Published:Updated:

`நான் பாஸாக என் பொண்ணுதாங்க காரணம்!'- 10-ம் வகுப்பு தேர்ச்சியால் நெகிழ்ந்த தந்தை

ஜெ.முருகன்
`நான் பாஸாக என் பொண்ணுதாங்க காரணம்!'- 10-ம் வகுப்பு தேர்ச்சியால் நெகிழ்ந்த தந்தை
`நான் பாஸாக என் பொண்ணுதாங்க காரணம்!'- 10-ம் வகுப்பு தேர்ச்சியால் நெகிழ்ந்த தந்தை

``என் பொண்ணு பொறுமையா சொல்லிக்கொடுத்ததால்தான் நான் பாஸ் ஆனேன்” என்று 10-ம் வகுப்பில் மகளுடன் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற தந்தை நெகிழ்ந்திருக்கிறார்.

புதுச்சேரி, வில்லியனூரை அடுத்த கூடப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். 46 வயதாகும் இவர் பொதுப்பணித் துறையில் கள ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். பணியில் நீண்ட அனுபவம் இருந்தும் 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்ததால் இவரால் பதவி உயர்வு பெற முடியாமல் இருந்தது. தனது கல்வித் தகுதியை உயர்த்திக்கொண்டால் பதவி உயர்வைப் பெற்றுவிடலாம் என்று நினைத்த இவர், கடந்த 2017-ம் ஆண்டு 8-ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்றார். அதேபோல 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினார். ஆனால் அப்போது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெற்றார்.

தொடர்ந்து ஜூன் மாதம் நடைபெற்ற துணைத் தேர்வில் தமிழ் பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெற்றார். பின்னர் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த தேர்வில் கலந்துகொண்டு தேர்வெழுதினார். ஆனால், அப்போது எந்தப் பாடத்திலும் அவர் தேர்ச்சி பெறவில்லை. ஆனாலும் தோல்வியைக் கண்டு துவளாத அவர், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் தன் மகளுடன் தேர்வு எழுதி கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அதேபோல இவரின் மகள் திரிகுணாவும் 471 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.

சுப்பிரமணியத்திடம் பேசியபோது, ``நான் 7வது படிக்கும்போது அம்மாவுக்கு உடம்புக்கு முடியாம படுத்துட்டாங்க. அவங்கள பக்கத்துல இருந்து கவனிச்சுக்க ஒரு ஆள் வேணும். அதனால என் படிப்பை நிறுத்திக்கிட்டேன். அப்புறம் பொதுப்பணித் துறையில் வேலை செஞ்சிக்கிட்டிருந்த அப்பா இறந்து போயிட்டதால அந்த வேலையை எனக்குக் கொடுத்தாங்க. சாலைப் பணியாளரா 20 வருஷம் வேலை செய்தேன். அதுக்கப்புறம் பணி ஆய்வாளராகப் புரோமோஷன் கிடைத்தது. எனக்கு இன்னும் 15 வருஷம் சர்வீஸ் இருக்கு. 10ம் வகுப்பு பாஸ் செய்தால் மீண்டும் எனக்குப் புரோமோஷன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் பரீட்சை எழுதினேன். எவ்வளவோ முயற்சி செய்தும் எனக்கு கணக்கும், அறிவியல் பாடமும் சுத்தமா வரவே இல்லைங்க. அப்புறம் என் பொண்ணுதான் எனக்குப் புரியும்படி பொறுமையா சொல்லிக் கொடுத்துச்சி. இப்போது பாஸும் ஆயிட்டேன்” என்கிறார் பெருமிதத்தோடு.

திரிகுணாவிடம் பேசினோம். ``அப்பா பாஸ் ஆனதுக்கும் நானும் ஒரு காரணம்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. குடும்பச் சூழல் காரணமா நான்தான் படிக்காம போயிட்டேன். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கல. ஆனால், நீங்க நல்லா படிக்கணும்னு என்கிட்டயும், அக்காகிட்டயும் அப்பா அடிக்கடி சொல்லுவார். சின்ன வயசுல என் கையைப் பிடிச்சி `அ’ `ஆ’ எழுதக் கற்றுக் கொடுத்தது அப்பாதான்னு அம்மா சொல்லியிருக்காங்க. இப்போ அவருக்கு நாங்க சொல்லிக் கொடுத்ததை நினைச்சா சந்தோஷமா இருக்கு. ஆனால், என்னைவிட அதிக நேரம் அப்பாவுக்குச் சொல்லிக் கொடுத்தது என் அக்காதான்” என்கிறார் மகிழ்ச்சியாக.