கடலைப் போலவே இந்தப் படிப்பும் அள்ளிக்கொடுக்கும் - மீன்வளப் படிப்புகள் #LetsLearn | Courses Offered By Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University

வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (13/06/2019)

கடைசி தொடர்பு:10:27 (14/06/2019)

கடலைப் போலவே இந்தப் படிப்பும் அள்ளிக்கொடுக்கும் - மீன்வளப் படிப்புகள் #LetsLearn

மீன்வளப் பட்டப்படிப்புகள், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகம் வழங்கக்கூடியதாக உள்ளன. இதில், முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தவர்கள் `ARS' எனப்படும் Agricultural Research Service என்ற தேர்வை எழுதலாம். அதில் தேர்ச்சியடைந்தால், மத்திய அரசின் மீன்வள ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரியலாம்.

கடலைப் போலவே இந்தப் படிப்பும் அள்ளிக்கொடுக்கும் - மீன்வளப் படிப்புகள் #LetsLearn

மீன்வளத் துறையில், உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இந்தத் துறை மீது மாணவர்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை. இந்தியாவில் மீன்வளப் படிப்புகளுக்காக தனியே மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருக்கின்றன. அவற்றில் ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறது.

துணை வேந்தர் S. ஃபெலிக்ஸ்மீன்வளம் சார்ந்த படிப்புகளை மேம்படுத்தும் வகையில், கடந்த 2012-ம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவர் நினைவாக, `தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகம் பற்றியும், அதன் கீழ் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் பட்டப்படிப்புகளைப் பற்றியும் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் S. ஃபெலிக்ஸிடம் கேட்டோம்.

``இந்தப் பல்கலைக்கழகத்தைப் பற்றி, கடலோரப் பகுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அதிகம் தெரிகிறது. மற்ற பகுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கு, இப்படி ஒரு பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் இருப்பதே தெரிவதில்லை. அனைத்துத் தரப்பு மாணவர்களும் இந்தப் பல்கலைக்கழகம் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்."

``மீன்வளப் பல்கலைக்கழகத்தில் என்னென்ன பட்டப்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன?"

``தொடக்கத்தில் Bachelor of Fisheries Science என்ற ஒரு பட்டப்படிப்பு மட்டுமே கற்பிக்கப்பட்டது. பிறகு, சில படிப்புகள் சேர்க்கப்பட்டன. B.Tech Fisheries Engineering, Bio Technology, Food Technology என மொத்தம் நான்கு பட்டப்படிப்புகள் கடந்த வருடம் வரை கற்பிக்கப்பட்டன. இந்த வருடம் முதல், B.Tech Nautical Technology, Environmental and Energy Fisheries Engineering, B.B.A Fisheries Management மற்றும் B.Voc (Vocational) என்ற நான்கு பட்டப்படிப்புகளைப் புதிதாகச் சேர்க்கவிருக்கிறோம். தற்போது மொத்தம் எட்டு பட்டப்படிப்புகளை கற்பித்துவருகிறோம்."

``இன்றைய காலகட்டத்தில் மீன்வளம் சார்ந்த படிப்புகளுக்கான முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது?"

``மீன்வளப் பட்டப்படிப்புகள், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகம் வழங்கக்கூடியதாக உள்ளன. இதில், முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தவர்கள் `ARS' எனப்படும் Agricultural Research Service என்ற தேர்வை எழுதலாம். அதில் தேர்ச்சியடைந்தால், மத்திய அரசின் மீன்வள ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரியலாம். மேலும், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராகச் சேர முடியும். இதுதவிர, மீன்வளத் துறையில் உள்ள மீன்வளத் துறை ஆய்வாளர், துணை இயக்குநர் என அனைத்துவிதமான பொறுப்புகளுக்கும் நேரடியாகவே மாணவர்கள் சேரக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இதுதவிர தனியார் இறால் அல்லது மீன் பண்ணைகளில் மேலாளராகவும் சேரலாம்." 

மீன்வளப் படிப்புகள்

``மாணவர்களிடையே இந்தப் படிப்புகளுக்கான வரவேற்பு எப்படியிருக்கிறது?''

``சமீபகாலமாக மீன்வளப் படிப்புகளுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் வரை 3,000-க்கும் குறைவானவர்களே விண்ணப்பித்தனர். தற்போது இடங்களும் படிப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருப்பதால், இந்த வருடம் 10,000 விண்ணப்பங்கள் வரை வந்திருக்கின்றன."

``இந்தப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு, 12-ம் வகுப்பில் என்ன குரூப் எடுக்க வேண்டும்?"

``Bachelor of Fisheries Science மற்றும் Bio Technology போன்ற படிப்புகளுக்கு தாவரவியல், உயிரியல் குரூப் எடுத்த மாணவர்களும், பொறியியல் சார்ந்த B.Tech படிப்புகளுக்கு கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும்."

``கல்லூரியில் சேர ஏதாவது நுழைவுத்தேர்வு இருக்கிறதா?"

``இளநிலைப் படிப்புகளுக்கு எந்தவிதமான நுழைவுத்தேர்வுகளும் கிடையாது. ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கட் ஆஃப் மதிப்பெண் வெளியிடப்படும். தற்போது மருத்துவம் மற்றும் கால்நடைப் படிப்புகளுக்கு அடுத்தபடியாக, நமது கட் ஆஃப் மதிப்பெண் இருந்துவருகின்றன. பிறகு, கலந்தாய்வு நடத்தப்பட்டு அதில் மாணவர்கள் தேர்வுசெய்யும் படிப்புகளுக்கு ஏற்ற வகையில் அதற்கேற்ற கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். அதே நேரம் முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கும் Ph.d., படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்தப்படும். "

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்

``மொத்தம் எத்தனை இடங்கள் இருக்கின்றன?"

``தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளையும் சேர்த்து மொத்தம் 400 இடங்கள் உள்ளன. பத்து கல்லூரிகளில இந்தப் பட்டப்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. கடலில் விபத்துகளைச் சந்தித்தவர்கள், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்குத் தனியாக 5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்கள் என அரசின் விதிகளுக்கு உட்பட்டு பல்வேறு இட ஒதுக்கீடுகளும் உள்ளன."

``கல்லூரியில் சேர்வதற்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?"

``ஒவ்வொரு வருடமும் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு, மாணவர்கள் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழகம் முழுக்க, பல்கலைக்கழகத்தின் சார்பில் 40 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கே சென்றால், விண்ணப்பம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். www.tnjfn.ac.in என்ற இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம்."


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை