Published:Updated:

‘வெளியாட்களுக்குத் தடை!’ - ப்ளஸ் டூ பொதுத்தேர்வு மையங்களில் அதிரடி கட்டுப்பாடுகள்

‘வெளியாட்களுக்குத் தடை!’ - ப்ளஸ் டூ பொதுத்தேர்வு மையங்களில் அதிரடி கட்டுப்பாடுகள்
‘வெளியாட்களுக்குத் தடை!’ - ப்ளஸ் டூ பொதுத்தேர்வு மையங்களில் அதிரடி கட்டுப்பாடுகள்

நாளை தொடங்கும், ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, ``வெளியாட்கள் யாரும் தேர்வு மையத்திற்குள் நுழையக் கூடாது’’ என்பதைப் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை, பள்ளிக் கல்வித்துறை அதிரடியாகப் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான, ப்ளஸ் டூ பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர், அரக்கோணம், ராணிப்பேட்டை, வாணியம்பாடி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில், மொத்தம் 41,422 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக, மாவட்டம் முழுவதும் 169 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள 16 அறைகள் சீல் வைக்கப்பட்டதோடு, அங்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். தேர்வு நாளன்று, 44 வழித்தடங்கள் மூலமாகத் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாகத் தேர்வு மையத்திற்குள், வெளியாட்கள் நுழைவதைத் தடுக்க, அனைத்து தேர்வு மையங்களும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கிறது. முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், விடைத்தாள் சேகரிப்பாளர்கள், நிலையான படையினர், பறக்கும் படையினர் எனப் பல்வேறு குழுக்களாக ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்ப் பாடத்திற்கான தேர்வு நாளை நடக்கிறது. தேர்வு தொடங்குவதற்கு, சிறிது நேரத்திற்கு முன்பாக மாணவ, மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். சரியாக காலை 10 மணிக்கு வினாத்தாள்கள் வழங்கப்படும். முதல் 10 நிமிடம் கேள்வித்தாளை படிக்கவும், பின்னர் விடைத்தாளைப் பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடமும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தேர்வு 10.15 மணிக்குத் தொடங்கி மதியம் 12.45 மணிவரை நடைபெறும். தேர்வு நேரம் தொடங்கியதும் மாணவ, மாணவிகள் முதலில் தங்களுக்கு எந்தக் கேள்விக்குப் பதில் நன்றாகத் தெரியுமோ? அதை எழுதிவிடுங்கள். மற்ற கேள்விகளுக்கான பதில்களை, பின்னர் எழுத முயற்சிசெய்யுங்கள். தாங்கள் எழுதிய ஒரு சில விடைகளைக் கோடிட்டு அடிக்கும்போது, அந்த இடத்தில் ``மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது’’ என்று மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும். அங்குப் பதிவெண், பெயர் போன்றவற்றை குறிப்பிடக் கூடாது. விடைத்தாளில் எழுதிய அனைத்து விடைகளையும் முழுமையாக அடித்தால், அந்த நிகழ்வு `ஒழுங்கீனச் செயலாக’ கருதப்படும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தப்படுவதோடு, அடுத்தவரும் 2 பருவங்களிலும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேர்வுத் துறை எச்சரித்திருக்கிறது.

செல்போன் உட்பட எந்தவொரு தகவல் தொடர்பு மின்சாதனங்களையும், தேர்வு மையத்திற்குள் எடுத்துச் செல்லக் கூடாது. தேர்வு அறையில், காலணி மற்றும் பெல்ட் அணிந்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேரத்தைக் காட்டும் சாதாரண `வாட்ச்’ மட்டும் அணிந்துவரலாம். தேர்வு மையங்களிலிருந்து, முன்கூட்டியே வெளியேறக் கூடாது. அனுமதிக்கப்பட்ட நேரம் முழுவதும் தேர்வு மையத்திற்குள்தான் அமர்ந்திருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் தேர்வு மையத்தில் காப்பி அடிப்பது, மற்றவர்கள் விடைத்தாளைப் பார்த்து எழுவது போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டால், தேர்வு மையத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.