Published:Updated:

செவிவழிக் கல்வி!

செவிவழிக் கல்வி!

##~##

கோடம்பாக்கம் ஃபாத்திமா பள்ளி மைதானத்தில் ஆங்காங்கே சின்னச் சின்னக் குழுவாக அமர்ந்து உள்ளனர் சிலர். அதில் ஒருவர், தன் கையில் உள்ள புத்தகத்தைச் சத்தமாக வாசிக்க, சுற்றி இருப்பவர்கள் கவனமாகக் கேட்டபடி இருக் கின்றனர். ''இதுதான் சார் நாங்க நடத்துற ரீடிங் கிளாஸ்...'' என்றபடி நம்மை அழைத்துச் செல்லும் டேனியல், ''பள்ளி இறுதி வகுப்பு வரை பார்வை இல்லாதவங்க படிக்கிறதுக்கு ப்ரெய்லி புத்தகங்கள் இருக்கு. ஆனா, கல்லூரிப் பாடங்களை ப்ரெய்லி மூலமாப் படிக்க வாய்ப்பே இல்லை. அதனால பார்வை இல்லாதவங்க கல்லூரிக்கு வரும்போது ரொம்பவே சிரமப்படறாங்க. அந்தச் சிரமத்தை இந்த ரீடிங் கிளாஸ் மூலம் குறைக்க முயற்சி பண்றோம்'' என்ற டேனியலைத் தொடர்கிறார் ஜோசப்.

செவிவழிக் கல்வி!

 ''எனக்கு ஐ.டி. கம்பெனியில் வேலை. என்னை மாதிரி இங்க வாலண்டியர்ஸா வர்றவங்க எல்லோருமே பல்வேறு நிறுவனங்கள்ல வேலை பார்க்கி றவங்கதான். பார்வை உள்ளவங்க படிக்கிற அதே புத்தகத்தைவெச்சுக்கிட்டு, இவங்களுக்கு ரெண்டு மூணு தரம் வாசிச்சுக் காட்டினால் மனசுல ஆழமா உள்வாங்கிப்பாங்க. தேர்வு சமயங்கள்ல அவங்க சொல்லச் சொல்ல அதை 'ஸ்கிரைப்’ ஒருத்தர் எழுதிடுவாங்க. இதுதான் நடைமுறை. இவங் களுக்குப் புத்தகங்களை வாசித்துக் காட்டு றதுக்கு யாரும் முன்வர்றது இல்லைங்கிறதுதான் பிரச்னை'' என்றார் ஜோசப்.

''இவங்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யலாம்னு யோசிச்சப்ப உருவானதுதான் இந்த ரீடிங் கிளாஸ். இதை ஆரம்பிச்சு நாலஞ்சு வருஷம் ஆச்சு. வாராவாரம் சனிக் கிழமை காலையில இருந்து மதியம் வரை பக்கத்துல இருக்கிற அரசு விடுதிகள்ல உள்ள பார்வை இல்லாதவங்களை அழைச்சிக்கிட்டு வந்து அவங்க படிக்கிற வகுப்புகளுக்கு ஏத்த மாதிரி குழுவாப் பிரிச்சு அவங்க விரும்புற பாடங்களைப் படிச்சுக் காண்பிப்போம். எங் கள்ல சிலருக்கு சனிக்கிழமைகள்ல வேலை இருந்தால், இந்தப் பள்ளியைச் சுற்றி உள்ள வீடுகள்ல ஓய்வா இருக்கிற வயதானவர்கள், கல்லூரி மாணவர்கள் வந்து உதவுவாங்க. எங்கள்ல பலர் பார்வை இல்லாதவங்களுக்காகத் தேர்வு எழுதித் தர்ற 'ஸ்கிரைப்’வாவும் இருக்கோம். அதேபோல் எங்களால முடிஞ்ச அளவுக்கு ஸ்பான்சர்ஸ் பிடிச்சு ரீடிங் கிளாஸ் நடக்கும் நாட்கள்ல மாணவர்களுக்கு மதியச் சாப்பாடும் வழங்குறோம்.

செவிவழிக் கல்வி!

வெள்ளை கலர்ல சேலை கட்டி இருக்கிற அந்த அம்மாவுக்கு வயசு 80; பேரு தெரஸா. பேருக்கு ஏத்த மாதிரியே, இந்த வயசுலயும் ரெகுலரா வந்து பசங்களுக்குப் பாடங்களை வாசிச்சுக் காண்பிக்கிறாங்க. அவங்களை மாதிரியானவங்கதான்  எங்களுக்கான உந்துசக்தி. 120 பார்வை இல்லாத மாணவர்கள் இந்த ரீடிங் கிளாஸுக்கு வர்றாங்க. ஆனா, வாலண்டியரா நாங்க பத்துப் பதினைஞ்சு பேர்தான் இருக்கோம். இந்த ரீடிங் கிளாஸைக் கேள்விப்பட்டு நீங்க வந்திருக்கிற மாதிரி இன்னும் பல வாலண்டியர்ஸ் வந்தா அதுதான் சார் பெரிய விஷயம்'' என்கிறார் டேனியல்!

கட்டுரை, படங்கள்: ந.வினோத்குமார்

டாக்டரம்மா!

ஆழ்வார்பேட்டை ரஷ்ய கலாசார மையத்தில் உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு விருதுகள் வழங்கும் விழா, கடந்த வாரம் நடைபெற்றது.  ப்ரோபஸ் கிளப் மற்றும் ரஷ்ய கலை அறிவியல் மையம் ஆகியவை இணைந்து டாக்டர் கமலி ஸ்ரீபால், டாக்டர் காமாட்சி சுந்தரம் இருவருக்கும் சிறந்த சேவைகள் ஆற்றியதற்காக விருதுகள் வழங்கின.

செவிவழிக் கல்வி!

இந்தியப் பெண்கள் சங்க தமிழகத் துணைத் தலைவர், குடும்பநல கட்டுப்பாட்டு சங்க பொறுப்பாளர் என, ஏகப்பட்ட சமூகப் பொறுப்புகளில் சுறுசுறுப்பாக இயங்கும் கமலியின் வீடு தி.நகர் நடேசன் பூங்காவை ஒட்டிய கண்ணதாசன் சாலையில் உள்ளது. வீட்டின் ஒரு பகுதியில் உள்ள க்ளினிக்கில், வி.ஐ.பி.க்கள் வந்துபோனபடி இருக்கிறார்கள். டீன்-ஏஜ் பெண்கள், கல்லூரி மாணவிகள், குடும்பத் தலைவிகள் எனப் பலதரப்புப் பெண்களும் கவுன்சிலிங்குக்காக வருகிறார்கள்.

''சிறப்பு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் வரை போன என் கணவர் ஸ்ரீபாலை மருத்துவப் போராட்டம் நடத்தி மீட்டு வந்தேன். இதனால் என்னை 'சத்தியவான் சாவித்திரி’ என்பார்கள். மருத்துவத்தில், முதுமைகாலச் சத்துணவு குறித்து ஆராய்ச்சி செய்து உள்ளேன். இப்போதெல்லாம் மூட்டு வலி, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு என்று இளமை யிலேயே அவதிப்படுகிறார்கள். முதுமையைத் தள்ளிப் போடவும் இளமையைத் தக்கவைக்கவும் ஆண் - பெண் பாகுபாடு இல்லாமல் வி.ஐ.பி.-க்கள் பலரும் ஆலோசனைக்காக வருகிறார்கள். உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, அடம்பிடிக்கும் குழந்தைகள், பாதை மாறும் இளம் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள், கணவன்-மாமியார் கொடுமை எனப் பல பிரச்னைகளோடு சாதாரண மனிதர்களும் என்னிடம் கவுன்சிலிங் பெற வருகின்றனர். இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்துதான் இந்தச் சிறப்பு விருதை எனக்கு வழங்கி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்'' என்று சிரிக்கிறார்!

அடுத்த கட்டுரைக்கு