Published:Updated:

ராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு!

ராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு!
ராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு!

ராஜராஜ சோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு!

மாமன்னன் ராஜராஜ சோழன் சமாதி இருப்பதாகக் கூறப்படும் உடையாளூரில் ஆளில்லா குட்டி விமானத்தில் நவீன கேமரா பொருத்தியும் ட்ரோன் கேமராவைப் பயன்படுத்தியும் பூமியின் மேற்பரப்பு மற்றும் பூமிக்கடியில் இரண்டு மீட்டர் ஆழத்தில் நீரோட்டம், பழைமையான கட்டடங்கள் என அனைத்தையும் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

சோழ பேரரசன் ராஜராஜ சோழன் மறைந்த பிறகு, அவரது உடல் கும்பகோணம் அருகே உள்ள உடையாளூர் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும், இந்திய பெருங்கடல் அல்லது வங்காள விரிகுடா கடலில் பிரமாண்ட சிலை அமைக்க வேண்டும், சோழர்கள் வாழ்ந்த பகுதிகளான உடையாளூர், பட்டீஸ்வரம், தாராசுரம், சோழன் மாளிகை, ஆயுதக்களம், ஆரியப்படையூர் உள்ளிட்ட கிராமங்களை அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர், அதி நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டு ஆய்வு செய்து ஏப்ரல் 25-ம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து இன்று தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், தொல்லியல் அலுவலர்கள் தங்கதுரை, பாஸ்கர், கல்வெட்டு ஆய்வாளர்கள் லோகநாதன், சக்திவேல், பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர்  உடையாளூரில் ராஜராஜ சோழன் சமாதி இருப்பதாகக் கூறப்படும் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள 10 ஏக்கர் அளவிலான பகுதிகளில் ஆய்வுப் பணியைத் தொடங்கினர். ஆளில்லா குட்டி விமானத்தில் நவீன கேமராக்களை பொருத்தியும் மற்றும் ட்ரோன் கேமரா பயன்படுத்தியும் பூமியின் மேற்பரப்பு மற்றும் பூமிக்கடியில் இரண்டு மீட்டர் ஆழத்தில் நீரோட்டம், பழைமையான கட்டடங்கள் அவற்றின் தன்மை, தற்போதைய கட்டடங்கள் ஆகியவற்றைப் படம்பிடித்தும், அதன் கோணங்களையும் கணினி மூலம் பதிவு செய்தனர். மேலும், உடையாளூரில் பால்குளத்து அம்மன் கோயில், கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த ஆய்வை  நடத்தி வருகின்றனர்.

இது குறித்து வழக்கறிஞர் திருமுருகனிடம் பேசினோம். ``கி.பி. 11-ம் நூற்றாண்டில் பழையாறை, துறைமுகமாகச் செயல்பட்டது. தஞ்சாவூர் வணிகத்துக்கான தலைமையிடமாகக் கொண்டு சோழர்கள் ஆட்சி  செய்து வந்தனர். ராஜராஜ சோழன் மற்றும் சோழர்கள் உடையாளூர், பட்டீஸ்வரம், தாராசுரம், சோழன் மாளிகை, ஆயுதக்களம், ஆரியப்படை, பம்பப்படையூர், புதுப்படையூர் போன்ற கிராமங்களில் சோழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. திருக்கோயிலூரில் கி.பி. 985-ம் ஆண்டு பிறந்த ராஜராஜ சோழன். பின்னர், சோழப்பேரரசனாக முடிசூட்டிக்கொண்டதோடு வியக்க வைக்கும் தன் திறமையாலும் படைபலத்தாலும் தென்னிந்தியா முழுவதும் பேரரசை பரப்பியவர். மேலும், பல நாடுகளை வென்று தன் கட்டுப்பாட்டில் ஆட்சி செய்த மாமன்னன். கடல் கடந்து தன் வெற்றியைப் பதிவு செய்து உலக நாடுகளை வியக்க வைத்தவர். ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரியகோயில் 1,000 ஆண்டுகளைக் கடந்தும் உலகப்புகழ் பெற்று விளங்கி வருகிறது. சோழர்களின் கட்டடக்கலைக்கு மிகசிறந்த எடுத்துக் காட்டாகவும் பெருமையோடும் கம்பீரமாகக் காட்சியளித்து நிமிர்ந்து நிற்கிறது.

பல நாடுகளை ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜ சோழன் சமாதி உடையாளூரில் உள்ளது. அந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. அதிலிருந்து சுமார் 80 அடி தொலைவில் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. இங்குதான் ராஜராஜ சோழனின் சமாதி உள்ளது. இதை அகழ்வாராய்ச்சி செய்து அந்த இடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும். மேலும், இந்தியப் பெருங்கடல் அல்லது வங்காள விரிகுடாவில் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி சிலை அமைக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தேன். இதை விசாரித்த நீதிபதிகள் கல்வெட்டு ஆராய்ச்சியாளர், தமிழ் அறிஞர்களாக குடவாயில் பாலசுப்பிரமணியன், நாகசுந்தரம் ஆகியோரை ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவிட்டனர். அவர்கள் ஆய்வு செய்த பின்னர், சோழர்கள் வாழ்ந்தற்கான செப்பேடுகள், ராஜராஜ சோழன் சமாதி இங்கு

இருக்கிறது என்பதற்கு கைலாசநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டும் உள்ளது எனக் கூறினர். ஆனால், தமிழக அரசு சார்பில் சமாதி இங்கு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என வாதிட்டனர்.

அதன் பிறகே, அதி நவீன கருவிகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்படி தொல்லியல்துறையினர் இன்றும் நாளையும் ஆய்வு செய்கின்றனர். ராஜராஜ சோழன் சமாதி மற்றும் அதைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை அகழ்வாராய்ச்சி செய்வதன் மூலம் சோழர்களின் பெருமை, பாரம்பர்யம், வரலாறு ஆகியவை வெளியே வரும். சிற்றரசை ஆண்ட சத்ரபதி சிவாஜிக்கு சிலை, சமகாலத்தில் வாழ்ந்த சர்தார் வல்லபபாய் படேலுக்கு சிலை அமைத்ததுபோல் பல நாடுகளை ஆட்சி செய்த ராஜராஜ சோழனுக்கும் சிலை அமைக்க வேண்டும் என்றார். ஆய்வில் ஈடுபட்டுள்ள தொல்லியல் அலுவலர்கள் எங்கள் ஆய்வறிக்கையை முடித்த பின்னர், தமிழக தொல்லியல் துறை ஆணையகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், அவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்'' எனத் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு