Published:Updated:

`வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்லவே இந்த ஊக்குவிப்பு' - ஏழைப் பெண்ணுக்கு உதவிய திருவண்ணாமலை கலெக்டர்!

கா.முரளி
`வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்லவே இந்த ஊக்குவிப்பு' - ஏழைப் பெண்ணுக்கு உதவிய திருவண்ணாமலை கலெக்டர்!
`வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்லவே இந்த ஊக்குவிப்பு' - ஏழைப் பெண்ணுக்கு உதவிய திருவண்ணாமலை கலெக்டர்!

கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட இருளர் இனத்தைச் சேர்ந்த சுகன்யா என்ற மாணவி, 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து அவர் மூன்றாண்டுகள் எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் நர்சிங் மேற்படிப்பு படிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி. இதையடுத்து அவரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் மாணவி சுகன்யா.

``திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், காவனியாத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் சடையன் - வசந்தி தம்பதி. இவர்கள் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள், முதலாவது மகன் சுரேஷ், இரண்டாவது மகள் சுதா இருவருக்கும்  திருமணமாகிவிட்டது. மூன்றாவது மகன் சுதாகர்  கூலி வேலை செய்து வருகிறார். கடைசி மகள் சுகன்யா (வயது 18). இவர்கள் மரம் வெட்டுதல் உட்படத் தினக் கூலி வேலை செய்து மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் குடும்பத்தை நடத்தி வருகிறார்கள். இவர்கள் கடந்த 2013-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகில் பூச்சி அத்திப்பட்டு கிராமத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமை வேலையிலிருந்து வருவாய்த் துறை மூலமாக மீட்கப்பட்டவர்கள்.

சடையன் 20 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் போனதால் சிகிச்சை செலவுக்குத் தேவைப்பட்ட  ரூ.5000 பணத்துக்காக செங்கல் சூளையில் இவர்கள் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்துள்ளார்கள். சடையன் தன் குடும்பத்தினருடன் கொத்தடிமையாக வேலை பார்த்து மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையிலும், கடைசி மகள் சுகன்யாவை பல்வேறு சிரமங்களுக்கிடையே 12-ம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளார். சுகன்யா தன் குடும்பத்தினர் மற்றும் தன் சமுதாய மக்கள் படும் கஷ்டத்தைப் பார்த்தும், பல சிரமங்களுக்கு இடையே படித்துள்ளார்.

தங்கள் குடும்பம் கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்டு மீண்டும் சொந்த கிராமதந்துக்கு வந்தவுடன், வந்தவாசி அமுடூர் அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்து, இறுதித் தேர்வில் 286 (500) மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.  மேற்கொண்டு படிப்பதற்காகத் தனியார்  தொண்டு நிறுவனம் உதவியுடன் சென்னை ராயபுரம் நார்த்விக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பாடப்பிரிவில் சேர்ந்து தற்போது 12-ம் வகுப்பை முடித்துள்ளார். சுகன்யா 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 266 (600) பெற்றுள்ளார்.  மேற்கொண்டு படிக்க ஆசை இருந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக எப்படி மேற்படிப்பு படிக்கப் போகிறோம் என்ற கவலையிலிருந்துள்ளார். இந்த நிலையில்தான் சுகன்யாவின் விவரங்கள் மாவட்ட ஆட்சியருக்குத் தெரியவந்துள்ளது. அதன்  அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், சுகன்யா மேற்படிப்பு படிப்பதற்காக உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் சுகன்யா வந்தவாசி அருகில் உள்ள தனியார்  நர்சிங் கல்லூரியில், தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மூன்றாண்டுகள் நர்சிங் பட்டப் படிப்பை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து  மாணவி சுகன்யா நேற்று தன் பெற்றோருடன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். மாவட்ட ஆட்சியர் கந்தசாமி  சுகன்யாவுக்கு புதிய துணி, இனிப்பு வழங்கி வாழ்த்துக் கூறினார்.

இதுகுறித்து சுகன்யா கூறுகையில், ``நான் நன்றாகப் படித்து எங்கள் சமுதாய மக்களுக்குச் சேவை செய்து அவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். மேலும், தற்போது எங்கள் சமுதாய மக்கள் கொத்தடிமை தனத்திலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறார்கள். எங்கள் சமுதாய குழந்தைகளுக்குச் சரியான முறையில் கல்வி கிடைப்பதற்கு அனைத்து உதவிகளையும் செய்வேன்" என்றார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ``கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட மக்கள் தங்களின் குடும்பத்தையும் தங்களின் மக்களையும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்லவே இந்த ஊக்குவிப்பு" என்றார்.