Published:Updated:

`பழைமையான கோயில்களில் தூய்மைப்பணி’ - அறந்தாங்கியில் களமிறங்கிய கல்லூரி மாணவிகள்!

`பழைமையான கோயில்களில் தூய்மைப்பணி’ - அறந்தாங்கியில் களமிறங்கிய கல்லூரி மாணவிகள்!
`பழைமையான கோயில்களில் தூய்மைப்பணி’ - அறந்தாங்கியில் களமிறங்கிய கல்லூரி மாணவிகள்!

அறந்தாங்கி அருகே, தொழுவங்காடு ஊராட்சிக்குட்பட்ட காயக்காடு கிராமத்தில் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் நூற்றுக்கணக்கான மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பழைமையான கோயில்களைத் தூய்மைப்படுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரத்தில் உள்ள நைனா முகமது கலை அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் கல்லூரி சார்பில் ஓர் ஊராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த ஊராட்சியில் உள்ள கிராமப் பொது இடங்கள், பழைமையான கோயில்கள், குளங்கள் ஆகியவற்றைப் புனரமைக்கும் பணியினை கல்லூரி மாணவிகள் மேற்கொள்கின்றனர். இந்த வருடம் கல்லூரி சார்பில் கல்லூரிக்கு அருகே உள்ள தொழுவங்காடு ஊராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு இங்குள்ள கோயில்கள், குளங்கள் ஆகியவற்றைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வுகளில் கல்லூரி முதல்வர் ராபர்ட் அலெக்ஸாண்டர், தாளாளர் முகம்மது பாரூக், மேலாளர் மாரிச்சாமி மற்றும் பேராசிரியர்கள் மற்றும் கிராமத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

 நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் காயத்திரி கூறும்போது, ``காயக்காடு கிராமத்தை நாட்டு நலப்பணித் திட்ட முகாம் மூலம் தத்தெடுத்து, அந்தக் கிராமத்தை முழுமையாகச் சீரமைக்கும் பணியினை மாணவிகளுடன் செய்து வருகிறோம். கடுமையான வெயில் சுட்டெரிக்கும் போதிலும், மாணவிகள் ஓய்வின்றி ஆர்வமுடன் தூய்மைப்பணியில் ஈடுபடுகின்றனர்.

தூய்மைப்பணி மட்டுமல்லாமல், மக்கள் தொகை கணக்கெடுத்தல், பள்ளி சீரமைத்தல், மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் முன்னெடுத்துள்ளோம். இந்த கிராமத்தில் பழைமையான கோயில்கள் தூய்மையின்றி செல்வதற்குச் சரியான வழியின்றி, கிடந்தது. மாணவிகளின் முயற்சியால், கோயிலை முழுமையாகத் தூய்மைப்படுத்தியுள்ளோம்" என்றார்.