Published:Updated:

`20 அடி அகலம்.. 60 அடி நீளம்’ - 55 ஆண்டுகளுக்குப்பின் வெளிச்சத்துக்கு வந்த தனுஷ்கோடி சாலைப் பாலம்!

`20 அடி அகலம்.. 60 அடி நீளம்’  - 55 ஆண்டுகளுக்குப்பின் வெளிச்சத்துக்கு வந்த தனுஷ்கோடி சாலைப் பாலம்!
`20 அடி அகலம்.. 60 அடி நீளம்’ - 55 ஆண்டுகளுக்குப்பின் வெளிச்சத்துக்கு வந்த தனுஷ்கோடி சாலைப் பாலம்!

பாலம் அமைத்து அதன் ஈரம் காயும் முன்னரே தரமற்ற பணியினால் சிதைந்துவிடத் தொடங்கிவிடும் இன்றைய சூழலில் சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடி சாலைக்காக அமைக்கப்பட்ட பாலம் கடல் சீற்றத்தினால் மண்ணுக்குள் புதைந்திருப்பது வெளியே தெரிய வந்துள்ளது.

`20 அடி அகலம்.. 60 அடி நீளம்’  - 55 ஆண்டுகளுக்குப்பின் வெளிச்சத்துக்கு வந்த தனுஷ்கோடி சாலைப் பாலம்!

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்திலும் அதைத் தொடர்ந்து வந்த சுதந்திர இந்தியா ஆட்சிக் காலத்திலும் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கியது தனுஷ்கோடி. ஆர்ப்பரிக்கும் அலைகளுடன் கூடிய அழகிய கடற்கரை நகரமாக விளங்கிய தனுஷ்கோடிக்கு ராமேஸ்வரத்திலிருந்து சாலை வசதியும், பாம்பனில் இருந்து ரயில் வசதியும் இருந்து வந்தது. இதற்கென முகுந்தராயர் சத்திரம் பகுதியில் இருந்து தனுஷ்கோடி பாலம் வரை கடற்கரை ஓரம் அமைக்கப்பட்டிருந்தது. கடல் சீற்றத்தினால் அதிகரிக்கும் கடல் நீர் சாலையை பாதிக்காதவாறு கடல் நீர் சாலையின் இரு புறங்களிலும் புகுந்து செல்லும் வகையில் தரமான உருளைக் குழாய்கள் மண்ணில் பதிக்கப்பட்டு அதன் மேல் சாலை அமைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில், 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி நள்ளிரவில் தனுஷ்கோடியில் வீசிய புயலால் துறைமுக நகரமே கடலுக்குள் மூழ்கிப் போனது. பல நூறு குடும்பங்கள் வசித்து வந்த தனுஷ்கோடி பகுதி, இதனால் மனிதர்கள் வசிக்கத் தகுதியற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்த அளவுக்குப் புயலின் கொடூரம் இருந்துள்ளது. இந்தக் கொடூர புயலில் சிக்கிய ரயில் பாதை, சாலைகள் எல்லாம் மண்ணுக்குள் புதைந்து போயின.

`20 அடி அகலம்.. 60 அடி நீளம்’  - 55 ஆண்டுகளுக்குப்பின் வெளிச்சத்துக்கு வந்த தனுஷ்கோடி சாலைப் பாலம்!


அப்படிப் புதைந்து போன தனுஷ்கோடி சாலையில் அமைக்கப்பட்டிருந்த சாலைப் பாலம் ஒன்று தற்போது ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் மணல் அரிப்பிலிருந்து வெளியாகி பார்வைக்கு தெரியவந்துள்ளது. சுமார் 20 அடி அகலமும், 60 அடி நீளமும் கொண்ட அந்தச் சாலை பாலத்தில் கீழ் இருந்த சிமென்ட் உருளைகள் மற்றும் பாலத்தின் பக்கச்சுவர்கள் பாதிப்பு ஏதுமின்றி மணலுக்குள் புதைந்திருந்தது தனுஷ்கோடியில் வாழும் மீனவர்களையும், அங்கு சுற்றுலா செல்லும் சுற்றுலாப் பயணிகளையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. 
 ஏற்கெனவே தனுஷ்கோடி புயல் தாக்கத்தில் உருக்குலைந்து போன ரயில் நிலையம், விநாயகர் கோயில், அஞ்சல் அலுவலகம், தேவாலயம் போன்றவற்றின் மிச்சங்கள் நினைவுச் சின்னங்களாக இருந்து வருகிறது.

அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் இல்லாததால் மிச்சங்களாக இருக்கும் நினைவுக் கட்டடங்களும் சேதமடைந்து வருகின்றன. இவற்றைப் பாதுகாப்பதுடன், 55 ஆண்டுகளுக்குப் பின் மணலில் இருந்து மீண்டெழுந்துள்ள பாலத்தையும் பாதுகாத்து புயல் சின்னங்களாகப் பராமரிக்க வேண்டும் என்பதே எல்லோருடைய கோரிக்கையாகும். 

Vikatan