Published:Updated:

`நீட் ரிசல்ட் வந்ததும் என்னைப் பார், என்ன வேண்டுமோ செய்கிறேன்!'-மாணவியை ஆச்சர்யப்படுத்திய கலெக்டர்

`நீட் ரிசல்ட் வந்ததும் என்னைப் பார், என்ன வேண்டுமோ செய்கிறேன்!'-மாணவியை ஆச்சர்யப்படுத்திய கலெக்டர்
`நீட் ரிசல்ட் வந்ததும் என்னைப் பார், என்ன வேண்டுமோ செய்கிறேன்!'-மாணவியை ஆச்சர்யப்படுத்திய கலெக்டர்

`நீட் ரிசல்ட் வந்ததும் என்னைப் பார், என்ன வேண்டுமோ செய்கிறேன்!'-மாணவியை ஆச்சர்யப்படுத்திய கலெக்டர்

``மின்சாரமே பார்த்திராத வீட்டில் இப்போது சோலார் மின்விளக்குகள் இரண்டு எரிகிறது. பத்தாயிரம் பணத்தை கொடுத்துவிட்டு, `நீட் தேர்வில் பாஸ் செய்தவுடன் என்னை வந்து பார்' என தஞ்சாவூர் கலெக்டர் அண்ணாதுரை கூறியிருக்கிறார். மேலும் பலர் உதவுவதாக கூறியிருக்கின்றனர். இவை என்னோட எதிர்காலத்துக்கு மிகப்பெரிய அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. வீட்டில் லைட் எரிவதைப் பார்த்த என் அம்மா என்னை வாரி அணைச்சுக்கிட்டார். இப்போது எனக்கு இதுபோதும்'' என மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக இருக்கிறார் பேராவூரணி மாணவி.

சஹானா என்ற மாணவியை விகடன் வாசர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். கடும் வறுமையிலும் அரசுப் பள்ளியில் படித்து ப்ளஸ் டூ தேர்வில் 524 மதிப்பெண் எடுத்து பள்ளியிலேயே முதலிடம் பிடித்தார் சஹானா. மின்சாரமே பார்த்திராத வீடு, கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பு, அப்பாவுக்குப் போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தைத் துரத்திய வறுமை என்ற நிலையிலும் எல்லோரும் பாராட்டுகிற அளவுக்கு மார்க் எடுத்து அசத்தியவர். போதிய பணம் இல்லாததால் மேற்படிப்பு படிக்க முடியாத நிலையில் இருந்ததை விகடன் இணைய தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அதைப் படித்த வாசகர்கள் உருகிப் போய் உடனே தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். தஞ்சாவூர் கலெக்டர் உத்தரவின் பேரில் சஹானாவின் குடிசை வீட்டுக்கு சூரியஒளி மூலம் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது அவர் வீட்டில் இரண்டு மின் விளக்குகள் எரிகிறது. வீட்டில் பரவும் வெளிச்சம் அவர்கள் முகத்திலும் தெரிகிறது. இனி வாழ்க்கையிலும் பரவ உள்ளது.

இது குறித்து சஹானாவிடம் பேசினோம். ``நான் படிக்கிற படிப்புதான் எங்க வீட்டின் தலையெழுத்தை மாற்றும் என நம்பி அதில் உறுதியாக இருந்து படித்தேன். நல்ல மதிப்பெண் பெற்றும் மேற்படிப்பு படிக்க என்ன செய்யப் போகிறோம் என நினைத்து கலங்கிக் கொண்டிருந்த நேரத்தில் என்னுடைய நிலையை விகடனில் செய்தியாக வெளியிட்டீர்கள். அதைப் படித்ததும் முகம் தெரியாத பலர் உடனே உதவினர். பலர். `நான் இருக்கேன், என்ன வேண்டுமானாலும் கேள். நீ விரும்பியதைப் படி அதற்குத் தேவையான உதவிகளைச் செய்கிறோம்' எனக் கூறியது எனக்குள் பெரும் உந்து சக்தியைக் கொடுத்தது. மருத்துவர் ஆக வேண்டும் என்பது என் கனவு. அதற்கான பயிற்சியை எங்க ஊரைச் சேர்ந்த கெளதமன் சார் எனக்குக் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று என்னிடம் கலெக்டர் அண்ணாதுரை சார் போனில் பேசினார். `நீட் தேர்வுக்கான பயிற்சிக்காக வேறு ஏதேனும் வெளியூரில் சென்று படிக்கிறியா அதன் செலவுகள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்' என்றார். `இல்ல சார், நான் இந்தக் குடிசை வீட்டுள்ளேயே இருந்து படிக்கிறேன். அப்பதான் என் மனசுக்கு  நிறைவாக இருக்கும். நிச்சயம் நான் பாஸ் செய்துவிடுவேன்' எனக் கூறினேன். உடனே தன் சொந்தப் பணத்தில் இருந்து பத்தாயிரத்தைக் கொடுத்து, இதை வெளியே சொல்ல வேண்டாம் என்றதோடு உடனே மின் விளக்கு அமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

மேலும், நீட் தேர்வு முடிந்து ரிசல்ட் வந்த உடனே என்னை வந்து அலுவலகத்தில் பார் உனக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்கிறேன். தமிழக முதல்வரிடமும் என்னை அழைத்துச் செல்வதாக கூறினார். சொன்னது போலவே நேற்று மதியத்துக்கு மேல் அரசு அதிகாரிகள் வந்தனர். சோலார் மூலம் மின்விளக்கு அமைத்துக் கொடுத்தனர். வீட்டுக்குள் ஒன்று, வாசலில் ஒன்று என இரண்டு மின்விளக்குகள் வெளிச்சத்தைப் பாய்ச்சி வருகின்றன. வீட்டில் லைட் ஒளிர்வதைக் கண்டு என் அம்மா என்னை வாரி அணைச்சுக்கிட்டார்.  இப்போதைக்கு இதுவே எனக்குப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. மேலும், பலர் உதவுவதாக கூறியிருக்கின்றனர். இவை என்னோட எதிர்காலத்துக்கு மிகப்பெரிய அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கின்றன. இந்த நேரத்தில் விகடன் வாசகர்களுக்கும், விகடனுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு