+2 மாணவர்கள் பள்ளியிலேயே கல்வித்தகுதியை பதிவு செய்யலாம்: கல்வித்துறை இயக்குநர்

சென்னை: பிளஸ்-2 படித்துள்ள மாணவர்கள் தங்களது கல்வித் தகுதி மற்றும் வேலைவாய்ப்புக்கான பதிவுகளை அவரவர் பள்ளியிலேயே பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 8,53,355 மாணவர்கள் கலந்துக் கொண்டு தேர்வு எழுதினர். இத்தேர்வில் 7,04,125 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களது மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளிலேயே அவர்களது கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவுச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தங்களுடைய கல்வித் தகுதியை வேலைவாய்ப்பக இணைய தளம் வாயிலாக தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைந்து மேற்கொண்டுள்ளன.
வேலைவாய்ப்பகத்தில் தங்களது தகுதியினை பயின்ற பள்ளிகளில் பதிவு செய்ய விரும்பும் மாணவ, மாணவியர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பெற பள்ளிக்குச் செல்லும் பொழுது, தங்களது குடும்ப அட்டை மற்றும் சாதிச் சான்றிதழினை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், தங்களது குடும்ப அட்டையில் பதிவுதாரரின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்புக் கல்வித் தகுதியினை ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
தற்பொழுது புதியதாகப் பதிவு செய்ய விரும்புவோருக்கு, புதிய பதிவு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை உடனுக்குடன் வழங்கப்படும். மாணவர் மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் தங்களுடைய கல்வித் தகுதியை பள்ளிகளில் பதிவு செய்த பின்னர், தங்களுடைய முன்னுரிமையை வேறு ஒரு வேலை நாளில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.
##~~## |
எனவே, இந்த வசதியை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் பிளஸ்-2 கல்வித் தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது''
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.