Published:Updated:

அதிகாரமிக்க பதவிகளில் இருக்கும் இவர்களுக்குள் இருக்கும் ஓர் ஒற்றுமை! - `ஸ்டீபெனியன்ஸ்'

அதிகாரமிக்க பதவிகளில் இருக்கும் இவர்களுக்குள் இருக்கும் ஓர் ஒற்றுமை! - `ஸ்டீபெனியன்ஸ்'
அதிகாரமிக்க பதவிகளில் இருக்கும் இவர்களுக்குள் இருக்கும் ஓர் ஒற்றுமை! - `ஸ்டீபெனியன்ஸ்'

நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரமிக்க பதவிகளில் இருக்கும் சிலருக்குள் ஓர் ஒற்றுமை. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ், சி.பி.ஐ யின் இயக்குநர் அலோக் குமார் வெர்மா, சி.ஏ.ஜி தலைவர் ராஜிவ் மெஹ்ரிஷி, கேபினெட் செயலாளர் பிரதீப் சின்கா, நிதி ஆயோக் சி.இ.ஓ அமிதாப் கந்த் எனப் பலருக்குள் இருக்கும் ஓர் ஒற்றுமை  `ஸ்டீபெனியன்ஸ்’

டெல்லியில் இருக்கும் புனித ஸ்டீபென்ஸ் கல்லூரியில் படித்த மாணவர்களைத்தான் ஸ்டீபெனியன்ஸ் எனக் குறிப்பிடுவார்கள். மேலே குறிப்பிடப்பட்டவர்கள் மட்டுமல்ல, இன்னும் பல முக்கியப் பதவிகளில் இருப்பவர்களும் இந்தக் கல்லூரியில் படித்தவர்கள்தாம். 

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மிகவும் பழைமையான கல்லூரிகளில் ஒன்றான இந்த ஸ்டீபென்ஸ் கல்லூரி 1881 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மிக  நீண்ட அலுமினிச் சங்கம் கொண்ட கல்லூரியாக இது கருதப்படுகிறது. இன்று மட்டுமல்ல சுந்தந்திர இந்தியாவில் பல அதிகாரிகள் இந்தக் கல்லூரியில் படித்தவர்கள்தாம். 

ஆங்கிலேய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்தக் கல்லூரி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உறுப்பினர்களால் வடிவமைக்கப்பட்டதாகும். கலை மற்றும் அறிவியலில் மிக முக்கியக் கல்லூரி ஆகக் கருதப்படும் இதில் படித்தவர்கள் இந்திய அரசியல் மற்றும் அதிகாரமிக்க பதவிகளில் அதிகம் இருந்துள்ளனர். 

இங்குப் படித்தவர்கள், இந்தியா நாடாளுமன்றத்தை அலங்கரித்துள்ளனர். பல மாநில சட்டசபைகளில் உறுப்பினர்களாக உள்ளனர். இது இன்று நேற்று தொடங்கியது அல்ல. கல்லூரி தொடங்கியது முதலே இங்குப் படித்து வெளிவருபவர்கள், உலக அரங்கில் பல முக்கியப் பொறுப்பில் இருந்துள்ளனர். 

இங்கு படித்த பலர் அரசியல் துறையிலும் சாதித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன் இங்கு வரலாறு பிரிவில் படித்தார். தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிபெற பெரிதும் உழைத்தவரும் அம்மாநில துணை முதல்வராகப் பதவியேற்றவருமான சச்சின் பைலட் இதே கல்லூரியில் படித்தவர்தான். நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்குப் படித்தவர்கள்.  

பொதுவாக சிவில் சர்வீஸ் தேர்வுகள் சாதிக்க விரும்பும் பலர் இந்தக் கல்லூரியில் சேர்ந்து படிப்பார்கள். சசி தரூர் அங்குக் கல்லூரியில் படித்த காலத்தில், அங்கு அரசியல் ஆர்வம் இல்லாமல்தான் மாணவர்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அப்போது பெரும்பாலான மாணவர்களில் கனவு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.எஃப். எஸ் ஆக இருக்கும். ஆனால், தற்போது பல அரசியல் பிரமுகர்களும் வருகிறார்கள். 1970 -களில் இந்தியாவில் அனைத்து அரசுத் துறை செயலாளர்களில் 3 -ல் இரண்டு பங்கு இந்த ஒரே கல்லூரியில் படித்தவர்கள்தாம் பணியாற்றியுள்ளனர். சர்வதேச நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ள 13 இந்தியர்களில் 4 பேர் ஸ்டீபெனியன்ஸ்தான். இத்தகைய சாதனைகளை தாங்கி நிற்கிறது இந்த 137 ஆண்டு பாரம்பர்யக் கல்லூரி.

Source: The Quint