Published:Updated:

நாடோடியினக் குழந்தைகளைக் கொஞ்சிய நெல்லைக் கலெக்டர்! - அரசு காரில் வலம்வந்த மாணவிகள்

நாடோடியினக் குழந்தைகளைக் கொஞ்சிய நெல்லைக் கலெக்டர்! - அரசு காரில் வலம்வந்த மாணவிகள்
நாடோடியினக் குழந்தைகளைக் கொஞ்சிய நெல்லைக் கலெக்டர்! - அரசு காரில் வலம்வந்த மாணவிகள்

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ், நாடோடியினக் காலனிக்குச் சென்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், தனது காரில் ஏற்றி வலம் வந்தார். கலெக்டர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை நாடோடிச் சமுதாய மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பூங்கா நகரில் 128 நாடோடி இனக் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 38 குடும்பத்தினருக்கு முன்னாள் ஆட்சியர் ஜெயராமன் பட்டா வழங்கினார். அடுத்து ஆட்சியராகப் பணியாற்றிய கருணாகரன், 38 குடும்பத்தினருக்குச் சொந்தவீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுத்தார். மற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், தார்பாய் மற்றும் பிளாஸ்டிக் ஷீட் மூலம் ஷெட் அமைத்துக் குடியிருந்து வருகின்றனர். 

ஊசி, பாசி மணிகளை விற்பனை செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வசித்துவரும் இந்த மக்கள் வெயில் மற்றும் மழைக் காலங்களில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள். அதனால், அனைவருக்கும் அரசு சார்பாக சொந்த வீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுக்குத் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 

தொழில் நிமித்தமாக வெவ்வேறு இடங்களுக்குச் செல்வதால் இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளால் பள்ளிக் கல்வியைக்கூட படிக்க முடியாத நிலை இருந்து வந்தது. இவர்களுக்கு உதவும் வகையில், ராதாபுரம் நாங்குநேரி வட்டார பத்திரிகையாளர் சங்கத்தினர் கடந்த 10 வருடங்களாகப் பணியாற்றி வருவதுடன், முதியோர் பென்ஷன், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்டவை கிடைக்க உதவி செய்து வருகின்றனர். அத்துடன், 24 நாடோடியினக் குழந்தைகளைத் தத்தெடுத்து வள்ளியூர் அருகே கோட்டையடி பகுதியில் உள்ள உண்டு உறவிட தொடக்கப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்து வருகிறார்கள். 

இந்த ஆண்டு, பார்வதி, மாதவி ஆகிய இரு மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கிறார்கள். நெல்லை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த இரு பெண் குழந்தைகள் முதல் முறையாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் தகவல் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஷில்பா பிரபாகர்சதீஷ் கவனத்துக்குச் சென்றது. அதனால் அவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவும் அங்குள்ள பிற மாணவர்களையும் மக்களையும் சந்திக்கவும் இன்று நேரில் சென்றார். 

அதன்படி வள்ளியூர் பூங்காநகர் நாடோடியினக் குடியிருப்புக்குச் சென்ற ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ், அங்குள்ள குழந்தைகளிடம் உரையாடினார். அவர்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறார்கள். என்பதை ஆர்வமாகக் கேட்ட அவர், நல்ல முறையில் படித்தால் தன்னைப்போல உயர்ந்த நிலையை எட்ட முடியும் எனத் தெரிவித்தார். ஒவ்வொரு மாணவ மாணவிகளிடமும் தனிப்பட்ட முறையில் பேசி உற்சாகப்படுத்தியதுடன், கல்வி கற்பதன் அவசியத்தை எடுத்துக் கூறினார். பச்சிளம் குழந்தைகளைக் கையில் தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்தார். 

அந்தப் பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் இருந்த ஆட்சியரிடம், அப்பகுதி மக்கள், வீடு இல்லாததால் ஏற்படும் கஷ்டங்களை எடுத்துக் கூறினார்கள். அதனால் அரசு சார்பாக அனைவருக்கும் குடியிருப்பு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்த ஆட்சியர், அந்தப் பகுதிக் குழந்தைகளின் கல்வி வசதிக்காக உடனடியாக அங்கு அங்கன்வாடி, பாலர் பள்ளி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

பள்ளிக் குழந்தைகளிடம் கேள்விகளைக் கேட்டு பரிசுகளை அளித்து மகிழ்ந்த கலெக்டர் ஷில்பா பிரபாகர்சதீஷ், பின்னர், அந்தக் குழந்தைகளைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு அப்பகுதியை வலம் வந்தார். கலெக்டரின் காரில் ஏறியதால் மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்தனர், கலெக்டரின் நடவடிக்கையை அந்தச் சமூகத்தினரும் வெகுவாகப் பாராட்டியதுடன், தங்கள் குழந்தைகளைத் தொடர்ந்து படிக்க வைப்பதாக உறுதியளித்தனர். மாவட்ட ஆட்சியரின் மனித நேயம் மிகுந்த இந்தச் சம்பவம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.