Published:Updated:

படிப்பதற்காகத் தந்தையின் மீது புகார் அளித்த மாணவி... ஏன் தெரியுமா?

படிப்பதற்காகத் தந்தையின் மீது புகார் அளித்த மாணவி... ஏன் தெரியுமா?
படிப்பதற்காகத் தந்தையின் மீது புகார் அளித்த மாணவி... ஏன் தெரியுமா?

''என் பொண்ணோட பர்த் சர்ட்டிஃபிகேட்ஸ், கம்யூனிட்டி சர்ட்டிஃபிகேட்ஸ், ஆதார் கார்டு எல்லாத்தோட ஒரிஜினலும் அவர்கிட்டதான் இருக்கு. தனுஶ்ரீயை காலேஜில் சேர்க்கணும்னா இதெல்லாம்கூட தேவைதானே, அதைக் கொடுக்க மாட்டேன்கிறாரே...''

மீபத்தில் தினசரி நாளிதழ் ஒன்றில் அந்தச் செய்தியைப் பார்த்தேன். செய்தி இதுதான். சென்னையைச் சேர்ந்த தனுஶ்ரீக்கு ஜர்னலிசம் அல்லது கிரிமினாலஜி படிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், அப்பா விஜயபாஸ்கருக்கோ, மகள் வேதியியல் பாடம் படிக்க வேண்டும் என்பதுதான் விருப்பம். தன் மகள் விருப்பம் இல்லாத துறையில் கல்லூரியில் அட்மிஷன் போட்டிருக்கிறார். இதையறிந்த தனுஶ்ரீ, ப்ளஸ் டூவில் அப்பா என் விருப்பம் இல்லாத குரூப்பில் சேர்த்துவிட்டதால்தான் மார்க் குறைந்தேன் என்றபடியே குழந்தைகள் நல வாழ்வு மையத்துக்குப் போன் செய்ய, விஷயம் காவல்துறை வரை செல்கிறது. அந்தப் பெண்ணின் அப்பாவை அழைத்து விசாரிக்க, என் மகள் விரும்பிய துறையில் படிக்க வைக்கிறேன் என்றவர் சர்ட்டிஃபிகேட்ஸை கொடுத்ததாக வெளியாகியிருந்தது அந்தச் செய்தி. அட படிப்புக்காகப் போராடிய பெண்ணா என்றபடியே புகார் கொடுத்த மாணவியின் தாயிடம் பேசினோம். அவர் பெயர் பார்வதி. 

''ஆக்சுவலா எனக்கும் அவருக்கும் மனஸ்தாபம். அது அடிக்கடி நிகழ்ற ஒண்ணுதான். அதனால தற்போதைக்கு நான் அவரைவிட்டு பிரிஞ்சு எங்க அம்மா வீட்ல இருக்கேன். அவரைப் பொறுத்தவரைக்கும் அவர் மட்டும்தான் எல்லாம் முடிவுகளையும் எடுக்கணும்... ஏன்னா அவர் மட்டும்தான் வேலை பார்க்கிறார். நான் ஹவுஸ் ஒய்ஃப்தாங்க. மாண்டிசோரி ஸ்கூல்ல பார்த்துக்கிட்டிருந்த டீச்சர் வேலையை, பிள்ளைகளை வளர்க்கிறதுக்காக விட்டுட்டேன். எப்ப பாரு பெத்த பொண்ணுங்ககிட்டே 'நான் சோறு போடறேன்; படிக்க வைக்கிறேன்'னு சொல்லிச் சொல்லிக் காட்டுவாரு. குழந்தைங்க ரெண்டும் மனசொடிந்து கிடக்குதுங்க. 

படிப்பதற்காகத் தந்தையின் மீது புகார் அளித்த மாணவி... ஏன் தெரியுமா?

இதெல்லா ஒருபுறம் இருக்க... என் மேல உள்ள கோவத்தை இப்ப என் புள்ளைங்க மேல காட்டுறாரு. தனுஶ்ரீக்கு கிரிமினாலஜி இல்லாட்டி ஜர்னலிசம் படிக்கணும்னு ஆசை. ஆனா அவர் வீம்பா பொண்ணு வேதியியல்தான் படிக்கணும்னு நிக்கிறார். ப்ளஸ் டூ ரில்சட் வந்த நேரத்துல நாங்க அவர்கூட இல்லாததைப் பயன்படுத்திகிட்டு என் பொண்ணு கையெழுத்து இல்லாமலேயே ஸ்கூலுக்குப் போய் மார்க் ஷீட், டிசி எல்லாத்தையும் வாங்கி வைச்சுகிட்டார். அதனாலதான் வெறுத்துப்போய் என் பொண்ணு குழந்தைகள் நல வாழ்வு மையத்துக்குப் போன் பண்ணி பேசினா. போலீஸ் ஸ்டேஷன்ல அப்பாவையும் பொண்ணையும் கூப்பிட்டு பேசினாங்க. அங்க அவர், ஸ்கூல்ல கொடுத்த எல்லா சர்டிபிகேட்ஸையும் கொடுத்துட்டார். ஆனா, அவர்கிட்டதான் பொண்ணோட பர்த் சர்டிஃபிகேட்ல ஆரம்பிச்சு ஆதார் வரைக்கும் அத்தனை ஒரிஜினலும் இருக்குது.

படிப்பதற்காகத் தந்தையின் மீது புகார் அளித்த மாணவி... ஏன் தெரியுமா?

தனுஶ்ரீயை காலேஜில் சேர்க்கணும்னா இதெல்லாம்கூட தேவைதானே, அதைக் கொடுக்க மாட்டேன்கிறாரே... அவரைப் பொறுத்தவரைக்கும் அவரை மீறி நாங்க எதுவும் செஞ்சுடக் கூடாது. அதனாலதான் இப்படியெல்லாம் செய்றாரு'' என்றவர், வேதனையுடன் தன் பேச்சை தொடர்கிறார். 

''இதையெல்லாம் நினைச்சு தனுஶ்ரீ தினமும் அழுதிகிட்டிருக்காங்க. இப்பவே எல்லா காலேஜ்லேயும் அட்மிஷன் கிட்டத்தட்ட முடிஞ்சிடுச்சுன்னு சொல்றாங்க. இனிமே ஸ்பாட் அட்மிஷன்தான் தருவாங்களாம். அப்படின்னா, அட்மிஷன் தர அன்னிக்கே நாங்க ஃபீஸ் கட்டணும். எல்லா ஒரிஜினல் சர்ட்டிஃபிகேட்ஸையும் காட்டணும். இப்ப பணத்துக்கும் மத்த ஒரிஜினல் சர்ட்டிஃபிகேட்ஸ்க்கும் என்ன பண்றதுன்னு தெரியாம நான் தவிச்சுக்கிட்டிருக்கேன்.

தனுஶ்ரீ ரொம்ப நல்லா படிக்கிற குழந்தை. விடியற்காலை 3 மணி வரைக்கும் படிப்பா. பத்தாவதுல 500-க்கு 462 மார்க் எடுத்தா. ப்ளஸ் ஒன்னில் 600-க்கு 483 மார்க் எடுத்தா. ப்ளஸ் டூவில் இவர் கொடுத்த டார்ச்சலில் மார்க் குறைஞ்சுப் போச்சு. ரொம்ப மன அழுத்தத்துல இருக்கா. அவளுக்கு ஜர்னலிசம் இல்லன்னா கிரிமினாலஜி படிக்கணும்னு ஆசை.  நான்தான் எதுவும் சாதிக்கலை. என் பொண்ணாவது நல்லா படிச்சு சாதிக்கணும். அதுக்கு தனுஶ்ரீ அப்பாதான், சட்டபடி  ஃபீஸ் கட்டணும். அவருக்கு உண்மையாவே பெத்தப் பொண்ணுங்க மேலே பாசம் இருந்தா, அவங்க ஆசைப்பட்டதைப் படிக்க வைக்கச் சொல்லுங்க. அவர்கிட்டே வேற எதையும் நான் கேட்கலைங்க'' என்கிற பார்வதிக்கு குரல் கம்முகிறது.

விஜயபாஸ்கர் தன் மகளுக்காக ஈகோவை விட்டுக்கொடுத்தால் மட்டுமே பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு