Published:Updated:

பள்ளி மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்த மாணவி! - கதறிய தோழிகள்; வினையான ஸ்பெஷல் வகுப்பு

லோகேஸ்வரன்.கோ
பள்ளி மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்த மாணவி! - கதறிய தோழிகள்; வினையான ஸ்பெஷல் வகுப்பு
பள்ளி மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்த மாணவி! - கதறிய தோழிகள்; வினையான ஸ்பெஷல் வகுப்பு

வாணியம்பாடி அரசுப் பள்ளியில் இன்று காலை மாடியிலிருந்து குதித்து ப்ளஸ் ஒன் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கல்கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கை அமரன். இவரின் மகள் மகாலஷ்மி (15). ஆலங்காயம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் ஒன் படித்து வந்தார். அரையாண்டுத் தேர்வு விடுமுறையிலும், இப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ மாணவிகளுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி மகாலஷ்மி, புதிய கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள தனது வகுப்பறைக்குச் சென்றார். வகுப்பு தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன்னதாக, அவர் வகுப்பறையிலிருந்து வெளியே சென்றார். மீண்டும் அவர் வகுப்பறைக்குள் வரவில்லை. அடுத்த சில நிமிடங்களில், புதிய கட்டடத்தின் 3-வது மாடியிலிருந்து  கீழே குதித்தார் மகாலஷ்மி.

உயரத்தில் இருந்து தரையில் விழுந்ததில் மாணவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுத் துடிதுடித்து உயிரிழந்தார். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். பதறியடித்துக் கொண்டு மாணவியின் சடலத்துக்கு முன்பு திரண்டு கதறி அழுதனர். தகவலையறிந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஏராளமானோர் பள்ளியில் குவிந்தனர்.

ஆலங்காயம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், காதல் பிரச்னை அல்லது பாலியல் தொந்தரவு போன்ற விவகாரங்களால் மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டாரா என்கிற கோணத்தில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே, மாணவி உயிரிழப்பால் பள்ளியிலிருந்து மற்ற மாணவிகளைப் பெற்றோர் பதைபதைப்புடன் வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம், வாணியம்பாடியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.