Published:Updated:

சிதையும் ராஜேந்திர சோழன், காளாமுகர் கல்வெட்டுகள்... புதுக்கோட்டை வரலாற்று ஆர்வலர்கள் வேதனை!

தூர்வாரும்போது ஏரி மற்றும் கண்மாய்களில் இருக்கும் பழைமையான கல்வெட்டுகள், குமிழிகள் ( மதகுகள்) ஆகியவை சுக்குநூறாக உடைக்கப்படுகிறது. இவை  வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

சிதையும் ராஜேந்திர சோழன், காளாமுகர்  கல்வெட்டுகள்... புதுக்கோட்டை வரலாற்று ஆர்வலர்கள் வேதனை!
சிதையும் ராஜேந்திர சோழன், காளாமுகர் கல்வெட்டுகள்... புதுக்கோட்டை வரலாற்று ஆர்வலர்கள் வேதனை!

கோடைக்காலம் தொடங்கி ஏரிகள், குளங்கள் அனைத்தும் வற்றிப்போய்விட்டன. இதைப் பயன்படுத்தி, ஆங்காங்கே ஏரி மற்றும் கண்மாய்களைத் தூர்வாரிப் பராமரிக்கும் பணிகளை பொதுப்பணித்துறையினர் தொடங்கியிருக்கிறார்கள். பாராட்டப்படவேண்டிய பணிதான் என்றாலும் தூர்வாரும்போது ஏரி மற்றும் கண்மாய்களில் இருக்கும் பழைமையான கல்வெட்டுகள், குமிழிகள் ( மதகுகள்) ஆகியவை சுக்குநூறாக உடைக்கப்படுகிறது. இவை  வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

மழை நீரைத் தேக்கிவைத்து, அதைப் பயன்பாட்டுக்கு முறையாக வழங்கிட மதகுகள் அமைக்கப்பட்டன. இவற்றுக்குக் 'குமிழிகள்' என்றும் பெயர். மதகுகளை யார் அமைக்கிறார்களோ, அவர்களது பெயர்கள் அவற்றில் பொறிக்கப்படும். இவ்வாறு அமைக்கப்படும் கல்வெட்டுகளுக்குக்  'குமிழிக் கல்வெட்டுகள்' என்று பெயர். இவை, அந்த கால பாசன முறை, அரசியல், வரலாறு, மக்கள், சமயம் பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கிய ஆதாரங்களாக விளங்குகின்றன. 

குமிழி (மதகு)

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூர்வாரும் பணிகளில் பல்வேறு குமிழிக் கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டுவிட்டன. பாதுகாக்கப்பட வேண்டிய இந்தப் பழைமையான பாசன அமைப்புகள், சிதைக்கப்பட்டு வருவது வருத்தமளிப்பதாகச் சொல்லும் வரலாற்று ஆர்வலர்கள், எஞ்சிய கல்வெட்டுகளையும், மதகுகளையுமாவது பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றனர். 

சிதைக்கப்பட்ட கல்வெட்டுகளின் முக்கியத்துவம் குறித்து யாதும் ‘ஊரே யாவரும் கேளிர்’ (யாஊயாகே) அமைப்பைச் சேர்ந்த பார்த்திபனிடம் பேசினோம்...

“புதுக்கோட்டை மாவட்டத்துக்கு நிரந்தரமான நீர் ஆதாரம் கிடையாது. இங்குப் பாயும் வெள்ளாறு கூட காட்டாறு மாதிரிதான். மழைக் காலத்தில் பெருக்கெடுத்து ஓடி, மற்ற நாள்களில் வறண்டுகிடக்கும். முக்கிய நீர் ஆதாரமாக இருப்பவை குளம், ஏரிகள், ஊருணிகள் மற்றும் கண்மாய்களில் சேகரிக்கப்படும் மழை நீர் மட்டுமே. அதனால்தான் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏரிகள் மற்றும் குளங்கள் அதிகம். இவற்றை அரசர்கள் மட்டுமல்லாமல் அதிகாரிகள், மத குருமார்கள், தலைக்கோலிகள் (தேவரடியார்கள்), மக்கள் என்று பலர் உருவாக்கியிருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் உருவாக்கிய நீர்நிலைகளில் அமைத்த குமிழிகளில் அவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக் குமிழிகள் எனப்படும் மதகுகளைத் திறப்பதற்காக அந்த காலத்தில் 'மடையர்கள்' என்ற பெயரில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். அதாவது நீரை மடைமாற்றிவிடுபவர்கள். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் 200 - க்கும் மேற்பட்ட குமிழிக் கல்வெட்டுகள் இருக்கின்றன. புதுக்கோட்டையில் இருக்கும் குமிழிக் கல்வெட்டுகளில் பழைமையானது 7 - நூற்றாண்டைச் சேர்ந்த 'மாறஞ்சடையன்' என்னும் பாண்டிய மன்னனுடையது. பல்லவ மன்னன் தந்திவர்மனுடைய கல்வெட்டுகள் கூட இங்கு அமைந்திருக்கிறது. 

தற்போது புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நடைபெறும் ஏரி, குளங்களைத் தூர்வாரும் பணிகள் முற்றிலும் வரவேற்க வேண்டிய ஒன்றுதான். ஆனால், இந்தச் சீரமைப்புப் பணியின்போது பாதுகாக்கவேண்டிய வரலாற்றுப் பொக்கிஷங்களான குமிழிகளும், குமிழிக் கல்வெட்டுகளும் சிதைக்கப்பட்டு வருவது கவலையளிக்கிறது. 

மாதுராப்பட்டி கிராம ஏரியில் இருந்த கல்வெட்டுத் தூண் என்ன ஆனதென்றே தெரியவில்லை. இது மிகவும் முக்கியமான கல்வெட்டாகும். கொடும்பாளூர் சார்ந்த வேளிர்கள் சைவத்தின் ஒரு பிரிவான காளாமுகத்தைப் பின்பற்றியவர்கள் என்பதற்கான முக்கிய ஆதாரம் இந்தக் கல்வெட்டு. 10 - ம் நூற்றாண்டில் காளாமுக சைவப் பிரிவைச் சேர்ந்த துறவி ஒருவர் மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்படுத்திக் கொடுத்த மதகு இது. 

புதுக்கோட்டை ஏரிகளில் நடந்துவரும் தூர்வாரும் பணிகள்

இலுப்பூர் வட்டத்தில் உள்ள தேராவூரில் உள்ள பெரிய குளத்தில் உள்ள இரண்டு குமிழிக் கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டுள்ளன. ராஜேந்திரசோழனின் மெய்க்காவல் படைக்குப் பெயர் வீர சோழ அணுக்கன் படை. இந்தப் படைப்பிரிவில் பணிபுரிந்த தேராவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏற்படுத்திய மதகு இது. இந்த மதகு இப்போது அழிக்கப்பட்டுவிட்டது. இது 11 - ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 13 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த,  'தலைக்கோலி' என்றழைக்கப்படும் தேவரடியார்களின் தலைமைப் பெண் ஒருத்தி, ஊர் மக்களின் நன்மைக்காக ஏரி வெட்டி, மதகு அமைத்துக் கொடுத்ததற்கு ஆதாரமாக விளங்கிய கல்வெட்டும் அழிக்கப்பட்டுவிட்டது. இந்த மூன்று கல்வெட்டுகளும் மிகவும் முக்கியமானவை. இவற்றைத் தூள் தூளாக நொறுக்கிவிட்டார்கள். ஒரு எழுத்து கூட மிஞ்சவில்லை. இன்னும் எத்தனைக் குமிழிகளும், கல்வெட்டுகளும் அழிக்கப்பட்டனவோ தெரியவில்லை. 

கொடும்பாளூர் அருகே, ஏரியைத் தூர்வாரி, அங்கிருந்த இரண்டு குமிழிக் கல்வெட்டுகளுக்கு   எந்தவிதச் சேதமும் இல்லாமல் பணியை முடித்திருக்கிறார்கள். இதே வழிமுறையை அனைத்து இடங்களிலும் பின்பற்ற வேண்டும்.

தூர்வாரும் பணியைக் குத்தகை எடுத்தவர்களுக்கும் JCB இயந்திரத்தை ஓட்டுபவர்களுக்கும் அரசு அதிகாரிகள் சரியான முறையில் கல்வெட்டுகள் குறித்த தகவல் தெரிவிக்காததே, இந்தக் கல்வெட்டுகள் சிதைக்கப்படுவதற்குக் காரணம். இந்தப் பழைய மதகுகளை, இனி பயன்படுத்தப்படாவிட்டாலும் அதைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இவற்றைச் சேதப்படுத்தாமல், பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவற்றில் நமது வரலாறுகள் பொதிந்திருக்கின்றன. அவற்றைக் காக்க வேண்டியது நமது கடமை” என்று தெரிவித்தார்.

சிதைக்கப்பட்ட கல்வெட்டுகளும், புது பாசன அமைப்பும்

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியிடம் பேசியபோது, “இது குறித்து இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இதைப் பற்றி விசாரித்து, கல்வெட்டுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

குளங்களையும், ஏரிகளையும் தூர்வாரும் பணியென்பது தற்போது மிகமிக அவசியமான பணி. தற்போது தூர்வாரினால்தான் மழைக்காலத்தில் பெய்யும் மழை நீரைச் சேகரிக்க முடியும். ஆனால், அதே வேளையில் நமது பண்பாடு, பழைமை மற்றும் வரலாற்று ஆவணங்களும் மிக மிக முக்கியமானவை. ஏற்கெனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன. மலைகளில் இருந்த கல்வெட்டுகள் பல, குவாரிகளால் காணாமல் போய்விட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் கைவிடப்பட்ட, பராமரிக்கப்படாத கோயில்களும் அதிகம். இந்நிலையில், தற்போது தூர்வாரும் பணியின்போதும் குமிழிகள் மற்றும் கல்வெட்டுகள் அழிக்கப்படுவது வேதனையளிப்பதாகவே இருக்கிறது. 

உறவுகள் இல்லாதவர்கள் மட்டுமல்ல, தம் வரலாற்றையும், அதற்கான ஆதாரங்களையும் இழந்தவர்களும் அநாதைகளே..!  இதே நிலை தொடர்ந்தால் நாம் அனைவரும் விரைவில் வரலாறுகளற்ற அநாதைகளாக ஆக்கப்படுவோம்..!