Published:Updated:

அசத்தல் அரசுப்பள்ளி!

அசத்தல் அரசுப்பள்ளி!

##~##

'கவர்மென்ட்டு ஸ்கூல்ல பாடமே சொல்லித் தர்றது இல்லை... கடனை வாங்கியாச்சும் குழந்தையை இங்கிலீசு ஸ்கூல்ல சேர்த்துடணும்’ - இப்படிப் பேசும் பெற்றோரைத்தான் பார்த்து இருப்போம். ஆனால், தனியார் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட குழந்தைகளையும் தன் வசம் சுண்டி இழுத்துக்கொண்டு இருக்கிறது தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி ஒன்று!

 மாரண்ட அள்ளியை அடுத்த நல்லாம்பட்டியில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய அரசு நடு நிலைப் பள்ளிதான் அது. பார்க்கும்போதே ஈர்க்கிறது பள்ளிச் சூழல். குழந்தைகளின் படைப்புகள் சார்ட், வெள்ளைத்தாள் வடிவிலும், உலகத் தலைவர்களின் புகைப்படங்கள், கைவினை பொருட்கள் ஆகியவை வகுப்பறைகளை அலங்கரித்துக்கொண்டு இருந்தன.

அசத்தல் அரசுப்பள்ளி!

வகுப்பறை ஒன்றில் எட்டிப் பார்த்து, 'இன்ஸ்பெக்ஷன் எதுவும் இருக்கா?’ என்றேன். ''வருஷம் முழுக்கவே எங்க கிளாஸ்ல இதை எல்லாம் பார்க்கலாம் சார்'' என்கின்றன சுட்டிகள். குழந்தைகளின் பயன்பாட்டுக்காக அரசு வழங்கிஉள்ள நவீன கல்வி உபகரணங்கள் பெரும்பாலான பள்ளிகளில் இன்னும் பேக்கிங்கூட பிரிக்கப்படாமல் தூங்குகிறது. ஆனால், இங்கு இரண்டு லேப்-டாப், ஒரு டெஸ்க்-டாப் கம்ப்யூட்டர்கள், ஒரு எல்.சி.டி- மானிட்டர், இரண்டு டி.வி-க்கள் தினசரி பாடம் கற்கப் பயன்படுத்தப்படுகின்றன.

அசத்தல் அரசுப்பள்ளி!

பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கிருஷ்ணன், ''இதுவரை இங்கே வந்த ஆசிரியருங்க, 'வந்தோம், போனோம்’னுதான் இருந்தாங்க. அன்பழகன் சார் மூணு வருஷத்துக்கு முன்ன எங்க ஸ்கூலுக்குத் தலைமை ஆசிரியராக வந்ததுக்குப் பிறகுதான் இந்த மாற்றம். அவர் தலைமையில் இங்கே அஞ்சு ஆசிரியர்களின்  உழைப்பு அபாரமானது. முதல் வகுப்பு தொடங்கி எட்டாம் வகுப்பு வரை இங்கே படிக்கிற 97 குழந்தைகளையும் தங்கள் குழந்தையாகவே பாவிச்சு பாடம் சொல்லித் தர்றாங்க.

விநாடி- வினா, ஓவியம்னு நிறைய போட்டிகள் நடத்தி, மாணவர்களின் படைப்புகளை வகுப்பறையில் காட்சிக்குவைப்பாங்க. 'பாடங்களை உள்வாங்க காதுகளைவிட கண்கள்தான் சிறந்த கருவி’னு அன்பழகன் அடிக்கடிச் சொல்வார். எல்.சி.டி. புரொஜெக்டர் உதவியோடு பாடம் படிக்கிறதால விஷயம் அப்படியே மனசுல பதியுறதாக் குழந்தைங்க சொல்றாங்க. கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் மெஷின் ஆகியவற்றை இங்கிருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் இயக்கத் தெரியும். வார்த்தைகளுக்கு அர்த்தம் தேட எங்க குழந்தைகள் டிஜிட்டல் டிக்ஷ்னரி பயன்படுத்தும் அழகு பூரிக்கவைக்குது.  

இங்க பள்ளிப் பாராளுமன்றம் ஒண்ணும் செயல்படுது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலையில் பாராளுமன்றம் கூடும். பிரதமர், சபாநாயகர், துணை சபாநாயகர் தலைமையில் உறுப்பினர்கள் பள்ளிப் பிரச்னைகளை ஆராய்வாங்க. மற்ற குழந்தைகளும் ஆசிரியர்களும் இதில் பார்வையாளர்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உலகம் வெப்பமயமாதல், மழைநீர்

அசத்தல் அரசுப்பள்ளி!

சேகரிப்பு, குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமைனு வாரம் ஒரு தலைப்பில் விவாதிப்பாங்க. இதைக் கேள்விப்பட்டு கடந்த ஆண்டு மட்டும் தனியார் பள்ளிக்கூடத்துக்குப் போய்க்கிட்டு இருந்த 10 குழந்தைங்க எங்க ஸ்கூலுக்கு வந்துட்டாங்க. இந்த வருஷம் 18-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வரப் போறாங்க'' என்றார் பெருமிதத்தோடு.

தலைமையாசிரியர் அன்பழகன், ''இந்த மாற்றத்துக்குக் காரணம் ஆசிரியர்கள் மட்டும் அல்ல; பெற்றோர்- ஆசிரியர்கள் கழகத் தலைவர் ஊராட்சித் தலைவர், ஊர் கவுண்டர், கிராம கல்விக் குழு தலைவர் ஆகியோரின் ஒத்துழைப்பும் இருந்ததால்தான் இது சாத்தியமாகி இருக்கு...'' என்கிறார் தன்னடக்கத்துடன்!

அரசு பள்ளி குழந்தைகளையும் அதி புத்திசாலிகளாக உருவாக்க முடியும் என்பதற்கு இந்தப் பள்ளி ஒரு நிகழ்கால சாட்சியம்!

- எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு