Published:Updated:

சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தக் கூடாது: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூன் 10,2011

சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தக் கூடாது: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தக் கூடாது என்றும், இத்திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

மேலும், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தும் அரசின் சட்ட திருத்ததுக்கு இடைகால தடைவிதித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முந்தைய திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டத்தை புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அரசு நிறுத்தி வைத்தது. பாடத் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறி. இந்தத் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன் சமச்சீர் கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, இக்கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதாக புதிய சட்டத் திருத்தம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, வழக்கறிஞர் ஷியாம் சுந்தர், பெற்றோர் மனோன்மணி உள்பட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ##~~##

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணனிடம் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பது என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது? பெற்றோர்கள் - ஆசிரியர்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டதா? பாடத் திட்டங்கள் தரமில்லை என்று எந்தக் கமிட்டி பரிந்துரை செய்தது? என்று நீதிபதி கேள்விகளை அடுக்கினார்.

மேலும், அரசின் இந்த முடிவால் பாதிக்கப்படபோவது பெற்றோரும், மாணவர்களும்தான். சமச்சீர் கல்வி சட்டம் சரியானது என்று இந்த நீதிமன்றமும் (சென்னை உயர் நீதிமன்றம்) உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது.

உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி சில உத்தரவுகளை முந்தைய அரசு பின்பற்றவில்லை என்பதற்காக சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதா? அந்த உத்தரவுகளை புதிய அரசு பின்பற்ற வேண்டியதானே?

சமச்சீர் கல்வி பாடத்தில் முந்தைய அரசின் புகழ் பாடுவது போல பாடங்கள் இருந்தால், அதை நீக்க வேண்டியது அவசியம்தான். அதை விடுத்து ஒட்டு மொத்த பாடத்தையும் ரத்து செய்வது ஏன்?

இது மக்களின் பணம். இந்த பணம் பெரிய விஷயமில்லை என்று அட்வகேட் ஜெனரல் கூறுவதை ஏற்க முடியாது. இந்த அரசு கொண்டு வந்த திருத்த சட்டமானது, இந்த நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த தீர்ப்பை ஒன்றும் இல்லாதது போல் செய்கிறது.

பள்ளிப் பாட புத்தகத்தில் எந்த ஒரு தனி நபர் அல்லது கட்சிகளின் புகழ் பாடும் விதமாக இருக்கக் கூடாது என்ற அரசின் வாதத்தை நாங்கள் ஏற்கிறோம்," என்று கூறினார், தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்.

இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் நவ நீதகிருஷ்ணன், "சமச்சீர் கல்விக்கான பாடங்கள் தரமற்றவை. இது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் கொடுத்த ஏராளமான புகார்களின் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பதென்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்," என்று வாதிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கில் இன்று மாலை உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்த நிலையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தக் கூடாது என்றும், இத்திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தும் அரசின் சட்ட திருத்ததுக்கு இடைகால தடைவிதித்தும் அவர்கள் உத்தரவிட்டனர்.

ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கும், எஞ்சிய வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலும் தொடர வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.