"சென்னை கவின்கலைக் கல்லூரியில் சேர தகுதி என்ன? என்னவெல்லாம் நன்மை?" ஓவியர் சந்தோஷ் நாராயணன் #LetsLearn | An interview with renowned artist santhosh narayanan

வெளியிடப்பட்ட நேரம்: 08:41 (14/06/2019)

கடைசி தொடர்பு:10:01 (14/06/2019)

"சென்னை கவின்கலைக் கல்லூரியில் சேர தகுதி என்ன? என்னவெல்லாம் நன்மை?" ஓவியர் சந்தோஷ் நாராயணன் #LetsLearn

அனிமேஷன், திரைப்படம், விளம்பரம், ஊடகம், தொழில்நுட்ப வடிவமைப்புகள் (உதாரணம், செராமிக் டிசைன்கள்), ஆடை வடிவமைப்பு என எண்ணற்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

சந்தோஷ் நாராயணன், பிரபலமான ஓவியர். இவரின் கைவண்ணத்தில் உருவான அட்டைப்படங்களைத் தாங்கி, பல புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஓவியத்தில் தொழில்நுட்பம் சார்ந்து வளரும் மாற்றங்களைக் கவனித்து, அதைப் பயன்படுத்துவதில் தனித்துவம் மிக்கவர். நல்ல எழுத்தாளரும்கூட. `கலைடாஸ்கோப்' எனும் தொடரை ஆனந்த விகடனில் எழுதியவர். சென்னை கவின்கலைக் கல்லூரியில் படித்தவர். அவரிடம் கவின்கலைப் படிப்பு குறித்தும், அதற்கான வேலைவாய்ப்புகள் பற்றியும் உரையாடினோம். 

``நீங்கள் உயர்கல்விக்காக ஓவியப் படிப்பைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?"

``சிறுவயதிலிருந்தே ஓவியம் மீதான ஆர்வம்தான். 90-களில் அனிமேஷன், விளம்பரம் என்று ஊடகங்களில் ஓவியர்களுக்கான வேலைவாய்ப்புகளும் பெருகிக்கொண்டிருந்தன. ஓவியத்தை முறையாகக் கற்றுக்கொள்ள ஒரு கல்லூரி இருக்கிறது எனத் தெரிந்ததும் அதைத் தேர்ந்தெடுத்தேன்."

சந்தோஷ் நாராயணன்

``கவின்கல்லூரியில் சேர அடிப்படையான தகுதி என்ன... நீங்கள் சேரும்போது ஏற்பட்ட அனுபவங்களோடு பகிர்ந்துகொள்ளுங்களேன்?"

``அடிப்படையான தகுதி, ஓரளவுக்கு வரைய தெரிய வேண்டும் என்பதுதான். கல்வித் தகுதியில் ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வழக்கமாக, ஓவியக் கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வு உண்டு. எல்லா துறைகளையும் சேர்த்து கிட்டத்தட்ட நூறு மாணவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள்.

நான் 90-களின் இறுதியில் கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வு எழுதியபோது, 500-க்கும் மேற்பட்டவர்கள் எழுதினார்கள். நுழைவுத்தேர்வுக்கு என சில தனியார் பயிற்சி வகுப்புகள் சென்னையில் சில மாதங்களுக்கு முன்பே நடக்கும். கிராமத்திலிருந்து வந்த எனக்கு அதெல்லாம் தெரியாது. என்னுடன் தேர்வு எழுதிய சில மாணவர்கள் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று வந்தவர்கள். என்னைப் பயமுறுத்தினார்கள். நானெல்லாம் நேரடியாக நுழைவுத்தேர்வு நடந்த அன்று சென்னை வந்து எழுதிவிட்டு ஊருக்குச் சென்றுவிட்டேன். இரண்டு மாதங்களுக்குப் பிறகு கல்லூரியில் வந்து சேருமாறு கடிதம் வந்தது. நுழைவுத்தேர்வு என்பது, முழுக்க முழுக்க வரைவதுதான். குறிப்பாக, போர்ட்ரெயிட், ஸ்டில் லைஃப், டைப்போகிராஃபி என்பதுபோல."

``கவின் கல்லூரியில் எத்தனைவிதமான பிரிவுகள் உள்ளன...  நீங்கள் தேர்ந்தெடுத்த பிரிவு எது?"

``காட்சித் தொடர்பியல், பெயின்டிங், சிற்பம், செராமிக், பிரின்ட் மேக்கிங், டெக்ஸ்டைல் டிசைன் என ஆறு வகையான பிரிவுகள் உள்ளன. நான் காட்சித் தொடர்பியலைத் தேர்ந்தெடுத்தேன்."

``படிக்கையில் என்னவிதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன?"

``BFA என்று சொல்லும் இளங்கலைப் படிப்பு, நான்கு வருடம். முதல் வருடம் மேற்கண்ட அனைத்துத் துறைகள் சார்ந்தும் ஓர் அறிமுகமாக, கலவையான வகுப்புகள் நடக்கும். இரண்டாம் வருடத்திலிருந்து அவரவர் தேர்ந்தெடுத்த பிரிவு சார்ந்த பாடங்கள் நடத்தப்படும். தியரி என்பது குறைவு. முழுக்க முழுக்க பிராக்டிக்கலான படிப்பு என்பதால், அனுபவமே கல்வியாக இருக்கும் என்று சொல்லலாம். 150 வருடங்களுக்கும் மேலான பாரம்பர்யம்கொண்ட கல்லூரியில் ராய் சவுத்ரி, தனபால், சந்தானராஜ் போன்ற ஆசிரியர்களின் காலம் பொற்காலமாக இருந்திருக்கிறது."

``சிறப்பு விருந்தினர் வருகையின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள்?"

``கலை தொடர்பான பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் வருவார்கள். சட்டென ஞாபகம் வருவது இதுதான். என்னைப் போன்ற சில மாணவர்கள் வாசிப்பு மீதிருந்த ஆர்வம் காரணமாக கல்லூரியில் சுவர் பத்திரிகை ஒன்று ஆரம்பிக்கலாம் எனத் திட்டமிட்டோம். அதை கல்லூரி முதல்வரிடம் முறையிட்டபோது, நாங்கள் என்னவோ `புரட்சி' செய்யப்போவதாக நினைத்துக்கொண்டு அதற்கான ஒப்புதல் தரவில்லை. நாங்கள் இரவோடு இரவாக `ஓரம்' என்ற பெயரில் சுவர் பத்திரிகை ஒன்றை உருவாக்கி, அடுத்த நாள் காலையில் மாணவர்களைத் திரட்டி, கல்லூரிக்குள் தொடக்கவிழாவாக நடத்தினோம். அதைத் திறந்துவைக்க சிறப்பு விருந்தினராக நாங்கள் அழைத்தது, கல்லூரியில் மாணவர்கள் ஓவியம் வரைய `மாடலாக' பல வருடங்களாகக் கல்லூரிக்கு வரும் ஒரு தாத்தாவைத்தான். அவருடைய உடலை வைத்து காலம்காலமாக வரைந்ததற்கு ஒரு நன்றி சொல்லல்போல் அது இருந்தது."

ஓவியம்

``மேல் படிப்புக்கு சென்னையிலேயே வாய்ப்பிருக்கிறதா அல்லது வேறு மாநிலத்துக்குச் செல்ல வேண்டுமா?"

``சென்னை ஓவியக் கல்லூரியில் MFA என்கிற முதுநிலைப் படிப்பும் இருக்கிறது. வேண்டுமானால் அஹமதாபாத்  NID, மும்பை  JJ ஸ்கூல் ஆஃப் ஆர்ட், கொல்கத்தா `சாந்தி நிகேதன்' போன்ற இந்தியாவின் பிற இடங்களிலும் உயர்கல்வி கற்கலாம்."

``ஃபைன் ஆர்ட்ஸ் படித்தால் என்னவிதமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன?"

``முழுநேர சிற்பி, ஓவியர் ஆகலாம். அனிமேஷன், திரைப்படம், விளம்பரம், ஊடகம், தொழில்நுட்ப வடிவமைப்புகள் (உதாரணம், செராமிக் டிசைன்கள்), ஆடை வடிவமைப்பு என எண்ணற்றத் துறைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. தனித்திறன் இருந்தால் மேலும் முன்னேறிச் செல்லலாம். சொந்தக் காலிலும் நிற்கலாம்."

``ஃபைன் ஆர்ட்ஸ் படித்தால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு கிடைக்குமா?" 

``நிச்சயம் கிடைக்கும். முந்தைய கேள்வியில் சொன்ன பதிலில் இருக்கும் எல்லா துறைகளிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. தேடிக் கண்டடைய வேண்டும். இன்றைய இணைய உலகில் அதெல்லாம் மிகவும் எளிதுதான்."

``ஃபைன் ஆர்ட்ஸ் படிப்பு, உங்களுக்குப் பிடித்தவிதமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள எந்த அளவுக்கு உதவியிருக்கிறது?"

``செய்யும் வேலையை மிகவும் மகிழ்ச்சியாகச் செய்வதற்கான ஒரு வாய்ப்பை அது உருவாக்கியது. நான் பதிப்புத் துறை, ஊடகம், விளம்பரத் துறைகளில் வடிவமைப்பாளராக, ஓவியராகப் பணியாற்றினேன். கரும்பு தின்ன கூலி என்பதுபோலத்தான் வாழ்க்கை முறை இருந்தது என்று சொல்வேன். இன்று எந்த நிறுவனத்தையும் சாராமல் வீட்டில் இருந்தபடியே வேலைகள் செய்துகொண்டிருப்பதற்கும் காரணம், நான் ஓவியராகவும் வடிவமைப்பாளராகவும் இருப்பதுதான். மற்ற துறைகளில் இது எந்த அளவுக்குச் சாத்தியம் எனத் தெரியவில்லை. இதற்கெல்லாம் அடித்தளம், நமது படைப்புத்திறனை வளர்த்துக்கொள்ள ஏதுவாக இருந்த ஃபைன் ஆர்ட்ஸ் படிப்புதான் என்று சொல்வேன்."


டிரெண்டிங் @ விகடன்