Published:Updated:

இழுத்தடிக்கப்படும் இழப்பீடு... தொடர்ந்து நடக்குமா கீழடி அகழாய்வு?

இழுத்தடிக்கப்படும் இழப்பீடு... தொடர்ந்து நடக்குமா கீழடி அகழாய்வு?
News
இழுத்தடிக்கப்படும் இழப்பீடு... தொடர்ந்து நடக்குமா கீழடி அகழாய்வு?

ஊர்ப் பொதுமக்களிடம் பேசியதில், இந்த ஆய்வை இங்கே தொடர்ந்து நடத்துவதில் ஊர்க்காரர்கள் ஒவ்வொருவருக்கும் மனப்பூர்வ சம்மதம்தான் எனத் தெரிந்தது. ஆனால், எவரது தனிப்பட்ட வாழ்வுக்கும், உடைமைகளுக்கும் சேதாரமின்றி அகழாய்வு தொடரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

"இழப்பீடுகள் தரவில்லை... பணம்பெறாமல் நிலம் தரத் தயாரில்லை... அரசாங்கத்தை இனி நம்பப் போவதில்லை..." நில உரிமையாளர்களின் இந்தக் கொதிப்புக்கு மத்தியில், மே மாதம் ஆய்வு தொடங்குவதாய்த் தெரிவித்திருக்கிறது தமிழகத் தொல்லியல் துறை. ஆய்வுக்குத் தயாராக இருக்கிறதா கீழடி?

சிவகங்கை மாவட்டம் கொந்தகை அருகில் உள்ள கீழடியில் கடந்தாண்டு 4-ம் கட்ட அகழாய்வு முடிந்தது. இந்தாண்டுக்கான ஆய்வு ஜனவரியில் தொடங்கவேண்டியது, இன்னும் தொடங்கியபாடில்லை. தேர்தல் சீஸன் முடிந்ததும் மே மாத இறுதியில் தொடங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது, தமிழகத் தொல்லியல் துறை தரப்பு. ஆனாலும், காலதாமதம் குறித்த தெளிவான பதில் இல்லை. பதில் தேடி கீழடி சென்றோம். 

ஆய்வுகள் நடந்த கீழடி பள்ளிச்சந்தை தோப்புப் பகுதியில் அதன் உரிமையாளர்கள் தற்போது மரக்கன்றுகள் உள்ளிட்டவற்றை நட்டுப் பராமரித்து வருகின்றனர். அவர்களிடம் பேசினோம். " 'ஆய்வு நடத்துறோம், நிலம் தேவைப்படுது. நஷ்ட ஈடு தந்திடுறோம்'னு சொல்லி அதிகாரிங்க கேட்டாங்க, கொடுத்தோம். இப்பவரைக்கும் நஷ்ட ஈடு  எதுவுமே தரலை. எங்களோட இழப்புகளைப் பற்றியும் எங்களைப் பற்றியும் அவங்களுக்குக் கவலை இல்லை" என்று நொந்துகொள்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இழுத்தடிக்கப்படும் இழப்பீடு... தொடர்ந்து நடக்குமா கீழடி அகழாய்வு?

தனது 1.5 ஏக்கர் நிலத்தில் தென்னை மரங்களை வளர்த்து வரும் கமாருதீன் கூறுகையில், "எங்களுக்கு இழப்பீடு தர்றதுல, அரசாங்கத்துக்கு அப்படி என்னதான் சிக்கல்? கஜானாவுல என்ன பணமா இல்ல?" என ஆதங்கக் கேள்விகளை எழுப்புகிறார். இங்கு ஒருவருடைய நிலப்பகுதியில் அகழாய்வு நடத்தப்பட்டு வந்தது. அந்த நாள்களில் தண்ணீர் பாய்ச்சிவிட இயலாதுபோனதால், அந்த நில உரிமையாளரின் தென்னை மரங்கள் அனைத்தும் பட்டுப்போய்விட்டன. இதனால் பெருத்த நஷ்டம் அவருக்கு ஏற்பட்டது. இதனையும் அதிகாரிகளோ, அரசாங்கமோ கண்டுகொள்ளவில்லை" என்றார் வேதனையுடன்.

இழுத்தடிக்கப்படும் இழப்பீடு... தொடர்ந்து நடக்குமா கீழடி அகழாய்வு?

மற்றொரு தோப்பு உரிமையாளர் கபீபுல்லாகான் கூறுகையில், "பள்ளிச்சந்தை தோப்பு முழுக்கவே தனியார்களோட இடம்தான். பொது வழியே இங்க கிடையாது. ஆனா, ஆய்வு நடந்தப்போ... நாங்களா பார்த்து பாதை ஏற்படுத்தித் தந்தோம். ஆனா, நாளுக்கு நாள் பாதையை ஆக்கிரமிச்சுக்கிட்டதையும், எங்களோட தினசரி பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதையும் ஒருகட்டத்துக்கு மேல எங்களால சகிச்சுக்க முடியலைங்க" என்றார்.

ஊர்ப் பொதுமக்களிடம் பேசியதில், இந்த ஆய்வை இங்கே தொடர்ந்து நடத்துவதில் ஊர்க்காரர்கள் ஒவ்வொருவருக்கும் மனப்பூர்வ சம்மதம்தான் எனத் தெரிந்தது. ஆனால், எவரது தனிப்பட்ட வாழ்வுக்கும், உடைமைகளுக்கும் சேதாரமின்றி அகழாய்வு தொடரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர். அதோடுகூட, தவிர்க்க இயலாத சேதாரமெனில், அதற்கான நஷ்ட ஈட்டினை முன்கூட்டியே வழங்கிவிடவேண்டும் என்பது உரிமையாளர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த ஊர்மக்களின் கோரிக்கையுமாக உள்ளது. மேலும், நிலுவையில் உள்ள நஷ்ட ஈட்டுத் தொகை முழுவதையும் அனைவருக்கும் அளித்த பின்னர்தான் அடுத்தகட்ட ஆய்வுக்கு ஒத்துழைப்போம் என்ற மனநிலையில் தோப்பு உரிமையாளர்கள் உள்ளனர்.  

இதுகுறித்து, தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தத்திடம் கேட்டோம். "மே மாதம் ஆய்வைத் தொடங்கிவிடுவோம். இழப்பீட்டு விஷயமெல்லாம் அரசாங்கமும் மாவட்ட ஆட்சியரும் பார்த்து முடிவெடுக்க வேண்டியது" என்றார். 

இதுதொடர்பாக அரசு சார்பில் பதில்கேட்க சிவகங்கை மாவட்ட ஆட்சியரைப் பலமுறை தொடர்புகொண்டும் பேசமுடியவில்லை. கள அலுவலர் ஆசைத்தம்பியிடம் பேசுகையில், "மத்திய அகழாய்வுத் துறையின் ஆய்வுப் பணியின்போது, இந்தச் சிக்கலெல்லாம் வந்திருக்கலாம். ஆனால், கடந்தாண்டின் தமிழக அரசு தொல்லியல் துறை ஆய்வில் எந்தப் பிரச்னையுமே இல்லை. எனவே, இந்தாண்டும் சுமுகமாகப் பணிகள் நடைபெறும்" என்றார்.  

விவசாயிகளை வதைப்பது நியாயமா?