாது!

‘‘இவர்களெல்லாம், பிழைப்புத் தேடி இங்கு வந்து தங்கி, பாக்குத் தோட்டங்களில் வேலை செய்யும் அசாம் மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள். இவர்களும் சொற்ப சம்பளத்துக்கு, பெற்றோர்களுடன் சேர்ந்து வேலை செய்து துன்பத்தில் உழன்றவர்கள்தான். இவர்களை அங்கிருந்து மீட்டுக்கொண்டுவந்து, அசாமில் எந்த வகுப்பு வரை படித்தார்களோ, அதிலிருந்து கற்பிக்க ஆரம்பிக்கிறோம். போன வருஷம் முழுக்கவே தமிழ்ல பாடம் எடுத்தோம். அவங்க ரொம்ப சிரமப்பட்டாங்க. இப்போ இங்கிலீஷ் மீடியம் கொண்டுவந்துட்டோம். தமிழ்ப் பாடத்தை மட்டும்தான் இப்போ தமிழ்ல படிக்கிறாங்க.  மூன்று வருஷம் இங்கே கல்வி கொடுத்து, படிப்பின்மீது ஆர்வத்தையும் ஆசையையும் உருவாக்கி, ரெகுலர் பள்ளியில் சேர்த்துவிடுவதுதான் எங்களுடைய புராஜெக்ட். ஆனால், அது அவ்வளவு சாதாரணமான காரியம் இல்லை.

‘வாகை சூடவா’ படத்தில் செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக இருக்கும் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக்கொடுக்கப் பாடுபடுவாரே விமல்... அதேபோலத்தான் எங்களுடைய ஒவ்வொருநாளும் கழிகிறது. ஆரம்பத்தில் இவர்களின் பெற்றோர்கள் இவர்களைப் படிக்க விடவேமாட்டார்கள்.இந்தக் குழந்தைகள் மூலம் கிடைக்கும் 130 ரூபாய்தான் அவர்களுக்கு முக்கியம். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அந்த 130 ரூபாயைச் சொந்த மண்ணில் சம்பாதிக்க வழியில்லாமல்தான் தங்களின் சொந்தம், பந்தம், வீடு, வாசல் எல்லாவற்றையும் துறந்து அகதியைப் போல இங்கே வந்து அல்லல்படுகிறார்கள்.

அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடிப் புரியவைத்து ஒரு வழியாகச் சம்மதம் வாங்கிவிடுவதுகூட பெரிய வேலை இல்லை. அதன்பிறகுத் தினமும் இந்தக் குழந்தைகளை இங்கு கூட்டிவருவதுதான் மாபெரும் காரியம். ஒரு சில பிள்ளைகளைத் தவிர மற்றவர்கள், நாங்கள் போனால்தான் கிளம்புவார்கள். சிலர் நாங்கள் போய் நிற்கும்போதுதான் பல் தேய்க்க ஆரம்பிப்பார்கள். இன்னும் சிலர் அப்போதுதான் தூங்கி எழுவார்கள். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு சிரித்த முகத்துடன் அவர்களைக் கிளப்பிக் கொண்டுவர வேண்டும். கொஞ்சம் கோபப்பட்டாலும் போச்சு... வரமாட்டேன் என்று ஓடிவிடுவார்கள்’’ என்ற மல்லிகா டீச்சரின் குரலில் ரிதம் மாறுகிறது.

இவர்கள் வாழ்வு இப்படி சிதைபட்டிருக்கக்கூடாது!

‘‘இவர்களெல்லாம் படிக்கத்தெரியாதவர்களோ, படிக்க விரும்பாத மக்குப் பிள்ளைகளோ கிடையாது. அசாமில் அவரவர் ஊர்களில் தங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சிபொங்க பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்தவர்கள்தான். முக்கால்வாசிப் பேர் ரொம்ப நல்லா படிக்கிறவங்க. முகமது குத்புதீன் ஆறாவது வரை அசாம்ல படிச்சிருக்கான். இங்க வந்து ரெண்டு மாசம்தான் ஆகுது. அங்கே ரொம்ப நல்லா படிக்கிற பையனாம். அவனுக்கு அங்கே அவ்வளவு ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களாம். ஹிந்தில ரொம்ப அழகா பாடுவான். நான்காவது படிக்கும் ஜமீனா. அவ ரொம்ப டேலன்ட். ரொம்ப அழகா டான்ஸ் பண்றா. இங்க இருக்கும் ஒவ்வொருத்தருக்குள்ளும் அவ்வளவு திறமைகள் இருக்கு; அவ்வளவு சோகமும் இருக்கு.  அவங்களுடைய அழகான உலகத்தைப் பறிகொடுத்துட்டு இங்க வந்திருக்காங்க, கண்டுக்காம விட்டுட்டா பாழாப்போயிருவாங்க. அவங்களை வாரியணைச்சு ஆதரவு கொடுக்கணுமே தவிர, கோவப்படக்கூடாது’’ என்ற மல்லிகா டீச்சர், முகமது குத்புதீனை அழைத்து நமக்காகப் பாடச்சொன்னார்.

பால் வடியும் முகத்துடன் எழுந்த அவன், அழகுக் குரலெடுத்து ‘தில்தேரே...’ என்று பாடிய காதல் பாடலில், அடைக்க வழியில்லாமல் வழிந்தது மொழியைக் கடந்த சோகம். நம் தாய்மொழியான தமிழை அவர்கள் படிக்கிறார்கள் என்று நாம்கொள்ளும் சந்தோஷத்துக்குள், அந்தக் குழந்தைகள் தங்கள் தாய்மொழியையும் தாய்மண்ணையும் தொலைத்துத் திண்டாடும் துயரம் ஒளிந்திருக்கிறது. இவர்கள் வாழ்வு இப்படிச் சிதைபட்டிருக்கக் கூடாது!

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய்

‘‘அரவணைக்க நாங்கள் இருக்கிறோம்!’’

துபோன்ற பள்ளிகள் எங்கெங்கு செயல்படுகின்றன என்று தொழிலாளர் ஆணைய அதிகாரிகளிடம் விசாரித்தோம். ‘‘சென்னை, காஞ்சிபுரம், கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய 15 மாவட்டங்களில் இந்த NCLP (National Child Labour Project Scheme) இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்றபடி பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. குழந்தைத் தொழிலாளராக யார் இருந்தாலும் அவர்களை மீட்டுப் பயிற்சி கொடுப்பதுதான் எங்களுடைய பிரதான நோக்கம். இதில் வட இந்தியக் குழந்தைகள், நம் மாநிலக் குழந்தைகள் என்ற பாகுபாடு இல்லை. எல்லோருக்கும் மதிய உணவு, இலவச நோட்டு புத்தங்கள், உதவித்தொகை உள்ளிட்ட அத்தனை சலுகைகளும் வழங்கப்படுகின்றன. சென்னையிலும், திருப்பூரிலும் உள்ள பயிற்சி மையங்களில் வடஇந்தியத்  தொழிலாளர்களின் குழந்தைகள் அதிக அளவில் இருப்பதால், அங்கெல்லாம் ஹிந்தியும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சி மையங்களைப் பொறுத்தவரையில், ‘பாடம்... பாடம்...’ என்று குழந்தைகளை இறுக்குவது கிடையாது. இங்கே இருப்பவர்கள் எல்லோரும் மனதளவில் நொறுங்கிப்போனவர்கள். அவர்களுக்கு ’ஆக்டிவிட்டி’ முறையில்தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. வட இந்தியக் குழந்தைகள் அதிகம் உள்ள இடங்களில், தேவைக்கேற்ப ஹிந்தி தெரிந்த ஆசிரியர்களைப் பணியமர்த்துவோம். சொந்த மண்ணையும் மொழியையும் பிரிந்து இங்கே வந்து சித்ரவதை அனுபவிக்கும் குழந்தைகளை அரவணைக்க நாங்கள் இருக்கிறோம். அப்படியான குழந்தைத் தொழிலாளர்களை யார் எங்கு பார்த்தாலும் 1098 என்ற எண்ணுக்கு அழைத்தால் அந்தக் குழந்தைகளை மீட்டு, அவர்களுக்குத் தேவையான கல்வியைக் கொடுப்போம்’’ என்கிறார்கள், கருணையும் நம்பிக்கையும் நிறைந்த குரலில்.