Published:Updated:

அரசுப் பள்ளி மேம்பாட்டுக்கு தனியாரிடம் நிதி எதிர்பார்ப்பு சாத்தியமா? என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அரசுப் பள்ளி மேம்பாட்டுக்கு தனியாரிடம் நிதி எதிர்பார்ப்பு சாத்தியமா? என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள்?
அரசுப் பள்ளி மேம்பாட்டுக்கு தனியாரிடம் நிதி எதிர்பார்ப்பு சாத்தியமா? என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள்?

"அரசுப் பள்ளிகளில் தனியார் பங்களிப்பு என்பதே நிர்வாகத்தைத் தனியார் கையில் ஒப்படைத்துவிட்டுத் தன் பொறுப்பிலிருந்து அரசு விலகிக்கொள்வதற்கான ஓர் ஆரம்பம்தான்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் நிதி கேட்பது என்பது கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்வதற்கான ஏற்பாடு எனக் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகள் என்றாலே மோசம் என்ற மனநிலை மக்கள் மனதில் தற்போது மாறிவருகிறது. எதிர்கால தலைமுறைக்கு முழுமையான கல்வி கிடைக்க வேண்டுமெனில், இருக்கும் அரசுப் பள்ளிகளை நிச்சயம் காப்பாற்ற வேண்டும் என விரும்புகின்றனர், பொதுமக்கள். எனவே, அந்தந்த ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு பொதுமக்களும் பெற்றோரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.

அரசுப் பள்ளி மேம்பாட்டுக்கு தனியாரிடம் நிதி எதிர்பார்ப்பு சாத்தியமா? என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள்?

இந்நிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதி, கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் என அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம் என பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதுபோலத் தெரிந்தாலும் அரசுப் பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிதான் இது. 25 சதவிகித இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்குக் கட்டணம் செலுத்தி அந்தப் பள்ளிகளை வளரச் செய்யும் அரசு, தன் பள்ளியை மேம்படுத்தத் தனியாரிடம் நிதி கேட்பதை ஏற்க முடியாது எனக் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளி மேம்பாட்டுக்கு தனியாரிடம் நிதி எதிர்பார்ப்பு சாத்தியமா? என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள்?

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச் செயலர் அமலராஜன், "அரசுப் பள்ளிகளைத் தனியார்மயமாக்கும் முயற்சிதான் இது. இன்று உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக உள்ளே வரும் தனியார் நிறுவனங்கள், நாளை ஆசிரியர் நியமனம், கல்விக் கட்டணம் என நிர்வாகத்தில் தலையிடும். அதன் பின்னர் அரசுப் பள்ளிகள் எல்லாம் அரசு உதவி பெறும் பள்ளியாகவோ, சிறுபான்மையினர் நடத்தும் பள்ளியாகவோ மாறிவிடும். அரசுப் பள்ளிகளில் கட்டணம் செலுத்திதான் படிக்க வேண்டும் என்ற நிலை உருவாகும். பள்ளியிலிருந்து கிராம கல்விக்குழு வெளியேற்றப்படும். அப்போது, முழுவதும் தனியாரிடம் இருந்துகொண்டு ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கும் வேலையை மட்டும்தான் அரசு செய்யும்" என்றார்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "அரசுப் பள்ளிகளைத் தொடங்க நிதி இல்லை என்ற காலத்திலேயே 3 கி.மீ தூரத்துக்கு ஒரு தொடக்கப் பள்ளி, 5 கி.மீ தூரத்துக்கு ஓர் உயர்நிலைப் பள்ளிகளை மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் தொடங்கினார். ஆனால், இப்போது கல்விக்காகவே செஸ் வரி வசூலிக்கப்படுகிறது. ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளிலும் கல்விக்காக வரி வசூலிக்கப்படுகிறது. இன்னும் எத்தனையோ வழிகளில் அரசுக்கு நிதி வருகிறது. ஆனால், பள்ளி மேம்பாட்டுக்குச் செலவு செய்வதற்கு நிதி இல்லை என்றால் எவ்வளவு வேண்டும் என்பதை வெள்ளையறிக்கையாக வெளியிட வேண்டும்.

அரசுப் பள்ளி மேம்பாட்டுக்கு தனியாரிடம் நிதி எதிர்பார்ப்பு சாத்தியமா? என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள்?

உள்கட்டமைப்பு வசதிகளுக்காகத் தனியாரிடம் ஒப்படைத்தால், அவர்கள் நிச்சயம் லாபம் எதிர்பார்ப்பார்கள். பின்னர், நிலைமையே மாறிவிடும். பள்ளி வளாகம் என்பது மாணவர்களுக்கானது மட்டும்தான். அந்த வளாகம் ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். தனியார் பங்கேற்பு இருக்கக் கூடாது. அரசு, கல்வி வழங்கும் தன் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதற்கான முன்னேற்பாடுதான் தனியாரிடம் நிதியை எதிர்பார்ப்பது. வேண்டுமானால், நிறுவனங்களிடமிருந்து கூடுதலாக வரி வசூல் செய்து அரசே அனைத்துப் பணிகளையும் செய்ய வேண்டுமே தவிர, நேரடியாகத் தனியார் ஈடுபடக் கூடாது. அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசுதான் செய்ய வேண்டும்" என்றார்.

அரசுப் பள்ளி மேம்பாட்டுக்கு தனியாரிடம் நிதி எதிர்பார்ப்பு சாத்தியமா? என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள்?

தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ், "அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான வசதிகளை அரசுதான் செய்ய வேண்டும். சுகாதாரம் மற்றும் கல்விக்கு நிதி இல்லை என அரசு சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படிச் சொன்னால், அது அரசே கிடையாது. 10-ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவருக்கு, அரசே கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர்க்கிறது. மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டி, பல பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளோடு இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து அங்கே பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளன. தற்போது அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைத் தனியார் மேற்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் தனியார் பங்களிப்புடன் கழிப்பறை அமைத்துக் கொடுத்தால் அதைப் பராமரிப்பது யார்? பராமரிப்பு செலவுக்காக மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பார்கள். இது, ஓர் எடுத்துக்காட்டுதான். இன்று பள்ளியின் வளர்ச்சிக்காகப் பணம் செலவிடுபவர்கள் நாளை அதற்கான பலனை எதிர்பார்ப்பார்கள். ஆசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கை என நிச்சயம் நிர்வாகத்திலும் அவர்களின் தலையீடு இருக்கும். அரசுப் பள்ளிகளில் தனியார் பங்களிப்பு என்பதே நிர்வாகத்தைத் தனியார் கையில் ஒப்படைத்துவிட்டுத் தன் பொறுப்பிலிருந்து அரசு விலகிக்கொள்வதற்கான ஓர் ஆரம்பம்தான்" என்றார்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு