Published:Updated:

8 ஆண்டுகளாக இழப்பீடு இல்லை! - வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தை ஜப்தி செய்ய முயன்ற நீதிமன்ற ஊழியர்கள்!

8 ஆண்டுகளாக இழப்பீடு இல்லை! - வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தை ஜப்தி செய்ய முயன்ற நீதிமன்ற ஊழியர்கள்!
8 ஆண்டுகளாக இழப்பீடு இல்லை! - வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தை ஜப்தி செய்ய முயன்ற நீதிமன்ற ஊழியர்கள்!

வேலூர் அருகே தனியார் இடத்தை அபகரித்து அரசுப் பள்ளி கட்டிய வழக்கில் இழப்பீடு வழங்காததால், முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி. இவரின் மனைவி காஞ்சனா. அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் காஞ்சனாவுக்கு சொந்தமான 30 சென்ட் நிலம் இருந்தது. இதை, கடந்த 2010-ம் ஆண்டு ‘புறம்போக்கு நிலம்’ என்று கூறி அதிகாரிகள் அரசுப்பள்ளி கட்டடம் கட்டினர். 

இதுதொடர்பாக, நிலத்தின் உரிமையாளரான காஞ்சான, வேலூர் கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 2011-ம் ஆண்டு, ‘அரசுப் பள்ளி கட்டிய நிலம் புறம்போக்கில் இல்லை. காஞ்சனாவுக்குச் சொந்தமானவை. எனவே, நிலத்தின் உரிமையாளரான அவருக்கு ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிடப்பட்டது.

கடந்த 8 ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவை மதிக்காத பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நிலத்தின் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட தரப்பினர் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதையடுத்து நீதிபதி வெற்றிச்செல்வி, ‘இழப்பீட்டுத் தொகைக்கு நிகராக மாவட்ட முதன்மை அலுவலகத்தில் உள்ள கணினிகள், நாற்காலிகள், கார் உட்பட்ட பொருள்களை பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு இன்று நீதிமன்ற ஊழியர்கள் வந்தனர். பொருள்களை ‘ஜப்தி’ செய்ய முயன்றனர். கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகிய இருவரும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீட்டுத் தொகை வழங்க இரண்டு வாரம் அவகாசம் கேட்டனர். இதையடுத்து, கெடு விதித்து நீதிமன்ற ஊழியர்கள் பொருள்களை ஜப்தி செய்யாமல் திரும்பிச் சென்றனர்.