Published:Updated:

`அவரது கனவுகளை நனவாக்குவோம்!' - பாரதி படித்த வகுப்பறையில் மாணவர்கள் உறுதியேற்பு

`அவரது கனவுகளை நனவாக்குவோம்!' - பாரதி படித்த வகுப்பறையில் மாணவர்கள் உறுதியேற்பு
`அவரது கனவுகளை நனவாக்குவோம்!' - பாரதி படித்த வகுப்பறையில் மாணவர்கள் உறுதியேற்பு

மகாகவி பாரதியாரின் 137-வது ஆண்டு பிறந்த தினத்தையொட்டி, நெல்லையில் உள்ள ம.தி.தா இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில், அவர் பயின்ற வகுப்பறையில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பாரதியார் பாடல்களைப் பாடி, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், சமூக சீர்திருத்தப் போராளி என பன்முகத் தன்மையுடன் செயல்பட்டவர், பாரதியார். சாமன்ய மக்களிடம்கூட சுதந்திர தாகத்தை ஊட்டும் வகையில் கவிதையாலும் உரைநடையாலும் விடுதலை உணர்வை ஊட்டியவர். தனது புலமையால் நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு எனக் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். 

தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்குத் தொண்டாற்றிய பாரதியின் நூல்கள் தமிழக அரசால் 1949-ம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. நாட்டிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியுடையது என்பது குறிப்பிடத்தகுந்தது. நாட்டுக்காகத் தன்னையே அர்ப்பணித்த மகாகவி பாரதியாரின் 137-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது 

அதையொட்டி, நெல்லையில் உள்ள ம.தி.தா இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் அவர் பயின்ற வகுப்பறையில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பாரதியார் படத்துக்கு மலர்தூவினார்கள். பின்னர் பாரதி பாடல்களைப் பாடிய மாணவர்கள் அவரது கனவை நிறைவேற்றுவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இது பற்றி ம.தி.தா பள்ளி மாணவர்கள் கூறுகையில், ``பாரதி படித்த பள்ளியில் நாங்கள் படிக்கிறோம் என்று நினைக்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் காலடி பதித்த மண்ணில் நாங்கள் இருப்பதே எங்களுக்குப் பெருமைக்குரியது. 

பாரதியார் பயின்ற வகுப்பறையை எங்கள் பள்ளி நிர்வாகம் `நாற்றங்கால்’ எனப் பெயரிட்டு மிகுந்த மரியாதையுடன் பாதுகாத்து வருகிறது. அந்த வகுப்பறையில் பத்தாம் வகுப்பு மாணவிகள் பயின்று வருகிறோம். அந்த வகுப்பறையின் முக்கியத்துவம் கருதி அங்கு படிக்கும் மாணவர்களாகிய நாங்கள் உள்ளிட்ட பாடம் நடத்த வரக்கூடிய ஆசிரியர்களும் வகுப்பறைக்கு வெளியிலேயே காலணிகளை கழற்றி வைத்துவிட்டே உள்ளே நுழைகிறோம். சாதி, மத வேறுபாடுகளைக் களைந்து அவரது பிறந்த தினத்தில் பெண்ணடிமைத்தனம் நீங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பாரதி கண்ட கனவுகளை நனவாக்க வேண்டும் என உறுதியேற்றுள்ளோம். அதை எங்கள் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்போம்’’ என்றார்கள்.