Published:Updated:

`உரிமம் பெறவில்லை!’ - வேலூர் மாவட்டத்தில் 42 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

`உரிமம் பெறவில்லை!’ - வேலூர் மாவட்டத்தில் 42 பள்ளிகளுக்கு நோட்டீஸ்
`உரிமம் பெறவில்லை!’ - வேலூர் மாவட்டத்தில் 42 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

வேலூர் மாவட்டத்தில், தற்காலிக அங்கீகாரத்தைப் புதுப்பிக்காத 42 பள்ளிகளுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் 227 தனியார் மெட்ரிக் பள்ளிகள், 444 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், 41 மழலையர் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 42 மெட்ரிக் பள்ளிகள் தற்காலிக அங்கீகாரத்தைப் புதுப்பிக்காமல் உள்ளன. அந்தப் பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸ் கிடைத்த 15 நாள்களுக்குள், தற்காலிக அங்கீகாரம் பெறுவதற்கான, உரிய நடவடிக்கையை அப்பள்ளிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மேலும், உரிய தற்காலிக அங்கீகாரமின்றி செயல்படும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், மழலையர் பள்ளிகள் குறித்து ஆய்வு செய்து, அதன் விவரங்களை யூனியன் வாரியாக சமர்ப்பிக்கவும் முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். ‘‘பொதுவாக, தனியார் பள்ளிகள் இயங்க வேண்டுமெனில், கட்டட உறுதிச் சான்று, கட்டட உரிமம், தீத்தடுப்பு, சுகாதாரச் சான்று ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், பள்ளியில் மாணவர்களுக்கான எல்லா வசதிகளையும் ஏற்படுத்தியதற்கான சான்றிதழை தாசில்தாரிடம் பெற்றிருக்க வேண்டும்.

இதுதவிர, பள்ளி அமைந்திருக்கும் உள்ளாட்சி நிர்வாகத்திடம், பள்ளி கட்டடத்தின் திட்ட வரைபடத்தைச் சமர்ப்பித்து, டி.டி.சி.பி அனுமதி சான்று பெற வேண்டும். இந்த சான்று பெறாத பள்ளிகளுக்கு தற்காலிகமாக ஓராண்டுக்கான அங்கீகாரமும், டி.டி.சி.பி சான்று பெற்ற பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கான தற்காலிக தொடர் அங்கீகாரமும், கல்வித்துறை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அங்கீகாரத்தைப் புதுப்பிக்காத பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும்’’ என்று கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.