Published:Updated:

அய்யய்யோ அக்ரி கல்லூரிகள்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அய்யய்யோ அக்ரி கல்லூரிகள்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்...
அய்யய்யோ அக்ரி கல்லூரிகள்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்...

அய்யய்யோ அக்ரி கல்லூரிகள்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்...

பிரீமியம் ஸ்டோரி

ரு புள்ளிவிவரம்... நடப்பாண்டில் மட்டுமே நாட்டிலுள்ள 800 பொறியியல் கல்லூரிகளை மூட முடிவுசெய்திருக்கிறது, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில். பொறியியல் கல்லூரிகளில் படித்து வெளிவருபவர்களில் வெறும் ஏழு சதவிகிதத்தினர் மட்டுமே முழுமையான பணித் திறன் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் நிலைமை இன்னும் மோசம். இங்குள்ள 1,80,000 இடங்களில், பாதியைக்கூட நிரப்பமுடியாமல் அதளபாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கின்றன, பொறியியல் கல்லூரிகள். சரி, எதற்காக இந்த விவரங்கள் என்கிறீர்களா? இதே நிலைமை இன்னும் சில ஆண்டுகளில் தனியார் வேளாண்மைக் கல்லூரிகளுக்கு வரலாம். ஆம், கோடிகளில் கொள்ளையடித்த ‘கல்வித் தந்தை’களின் அடுத்த குறி வேளாண்மை படிப்புமீது திரும்பிருக்கிறது. அதை எச்சரிக்கவே இந்தக் கட்டுரை!

சமீபத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு திருச்சி மாவட்டம் முசிறி அருகில் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ‘முசிறி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி’ நிர்வாகத்திலிருந்து ஒரு விண்ணப்பம் வந்திருந்தது. அதில், `எங்களுக்குச் சொந்தமான 110 ஏக்கர் நிலத்தில் விவசாயக் கல்லூரியைத் தொடங்க விரும்புகிறோம். தமிழக அரசின் தடையில்லாச் சான்று கிடைத்ததும், கட்டடப் பணிகளைத் தொடங்கிவிடுவோம். 45,000 சதுர அடியில் வகுப்பறைகளும் ஆய்வுக்கூடங்களும் கட்டப்பட உள்ளன. கட்டடம் கட்டுவதற்கு மூன்று மாதம் அவகாசம் தேவை’ என்று குறிப்பிட்டிருந்தனர். தொடர்ந்து பல்கலைக்கழகம் தரப்பில் கல்லூரிக்கான இடத்தை ஆய்வுசெய்து அளிக்கப்பட்ட அறிக்கையில், `விவசாய நிலம் 110 ஏக்கர் அங்குள்ளது. ஆனால், பூங்காவுக்கான இடம், வறண்ட நிலம், ஈரமான நிலம், தாவரவியல் பூங்கா, மூலிகைப் பூங்கா, வனப்பகுதி எனத் தனித்தனியாக எந்த ஒதுக்கீடும் செய்யப்பட வில்லை’ எனக் குறிப்பிடப்பட்டது.

அய்யய்யோ அக்ரி கல்லூரிகள்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்...

ஆனாலும், பல்கலைக்கழக நிர்வாகக் குழுக் கூட்டத்தில், ‘புதிய கல்லூரிக்கு ஒப்புதல் அளிப்பது’ என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது. அப்போதும், விட்டுக்கொடுக்காத பல்கலைக்கழகப் பதிவாளர் தரப்பு, `110 ஏக்கரில் கல்லூரிக் கட்டடம் அமையவில்லை. அங்கிருந்து ஐந்து கி.மீட்டர் தொலைவில் கட்டப்பட்டு வருகிறது. அந்தக் கட்டடம், புதிய வேளாண் கல்லூரிக்கு ஏற்றதாக இல்லை; ஆய்வகம் இல்லை. விரிவுரையாளர் ஹாலில் 36 மாணவர்கள் மட்டுமே அமர முடியும். எல்.சி.டி வசதி இல்லை. நூலகத்தில் 300 பழைய புத்தகங்களே உள்ளன. விடுதி வசதி இல்லை. புதிய கல்லூரியை இயக்குவது சாத்தியம் அல்ல’ எனத் தெளிவாக அறிக்கை அளித்துவிட்டது. 

ஆனாலும், புதிய கல்லூரிக்கு அனுமதி கொடுப்பதற்காகத் திரைமறைவில் காய் நகர்த்தி வருகின்றனர், வேளாண் துறை உயர் அதிகாரிகள். `இந்தக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்தாக வேண்டும்’ என உத்தரவு தோரணையில் கூறியிருக்கிறார், சேலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க-வின் அதி முக்கியப் புள்ளி ஒருவர்.

“பொறியியல் கல்லூரிகளின் மீதிருந்த மோகம் குறைந்ததால், வேளாண் கல்லூரிகளின் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளனர், கல்வி முதலாளிகள் சிலர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட புதிய வேளாண் கல்லூரிகள் தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் தொடங்கப்பட்டிருக்கின்றன. `வேளாண் படிப்புகளுக்கு மவுசு’ என்று விளம்பரம் செய்துவிட்டு, லட்சக்கணக்கில் வசூலிக்கின்றனர். வேளாண்மைத் துறையின் உயர் அதிகாரிகள் சிலரும் இதற்கு உடந்தை. இதனால் மாணவர்களின் எதிர்காலம் வீணாகப்போகும்” என்று ஆதங்கப் பட்டார் உயர்கல்வித் துறை அதிகாரி ஒருவர்.

அய்யய்யோ அக்ரி கல்லூரிகள்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்...

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் தரப்பில் பேசிய அதிகாரி ஒருவர், “தமிழ்நாட்டில் 15 அரசு வேளாண் கல்லூரிகளும் 26 தனியார் வேளாண் கல்லூரிகளும் செயல்படுகின்றன. பி.எஸ்சி (விவசாயம்), தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்ப்பு, வனவியல், வேளாண் பொறியியல், பி.டெக் வனவியல் எனப் பல துறைகள் அவற்றில் இருக்கின்றன. இக்கல்லூரிகள் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றன. விவசாயத்தில் இந்தியாவுக்கே முன்னோடி பல்கலைக்கழகமாக இருக்கிறது கோவை வேளாண் பல்கலைக்கழகம். இதன்கீழ் செயல்படும் 15 அரசுக் கல்லூரிகள் தரமானவை. ஆனால், 26 தனியார் கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதில் மூன்று கல்லூரிகளைத் தவிர, 23 கல்லூரிகள் கடந்த பத்தாண்டு களில் தொடங்கப்பட்டவை” என்றார்.

இதுகுறித்து பேசிய கல்வியாளர் ‘ஆனந்தம்’ செல்வகுமார், “உண்மை யில் பத்து ஆண்டுகளில் 26 கல்லூரிகளைத் தொடங்க வேண்டிய அவசியமும் தேவையும் இங்கு இல்லை. பட்டதாரிகளை உருவாக்கக்கூடிய தகுதியான பாடத்திட்டங்களை வைத்திருக்கி றோமா என்பதைக் கண்காணிக்கக் கூடிய சிஸ்டம்கூட நம்மிடம் இல்லை. இப்போதே தனியார் வேளாண் கல்லூரிகளில் படித்த பட்டதாரிகள் பலர் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். வேளாண் கல்லூரிகளில் படித்து வரக் கூடியவர்களில் பத்து சதவிகிதம் பேர் மட்டுமே அரசு வேலைகளுக்குச் செல்கின்றனர். மற்றவர்கள் சம்பந்தமே இல்லாத துறைகளில் பணிபுரிகின்றனர். `அக்ரி படித்தால் அரசு வேலை’ என்ற கிளப்பிவிடப்பட்ட கவர்ச்சி வலைதான், தகுதியில்லாத புதிய கல்லூரிகளுக்கான கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது” என்றவர் சில புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அய்யய்யோ அக்ரி கல்லூரிகள்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்...

``இந்தியாவில் வேளாண் துறைமூலம் 42 சதவிகிதம் பேரும், தொழில் துறைமூலம் 23 சதவிகிதம் பேரும், சேவைத் துறைமூலம் 33 சதவிகிதம் பேரும் வேலை பெற்றுள்ளனர். 42 சதவிகிதம் பேருக்கு வேலை கொடுத்துள்ள வேளாண் துறையின்மூலம் கிடைக்கப்பெற்ற நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி 15.4 சதவிகிதம். ஆனால்,  33 சதவிகிதம் மட்டுமே வேலை வாய்ப்பைக் கொடுத்த சேவைத் துறை மூலம் கிடைக்கப்பெற்ற ஜி.டி.பி வளர்ச்சி 48 சதவிகிதம். அதாவது, வேளாண் துறையில் 42 சதவிகிதம் பேர் வேலைபார்த்தும் 15.4 சதவிகித வளர்ச்சிதான் கிடைத்துள்ளது. இதன்மூலம் அந்த வேலை, உற்பத்தித் திறனோடு நடக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். காரணம், அந்தத் துறையில் இருக்கக்கூடியவர்களுக்குப் போதிய பயிற்சியும் தொழில்நுட்பத் திறமையும் இல்லை. யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை; இயற்கை, பருவநிலை மாற்றங்கள் சார்ந்தும் ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. இப்படியான சூழலில் வேளாண் பொறியியல் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கிறதா, இதுவரைக்கும் படித்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசு வேளாண் கல்லூரிகளைத் தவிர்த்து, தனியார் வேளாண் கல்லூரிகளில் தகுதியான பட்டதாரிகளை உருவாக்கக்கூடிய வாய்ப்புகள் இல்லை. ஒரு கல்லூரியை உருவாக்குவதற்கு முன்பு, அடுத்த இருபது ஆண்டுகளில் என்ன மாதிரியான வளர்ச்சி இருக்கும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப கல்லூரிகளை உருவாக்க வேண்டும். அரசாங்கங்கள் ஊழல் செய்யவும், தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணக் கொள்ளை அடிக்கவும் புற்றீசல்போல வேளாண் கல்லூரிகள் உருவாவது ஆரோக்கிய மானது அல்ல” என்றார் எச்சரிக்கை உணர்வுடன்.

புதிய கல்லூரிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்துள்ள முசிறி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டோம். நம்மிடம் பேசிய கல்லூரியின் முதல்வர் பாலசுப்ரமணியன், “சேர்மனிடம் பேசிவிட்டு உங்களைத் தொடர்பு கொள்கிறேன்’’ என்றார். இதுதொடர்பான விளக்கம் அளித்தால் அதையும் வெளியிட தயாராக இருக்கிறோம்.

அய்யய்யோ அக்ரி கல்லூரிகள்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்...

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குமாரிடம் பேசினோம். ``தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளோம். அதன்படி, புதிய பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை. ஏற்கெனவே, அனுமதி கொடுக்கப்பட்டுள்ள கல்லூரிகளின் குறைபாடுகளை ஆய்வுசெய்து, சரிசெய்ய அறிவுறுத்தியுள்ளோம். எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் கல்லூரிகளை ஆய்வுசெய்ய டீன் ஒருவர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வை நடத்திவருகின்றனர். தரக் கட்டுப்பாட்டுக்கென்றே தனிக் கமிட்டியும் இருக்கிறது. தேர்வுகளை நாங்கள்தான் நடத்துகிறோம். குறைபாடுகள் இருந்தால், அதைச் சரிசெய்வது குறித்தும் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்” என்றார்.

வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் பேசினோம். `கஜா பாதிப்புப் பணிகள் தொடர்பாக, தீவிர ஆய்வில் இருக்கிறேன். இதுகுறித்து பிறகு பேசுவோம்’ என்றதோடு முடித்துக் கொண்டார்.

பெற்றோர்கள்... மாணவர்கள் உஷார்!

- ஆ.விஜயானந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு