Published:Updated:

தொலைதூரக் கல்வி… தமிழகப் பல்கலைக்கழகத்துக்கு தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் முன்மாதிரி… ஏன்?!

தொலைதூரக் கல்வி… தமிழகப் பல்கலைக்கழகத்துக்கு தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் முன்மாதிரி… ஏன்?!
தொலைதூரக் கல்வி… தமிழகப் பல்கலைக்கழகத்துக்கு தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் முன்மாதிரி… ஏன்?!

பல்கலைக்கழக மானியக் குழு (UGC), தொலைதூரக் கல்வி வழங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தமிழ்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில், சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. ஆனால், மிகக்குறைந்த மனித வளத்தைக்கொண்டுள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம், 2018 ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை அதிகளவிலான படிப்புகளுக்கு அனுமதி பெற்று அசத்தியுள்ளது. 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நூற்றுக்கணக்கான பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இருந்தாலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் நடைமுறைகளைக் கடைப்பிடிக்காததால் உரிய அங்கீகாரமும், அனுமதியும் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், மிகக்குறைந்த பேராசிரியர்களைக் கொண்ட இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம், 42 தொலைதூரப் படிப்புகளுக்கு அனுமதி பெற்று ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து இந்திராகாந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் சென்னை மண்டல மையத்தின் மண்டல இயக்குநர் கிஷோர், ``நாங்கள் எந்த நிலையிலும் பாடத்திட்டங்களை தயாரிப்பதிலும், பயிற்சி வழங்குவதிலும் சமரசம் செய்துகொள்வதில்லை. சரியான நேரத்தில் வகுப்புகளையும் தேர்வுகளையும் நடத்துகிறோம். இந்தியாவில் மற்ற பல்கலைக்கழகங்களில் இல்லாத பல்வேறு படிப்புகளையும், பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம். வர்த்தக நோக்கத்தில் செயல்படாமல் மாணவர்களுக்குத் தரமான படிப்பை வழங்குவதிலேயே அதிகளவில் கவனம் செலுத்துவதால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட படிப்புகளை நடத்த எங்களது பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி வழங்கியிருக்கிறது" என்றார். 

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு 56 மண்டல மையங்களும், 3,000 கல்வி மையங்களும் உள்ளன. பணிபுரிபவர்கள், பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாதவர்கள், குடும்பப் பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் `இக்னோ’வில் சேர்ந்து பயன்பெறலாம். தமிழ்நாட்டில் மண்டல அலுவலகம் எழும்பூரில் உள்ளது. தற்போது முதுநிலை, இளநிலை, டிப்ளோமா, முதுநிலை டிப்ளோமா, சான்றிதழ் படிப்புகளுக்கான சேர்க்கை நடை பெற்று வருகிறது. இதற்கு 15.1.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளாக ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, சமூகப் பணியியல், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், இந்தி, உளவியல், கணினி, கிராமப்புற வளர்ச்சி, சுற்றுலா, தத்துவவியல், சமூகவியல், நூலகம் மற்றும் தகவல் அறிவியல், மானுடவியல், இயற்பியல், வேதியியல், லைஃப் சையின்ஸ், மற்றும் கணக்கு போன்ற பாடங்கள் உள்ளன. பாலிடெக்னிக் டிப்ளோமா முடித்து வேலையில் இருப்போர் அல்லது மேற்படிப்பு படிக்க விரும்புகிறவர்கள் பட்டப்படிப்பில் சேரலாம். 

பிற தொலைதூர படிப்பு கல்வி நிறுவனங்களை விட இக்னோவில் என்ன சிறப்பு என்பது குறித்து மண்டல இயக்குநர் கிஷோரிடம் கேட்டோம், ``இங்கு இந்தியாவில் வேறு எந்தப் பல்கலைக்கழகங்களும் வழங்காத சான்றிதழ் படிப்புகள் ஏராளமாக உள்ளன. இதில் பேரிடர் மேலாண்மை, வணிகத்திறன், அரசு சாரா நிறுவன மேலாண்மை, சுற்றுலா, செயல்பாட்டு ஆங்கிலம், நுகர்வோர் பாதுகாப்பு, மனித உரிமைகள், தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி தொழில்நுட்ப மேலாண்மை, உணவும் ஊட்டச்சத்தும், ஊட்டச்சத்து மற்றும் குழந்தை பராமரிப்பு, சைபர் சட்டம் என ஏராளமான படிப்புகள் உள்ளன. 

இங்கு படிப்பவர்கள் அரசு, அரசு சாரா நிறுவனங்களில், தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புபெற தகுதி உடையவர். கல்லூரி மாணவர்கள் சான்றிதழ் படிப்பைப் படித்து கூடுதல் தகுதியை வளர்த்துக்கொள்ளலாம். இங்குத் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் படிக்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனையும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பள்ளிப் படிப்பை (10+2) முடிக்காதவர்கள், ஆனால், 18 வயது நிரம்பியவர்கள் இக்னோவில் பட்டப்படிப்பு ஆயத்த பாடம் (6 மாதம்) படிப்பு மூலம் இக்னோவில் B.A, B.Com, BSW, BTS படிப்பைத் தொடரலாம். ஆயத்த பாடத்தை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலலாம். சி.ஏ, ஏ.சி.எஸ், ஐ.சி.டபிள்யூ.ஏ படிக்கும் மாணவர்களுக்கெனச் சிறப்பு பி.காம் படிப்பு இக்னோவில் வழங்கப்படுகிறது” என்றார்.

சென்னை மண்டலத்தின் கீழ் சென்னை, திருவள்ளுர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, மற்றும் பாண்டிச்சேரி ஆகிய நகரங்களில் இக்னோ மையங்கள் செயல்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு, இக்னோ மண்டல மையம், பெரியார் திடல், 84/1, ஈ.வி.கே சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை -600007. தொலைபேசி எண்கள் 044-26618438/26618039 மின்னஞ்சல்-rcchennai@ignou.ac.in வழியே தொடர்புகொள்ளலாம்.