"யூ.பி.எஸ்.சி தேர்வல்ல, ஒரு டிகிரி... ஐ.ஏ.எஸ் ஆவது சுலபம்!" - டாக்டர் சங்கர சரவணன் | An Interview With Dr. Sankara Saravanan About UPSC Exams

வெளியிடப்பட்ட நேரம்: 09:28 (14/04/2019)

கடைசி தொடர்பு:09:28 (14/04/2019)

"யூ.பி.எஸ்.சி தேர்வல்ல, ஒரு டிகிரி... ஐ.ஏ.எஸ் ஆவது சுலபம்!" - டாக்டர் சங்கர சரவணன்

ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான பதவிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடைபெறுகின்றன. அவற்றில் 'மதர் ஆ'ஃப் காம்படிட்டிவ் எக்சாம்ஸ்' எனச் சொல்லப்படுகிற யூ.பி.எஸ்.சி தேர்வுகள் முக்கியமானது. மிகுந்த பொறுப்புடைய இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வுகள் இவை. பட்டப்படிப்புக்கான ஒழுங்குடன் கர்மசிரத்தையாக பலர் யூ.பி.எஸ்.சி தேர்வுகளுக்குத் தயாராவார்கள். யூ.பி.எஸ்.சி தேர்வின் தன்மைகள், திட்டமிடல், ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரியின் பணி உள்ளிட்டவை குறித்து டாக்டர் சங்கர சரவணன் கூறும் சில ஆலோசனைகள் இதோ:

IAs

''1. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயகத்திற்கு நான்கு தூண்கள் உண்டு. சட்டம் இயற்றும் அதிகாரம் (Legislative), நிர்வாக அமைப்பு (Executive), நீதித்துறை (Judiciary) மற்றும் ஊடகம். இதில் ஏதாவது ஒன்றில் பிரதிநிதித்துவம் பெறப் பலரும் விரும்புவர். எம்.எல்.ஏ, எம்.பி என்பது தேர்தல் அரசியலின் மூலம் கிடைக்கும் பதவி. Executive என்பதை நிரந்தர நிர்வாகிகள் Permanent Executive, அரசியல் நிர்வாகிகள் Political Executive, அரசமைப்பு நிர்வாகிகள் Constitutional Executive என்று மூன்று வகையாக சொல்வர். இது மூன்றுக்குமே வித்தியாசம் இருக்கிறது. அரசமைப்பு நிர்வாகிகள் என்றால் ஜனாதிபதி, ஆளுநர் இவர்கள் பேரில் தான் நிர்வாகம் நடைபெறும், ஆனால் இவர்களுக்கு அதிக அதிகாரம் கிடையாது. அரசியல் நிர்வாகிகளுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருப்பர். ஆனால் நிரந்தர நிர்வாகிகள்தான் எந்த ஆட்சி மாறினாலும் நிர்வாகத்தை நடத்தக்கூடியவர்கள். இவர்கள்தான் முக்கியமான கொள்கைகளையும் வகுக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதைப் போல இவர்களைத் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுப்பது பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே கடைப்பிடித்து வரக்கூடிய ஒரு நடைமுறை. இது முதலில் லண்டனில் நடைபெற்றது, பின்னர் இந்தியாவில் நடைபெற ஆரம்பித்தது. ஆரம்ப காலகட்டத்தில் இதற்குக் குறைவான வயது வரம்புதான் இருந்தது. பின்னர் அது தளர்த்தப்பட்டது. இந்திய ஆட்சிப் பணிக்கு 180 பேரும், இந்திய காவல் பணிக்கு 150 பேரும், இதுபோக இருபதுக்கும் மேற்பட்ட மற்ற பிரிவுகளுக்கு ஆண்டுதோறும் ஆயிரம் பேர் வரை தேர்வு செய்யப்படுகின்றனர். மூன்று கட்டமாக தேர்வுகள் நடைபெறும். முதல் கட்டமாக லட்சக்கணக்கானோர் தேர்வுகள் எழுதுவர். ஆயிரம் பேர் அந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் 1:10 என்கிற கணக்கில் இரண்டாம் கட்ட தேர்வுக்குத் தேர்வு செய்யப்படுவர். மூன்றாம் கட்ட இறுதித் தேர்வுக்கு 1:2 என்கிற கணக்கில் 2,000 பேர் தேர்வு செய்யப்படுவர்.

IAS

2. இந்தியாவில் உள்ள மிகச் சிறந்த மூளைகள் நிர்வாகத்துக்கு தேர்வு செய்யப்படுவதால் இது தனித்துவமான தேர்வு. மற்ற தேர்வுகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால் இதற்கென்று ஒரு ப்ளூ பிரின்ட் கிடையாது. கேள்விகள் பொது அறிவில் இருந்து கேட்கப்படும். பல புத்தகங்களை, செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும். மேலோட்டமாகத் தெரிந்துகொண்டு தேர்வுகளை எழுத முடியாது, ஆழமாகப் படித்தால்தான் எழுத முடியும். நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு அனைத்து விஷயங்கள் தொடர்பான அறிவு இருக்கவேண்டும். இது இந்தியாவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளிலேயே கடினமான தேர்வு.  நிதானமாகத் தயார் செய்துதான் இந்த தேர்வுகளை எழுத முடியும். ஒரு தடவை க்ளியர் செய்யவில்லையென்றால் மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும். ஏழு முதல் ஒன்பது தடவை வரை எழுதலாம்.

3.பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் இருந்தால் அந்த ஒரு துறையில் தான் பணியாற்ற முடியும். இதுவே ஐ.ஏ.எஸ் ஆக இருந்தால் நீங்கள் கல்வி, சுகாதாரம் எனப் பல தரப்பட்ட துறைகளில் பணியாற்ற முடியும். நிர்வாகியாக மட்டுமில்லாமல் நீங்கள் ஒரு கொள்கை வகுப்பவராகவும் இருக்கலாம். இந்தத் தேர்வின் தன்மை என்பது அனைத்து வகையான மக்களுக்கும் ஏற்றதாக அனைவரும் ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது. குடிமைப் பணித் தேர்வுகளை கிராமப்புறத்தில் இருக்கிற மாணவர்கள் கூட எழுத முடியும். இந்தத் தேர்வில் முதல் கட்டம் மட்டுமே முழுவதும் ஆங்கிலத்தில் இருக்கும் மற்றவை முழுக்க தமிழிலேயே எழுதலாம். அது அதன் தனிச்சிறப்பு.  மற்றத் தேர்வுகளில் இந்த வாய்ப்புகள் கிடையாது. தமிழில் எழுதி வெற்றி பெற்றவர்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். நேர்காணலில் கூட தமிழில் பேசலாம். ஆனால் அடிப்படை ஆங்கில அறிவு என்பது அவசியம். 

IAS

4. ஐ.ஏ.எஸ் பணி கிடைக்கவில்லையென்றாலும் மற்ற பணிகளில் சேர்ந்துவிட்டு பின்னர் தேர்வெழுதி ஐ.ஏ.எஸ் பணியில் சேர்ந்தவர்கள் கூட இருக்கின்றனர். இராணுவம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளிலும் கூட முக்கிய பணிகளில் இருப்பவர்கள் யூ.பி.எஸ்.சி தேர்வு எழுதி வருபவர்கள்தான். யூ.பி.எஸ்.சி என்பது ஒரு அரசியலமைப்பு ஆணையம். எந்த அரசுக்கும் இது கட்டுப்பட்டதில்லை. நேரடியாக ஜனாதிபதியின்கீழ்  செயல்படுகிறது. அனைத்துத் துறைகளில் இருப்பவர்களும் தேர்வாவதற்கான பன்மைத்தன்மையுடன் இந்த தேர்வு முறைகள் இருக்கின்றன. தனியார், அரசுப் பயிற்சி மையங்கள் இருக்கின்றன. இவைபோக தற்போது இணையத்திலே பல்வேறு பயிற்சி வாய்ப்புகள் இருக்கின்றன. இவை எல்லாவற்றைவிடவும் சுய மதிப்பீடும், மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பீட்டு மதிப்பீடும் முக்கியம்.

IAS

5. யூ.பி.எஸ்.சி தேர்வுக்கான தயாரிப்புகள் என்றுமே வீண் போகாது. உங்களால் யூ.பி.எஸ்.சி  தேர்வை க்ளியர் செய்ய முடியவில்லை என்றாலும், இந்தியாவிலேயே கடினமான தேர்வு இது என்பதால் மற்ற தேர்வுகளிலும் எளிதில் வெற்றி பெற்றுவிட முடியும். முன்னர் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் உள்ளவர்கள் எல்லாம் குடிமைப்பணி தேர்வுகளை எழுத முடியாது போன்ற தடைகள் எல்லாம் இருந்தன. ஆனால் காலப்போக்கிய செய்யப்பட்ட சீர்திருத்தங்களில் அனைத்து படிப்பைச் சேர்ந்தவர்களும் எழுதும் சூழல் உருவாகியுள்ளது. எனவே சரியாகத் திட்டமிட்டால் நீங்கள் ஐ.ஏ.எஸ் -தான்'' என்கிறார் சங்கர சரவணன்.


டிரெண்டிங் @ விகடன்