Published:Updated:

`தேனிக்கு வருமா கேந்திரிய வித்யாலயா..?' -மாவட்ட ஆட்சியர் பதில்

`தேனிக்கு வருமா கேந்திரிய வித்யாலயா..?' -மாவட்ட ஆட்சியர் பதில்
`தேனிக்கு வருமா கேந்திரிய வித்யாலயா..?' -மாவட்ட ஆட்சியர் பதில்

தேனியில், கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்கப்பட வேண்டும் என்பது பல வருடக் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழகத்தில் நான்கு இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதில், தேனி மாவட்டம் இடம்பெறவில்லை என்பதால், தேனி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கேட்ட போது, “தேனியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்கப்பட வேண்டும் என்பது மக்களின் ஆசை மட்டுமல்ல, என்னுடைய ஆசையும்கூட. அதற்கான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. குறிப்பாக, நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது. டெல்லியில் இருந்து அதிகாரிகள் நேரடியாக வந்து ஆய்வுசெய்துவிட்டார்கள். தற்போது, இந்தியா முழுவதும் 50 இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் நான்கு இடங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுதொடர்பாக நான் நேரடியாக டெல்லிக்குத் தொடர்புகொண்டு பேசினேன். அடுத்த அறிவிப்பில், தேனி மாவட்டம் நிச்சயம் இருக்கும். வரும் அக்டோபர் மாதத்திற்குள், அடுத்த அறிவிப்பு வரலாம் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.

தமிழகத்தில், கோவை மாவட்டம் கிட்டாம்பாளையம், மதுரை மாவட்டம் இடையபட்டி, சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடி, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.