Published:Updated:

கல்வி நிறுவனத்தில் களைகளா?

கல்வி நிறுவனத்தில் களைகளா?

பிரீமியம் ஸ்டோரி

ல்வியோடு ஒழுக்கத்தையும் நேர்மையையும் சொல்லி வளர்க்கவேண்டிய கல்வி நிறுவனங்களே ஊழலில் ஊறிப்போவதைவிடவும் துயரம் வேறில்லை. ஏற்கெனவே பல பல்கலைக்கழக ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்து, தமிழகம் தலைகுனிந்து நிற்கும்போது, அடுத்த அதிர்ச்சியாக வந்திருக்கிறது, அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்த முறைகேடு மற்றும் ஊழல்.

கல்வி நிறுவனத்தில் களைகளா?



ஆசியாவிலேயே தொழில்நுட்பக் கல்விக்காகச் செயல்படும் மிகப்பெரிய பல்கலைக்கழகம், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுடன், மாபெரும் பொறியியல் பல்கலைக்கழகமாக உயர்ந்தது அண்ணா பல்கலைக்கழகம்.

தற்போது, இத்தனை பெருமைகளையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது, ‘மறுமதிப்பீட்டு முறைகேடு மற்றும் ஊழல்’. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் பருவத் தேர்வுகளில் மறுமதிப்பீட்டுக்காக சுமார் மூன்று லட்சம் மாணவ மாணவியர் விண்ணப்பித்தனர். தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் கூடுதல் மதிப்பெண்கள் எதிர்பார்த்தவர்கள் இந்த மூன்று லட்சத்தில் அடக்கம்.

மறுமதிப்பீட்டுக்குப் பிறகு, 73,733 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். 16,636 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தோல்வியடைந்தவர்களைத் தேர்ச்சி பெற வைக்க ஒரு தொகை; ஏற்கெனவே, தேர்ச்சி பெற்றவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க இன்னொரு தொகை என்று கையூட்டு வாங்கிக்கொண்டு பல்கலைக்கழகத்தின் மாண்பையே சவக்குழிக்குள் தள்ளிப் புதைத்திருக்கிறது ஒரு கூட்டம். இந்த அநீதிக்குத் துணைபோனவர், ஒட்டுமொத்தப் பல்கலைக்கழகத்துக்கும் தேர்வை நடத்தும் தலைமைத் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி.

தங்கள் கல்லூரியில் அதிக எண்ணிக்கையில் மாணவ மாணவியரின் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றால் தேர்ச்சி விகிதம் கூடுதலாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், தனியார் கல்லூரிகள் பலவும் இந்த ஊழல் அதிகாரிகளைத் தங்களின் வசதிக்காக வளைத்திருக்கின்றன.

மதிப்பீடுகளைக் கற்றுத்தர வேண்டிய கல்வி, மறுமதிப்பீட்டு ஊழலில் சிக்கித் தவிக்கும் நிலை அவலத்திலும் அவலம். விடைத்தாள்கள் திருத்துவதில்  மனிதத் தவறுகள் நடக்கலாம் என்ற நிலையில்தான் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கப்படுகிறது. ஆனால் அதையும் பயன்படுத்தி சிலர் முறைகேட்டில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத குற்றம். அதேநேரத்தில், வெறுமனே ஆதங்கப்பட்டோ குற்றம்சாட்டியோ மட்டும் பயனில்லை. விடைத்தாள்களைத் திருத்தும் பொறுப்பை மனிதர்களிடமிருந்து கணிப்பொறிக்கு மாற்றுவது போன்ற சாத்தியங்களை யோசிப்பதும் அவசியம். இதனால் தவறுகளைக் குறைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது; முறைகேடுகளைத் தடுப்பதற்கும் சாத்தியமிருக்கிறது.

எதிர்கால நோக்கில் சிந்திப்பதுதான் கல்வியின் நிகழ்காலத்தையும் காப்பாற்றும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு