Published:Updated:

`கரூரையே தாண்டியதில்லை; இப்போ வெளிநாட்டுக்குப் போறேன்!’ - கண்கலங்கும் அரசுப் பள்ளி மாணவன்

`கரூரையே தாண்டியதில்லை; இப்போ வெளிநாட்டுக்குப் போறேன்!’ - கண்கலங்கும் அரசுப் பள்ளி மாணவன்
`கரூரையே தாண்டியதில்லை; இப்போ வெளிநாட்டுக்குப் போறேன்!’ - கண்கலங்கும் அரசுப் பள்ளி மாணவன்

``நான் ஏழ்மையான வீட்டுப் பையன். நான் இதுவரை கரூர் மாவட்டத்தைத் தாண்டி எங்கும் போனதில்லை. ஆனால், அரசுப் பள்ளியில் படித்த எனக்கு, ஆசிரியர்கள் தந்த ஊக்கத்தால் இப்போ ஸ்வீடன், பின்லாந்து வரை செல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு. வாழ்நாளுக்கும் மறக்கமுடியாது வாய்ப்பு இது" என்று நெகிழ்ந்துபோய் சொன்னார் அரசுப் பள்ளி மாணவரான சதிஷ்குமார்.


 

தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் தனித்திறனுடன் சிறந்து விளங்கும் மாணவர்களை, மேலை நாடுகளுக்கு வருடாவருடம் கல்விப் பயணம் அழைத்துச்செல்வது வாடிக்கை. அந்த வகையில், தமிழகத்திலிருந்து 50 மாணவர்கள் நடப்புக் கல்வியாண்டில் தேர்வு செய்யப்பட்டு, ஜனவரி 21-ல் சென்னையிலிருந்து புறப்பட்டு, பின்லாந்தின் ஹெல்சிங்கி நகருக்குச் செல்கின்றனர். அங்குத் தொழிற்சாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆய்வகங்கள், ரோபோடிக் லேப், அறிவியல் மையங்களைப் பார்வையிடுகிறார்கள். பின்னர், ஜனவரி 26-ல் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்று கலாசார அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகிறார்கள். மேலும், அங்குள்ள பள்ளிகளில் கற்பிக்கும் முறைகள், அறிதல், மாணவர்களுடன் கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர். ஜனவரி 31 சென்னை திரும்புகின்றனர். 


 

இதில் கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ம் வகுப்பு பயிலும் சதிஷ்குமார் என்ற மாணவர் தேர்வாகியுள்ளார். இம்மாணவர் கடந்த 4 ஆண்டுகளாக தனது வழிகாட்டி ஆசிரியர் தனபாலின் வழிகாட்டல் மூலம், பள்ளி இளம் விஞ்ஞானிகள் குழுவில் இணைந்து, சூரிய சக்தியில் இயங்கும் நவீனக் கழிவறை, நீர்த்தாங்கிகள் செறிவூட்டல், பாதை மாறிய தேனீக்களால் பாதித்த விவசாயம்  ஆகிய கண்டுபிடிப்புகளுடன் ஆய்வுக் கட்டுரையை, பள்ளிக் கல்வித்துறை, தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு, அறிவியல் நகரம், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா ஆகிய துறைகளின் கீழ் நடைபெற்ற மாவட்டம், மாநிலம், தென்னிந்திய, தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்று முதல் பரிசாக தங்கப் பதக்கம், கோப்பை, பாராட்டுச் சான்று பெற்றுள்ளார். தமது அறிவியல் கண்டுபிடிப்பு மூலம் அறிவியல் கோட்பாடுகளை புரிந்து படித்து, பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று தற்போது மேலை நாடுகளுக்குக் கல்விப் பயணமாகப் பின்லாந்து மற்றும் சுவீடன் செல்கிறார்.

 மேலை நாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா செல்லும் சதிஷ்குமாருக்கு அண்மையில் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. கரூர் தேவகி கார்மென்ட்ஸ் உரிமையாளர் அன்பரசர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவரை வாழ்த்தியதுடன், ரூ.7060 மதிப்புள்ள சுற்றுலா பை ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். ஊர்மக்கள் கலந்துகொண்டு, குக்கிராமத்தைச் சேர்ந்த சதிஷ்குமார் வெளிநாடுகளுக்குச் செல்வதை உச்சிமுகர்ந்து பாராட்டினர்.


 

இதுபற்றி, பேசிய மாணவர் சதிஷ்குமார், ``நான் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். எங்க பெற்றோர் கூலி வேலை பார்த்துதான் என்னைப் படிக்க வைக்கிறாங்க. நான் இதுவரை கரூர் மாவட்டத்தைத் தாண்டி போனதில்லை. ஆனா, இன்னைக்கு ஸ்வீடன், பின்லாந்து வரை செல்லக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். இதற்குக் காரணம், வழிகாட்டி ஆசிரியர் தனபால், தலைமை ஆசிரியர் தமிழரசன் எல்லாரும்தான். அப்துல்கலாம் அய்யா போல ஒரு விஞ்ஞானியாக வருவதுதான் என் லட்சியம். அதற்கான, முதல் அடிதான் இந்த வெளிநாட்டுக் கல்விப் பயண வாய்ப்பு!" என்று நெகிழ்ந்து போய் சொன்னார்.