Published:Updated:

``நெல்லையில் 99%; விருதுநகரில் 91.8% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர்” - முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்!

``நெல்லையில் 99%; விருதுநகரில் 91.8% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர்” - முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்!
``நெல்லையில் 99%; விருதுநகரில் 91.8% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர்” - முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்!

நெல்லை மாவட்டம் முழுவதும் 99 சதவிகிதம் ஆசிரியர்கள் பணிக்கு வந்ததாகவும், அதனால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை எனவும் முதன்மைக் கல்வி அதிகாரி பாலா தெரிவித்தார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த ஒருவார காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராடும் ஆசிரியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்பாவிட்டால், அந்த இடத்தை காலிப்பணியிடமாகக் கருதி, மாற்று ஆசிரியர்களை நியமிக்கப்போவதாக அரசு எச்சரித்தது. 

இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் இன்று பெரும்பாலான பள்ளிகளின் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினார்கள். இருப்பினும், நெல்லை தாலுகா அலுவலகத்தில், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்தார்கள். ஆனால், இன்றைய போராட்டத்தில் குறைவான ஆசிரியர்களே கலந்துகொண்டனர். இதனிடையே, பிப்ரவரி மாதத்தில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் தொடங்க இருப்பதால், அதற்கான ஏற்பாடுகள்குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பாலா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதன்மைக் கல்வி அதிகாரி பாலா, ``நெல்லை மாவட்டத்தில், தொடக்கத்தில் இருந்தே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டவில்லை. தற்போது, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்காததால், 99 சதவிகித ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டார்கள். அதனால், பள்ளிகளில் கற்பித்தல் தொடர்பாக எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. 

நெல்லை மாவட்டத்தில் 2000 -க்கும் அதிகமானோர் தற்காலிக ஆசிரியப் பணிக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டதால், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நெல்லை மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளனர். அந்த இடங்களில் மட்டும் தற்காலிகப் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

பிப்ரவரி 1 -ம் தேதி +2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது. அந்தப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். தற்போது, பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டதால், செய்முறைத் தேர்வுகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இன்று மாலைக்குள் போராட்டத்தில் ஈடுபடக்கூடிய அனைத்து ஆசிரியர்களுமே பணிக்குத் திரும்பிவிடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து அவர்கள் பணிக்கு வராவிட்டால், உயரதிகாரிகளின் ஆலோசனைப்படி அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.  

விருதுநகர் 

விருதுநகர் மாவட்டத்தில் ஜாக்டோ- ஜியோ போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் 91.8 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என மொத்தம் 963 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 10738 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கடந்த ஒருவாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பள்ளி ஆசிரியர்களே அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் போராட்டம் தொடர்ந்தது.

விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால் போராட்டத்தில் பங்கேற்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. மாவட்டத்தில் உள்ள 882 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை. மீதமுள்ள 9856 பேர் இன்று பணிக்கு திரும்பிவிட்டனர்.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறும்போது, போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் 23 பேர் பள்ளி ஆசிரியர்கள். எனவே அந்த 23 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்று உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 99 பேரும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 84 பேரும் பணிக்கு வந்துள்ளனர். தற்போது தற்காலிக பணிக்காக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அடுத்து 23 பேருக்கு பதிலாக தகுதியான பட்டதாரிகள் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர்'' எனத் தெரிவித்தார்.