Published:Updated:

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு! -சிக்கிக்கொண்ட முன்னாள் பதிவாளர், 6 பேர்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு! -சிக்கிக்கொண்ட முன்னாள் பதிவாளர், 6 பேர்
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு! -சிக்கிக்கொண்ட முன்னாள் பதிவாளர், 6 பேர்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில், போலி சான்றிதழ்கள் கொடுத்த ஊழியர்களைப் பணியமர்த்தியதாக எழுந்த புகாரில், முன்னாள் பதிவாளர் உள்பட 7 பேர்மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேலூரை அடுத்த சேர்க்காட்டில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. இதன் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 128 கலைக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகவும், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராகவும் அசோகன் என்பவர் பணிபுரிந்துவந்தார். இவர், கடந்த 2015-ம் ஆண்டு, போலி ஆவணங்களைத் தயாரித்து, 6 பேரை பல்கலைக் கழக ஊழியர்களாகப் பணியமர்த்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ஆட்சிமன்றக் குழு முன்னாள் உறுப்பினர் இளங்கோவன் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இளங்கோவன் முறையீடுசெய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் பதிவாளர் அசோகன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்படி, முன்னாள் பதிவாளர் அசோகன் மற்றும் அவரால் பணியமர்த்தப்பட்ட ஆனந்தபாபு, எழிலரசி, ஜெயந்தி, விஜயகிருஷ்ணன், தசரதன், அன்பரசன் ஆகிய 7 பேர்மீது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக, குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘‘போலி ஆவணங்கள் மூலம் ஊதியம் பெற்றது, அரசுக்கு பண இழப்பை ஏற்படுத்தியது, போலி சான்றிதழ்களைச் சமர்ப்பித்தது போன்ற பிரிவுகளின் கீழ் நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக வழக்குப்பதிவு செய்துள்ளோம்.  விசாரணைக்குப் பிறகு, முன்னாள் பதிவாளர் உள்பட 7 பேரையும் கைதுசெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது’’ என்று தெரிவித்தனர்.