Published:Updated:

என்னால் முடியும்...நான் செய்தேன்..!

சரா படங்கள்: எம்.உசேன், ஆ.வின்சென்ட் பால்

என்னால் முடியும்...நான் செய்தேன்..!

சரா படங்கள்: எம்.உசேன், ஆ.வின்சென்ட் பால்

Published:Updated:
##~##

நாம் தேவையில்லை எனத் தூக்கி எறியும் அட்டைகளை வைத்தே அழகாகக் காற்றாலை செய்து, பேட்டரியால் அதை இயக்கி அசத்தி இருக்கிறார்கள் தருமபுரி மாவட்டம், அரங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் ஹரிநமோ, சாந்தமூர்த்தி, மூர்த்தி மூவரும். ''சார்கிட்ட அட்டையை வெச்சுக் காற்றாலை செய்யலாம்னு நாங்கதான் சொன்னோம். எப்படிச் செய்யலாம்னு சார் ஐடியா சொன்னார். அதேபோல செஞ்சோம். சூப்பரான காற்றாலை ரெடியாச்சு. சோஷியல் சயின்ஸ்ல எங்களுக்கு ஏ1 கிரேடு கிடைச்சு இருக்கு'' என்கிற ஹரிநமோவின் குரலில் அத்தனை மகிழ்ச்சி.

அறிவியலில் ஆர்வம் மிகுந்த சாந்தமூர்த்தி, ''எங்க ஊர் முழுக்க விவசாயம்தான். எனக்குக் கொடுக்கும் அசைன்மென்ட் எல்லாமே விவசாயம் சம்பந்தமாவே இருக்கிறதால், எனக்கு ரொம்ப ஈஸியா இருக்கு. உளுந்து, எள் இந்த மாதிரி பயிறு வகைகளைத் திரட்டி நோட்டுல ஒட்டி, அந்தத் தானியங்களின் பெயர்களை எழுதணும். பூக்களை எடுத்துட்டு வந்து, அதன் பாகங்களைக் குறிக்கணும். எல்லாமே ஈஸியாவும் ஜாலியாவும் இருக்கு. மார்க்கும் போடுறாங்க'' என்கிறான் உற்சாகமாக.  

என்னால் முடியும்...நான் செய்தேன்..!

மாணவர்களின் குதூகலம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த மாற்றத்தை ஆசிரியர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர்? கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு தமிழ் ஆசிரியர்

என்னால் முடியும்...நான் செய்தேன்..!

ரீட்டாவிடம் பேசினோம். ''மாணவர்களிடம் ஒளிந்து இருக்கும் திறமைகளை வெளியே கொண்டுவர இந்தப் புதிய முறை நிச்சயம் உதவும். வகுப்பறையிலேயே மாணவர்களை நாடகம் போடவைக்கிறோம்.

இதனால் அவர்களின் கலைத் திறன் வளர்ந்து கூச்ச சுபாவம் போகிறது. கதை, பாடல்கள், கட்டுரைகளை அவர்களாகவே எழுதுகின்றனர். ஒவ்வொரு மாணவரும், 'நமக்கும் திறமை இருக்கிறது’ என்று தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள இந்தப் புதிய மதிப்பீட்டு முறை ஒரு நல்ல களம்'' என்கிறார்.

காஞ்சிபுரம் - உத்தண்டி அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை பா.சர்மிளா சொரூபராணி, 'எங்க பள்ளியில் மாணவர்களின்  வயதுக்கும் வகுப்புக்கும் ஏற்றவகையில் நாங்கள் அசைன்மென்ட் கொடுக்கிறோம்.அதுவும் அவங்க வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செயல்பாடுகளில் ஈடுபட வழிகாட்டுகிறோம். அதைச் செய்யும்பொழுது தாங்கள் வாழ்கின்ற சுற்றுப்புறச்சூழலை ஆழமா அவங்களால புரிஞ்சுக்க முடியுது. இது இந்த திட்டத்தின் சிறப்பம்சம்' என்கிறார்.  

மாணவர்களைத் தனித்தனியாக மதிப்பீடு செய்வதுதான் சி.சி.இ. முறையின் முக்கியமான அம்சம். இதைச் செயல்படுத்த, 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதாச்சாரம் அவசியம். அதேபோல், கலை, விளையாட்டுகளில் சிறந்த முறையில் பயிற்சி அளிப்பதற்கான ஆசிரியர்களையும் அரசு நியமிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை எழுகிறது.

மாணவர்களுக்கு எதில் ஆர்வம் என்பதை அறிந்து, அதற்கு ஏற்ற வகையில் பயிற்றுவிப்பதுதான் சிறந்தது. புதிய முறையில் இது கவனமாகப் பின்பற்றப்படுகிறது. ''நடிப்பதில் ஆர்வம் உள்ளவர்களை ஒரு குழுவாகப் பிரித்து, அவர்களாகவே ஒரு நாடகத்தை உருவாக்கி நடிக்கும்படி செய்யலாம். தகவல்களைத் திரட்டுவதில் சிலருக்கு ஆர்வம் இருக்கும். பேச்சு, எழுத்து, ஆல்பம் தயாரிப்பது, கதை சொல்வது, கைவினைப் பொருட்களை உருவாக்குவது என மாணவர்களுக்கு என்ன ஆர்வமோ, அதில் பயிற்சி கொடுக்க வேண்டும்'' என்கிறார் சி.சி.இ. முறை உருவாக்கக் குழுவில் இடம்பெற்றவரும், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநருமான ந.லதா.

என்னால் முடியும்...நான் செய்தேன்..!

வகுப்பறைச் சூழலையே மாற்றி அமைக்கக்கூடிய இந்தப் புதிய கல்விமுறை, உண்மையில் மிகப் பெரிய மாற்றம். இது வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வர இன்னும் சில காலம் தேவைப்படும். இத்தனை ஆண்டு காலம் மனப்பாடத்தை மட்டுமே ஊக்குவித்துவந்த நமது கல்விமுறையும் வகுப்பறையும், இப்போது புரிந்துகொண்டு படிக்கும் முறைக்கு மாறி இருக்கின்றன. ''முதல் பருவம் முடிந்த நிலையில், ஆசிரியர்களுக்கு மீண்டும் பயிற்சிகள் அளிக்கப்படும். எஃப்.ஏ. மதிப்பீட்டு முறையை சிறப்பாகச் செயல்படுத்துவதற்குத் துணைபுரியும் வகையில், இரண்டாவது பருவத்துக்கான பாடப் புத்தகங்களில் வழிகாட்டும் பகுதிகள் இடம்பெற்று உள்ளன. ஆசிரியர்களுக்கு இன்னும் எளிமையாகப் புரியவைக்க, சி.டி.க்களை வெளியிடும் திட்டமும் பள்ளிக் கல்வித் துறையிடம் இருக்கிறது'' என்றார் லதா.

என்னால் முடியும்...நான் செய்தேன்..!

பள்ளிகளில் சி.சி.இ. முறையால் மாணவர்களுக்கு உற்சாகம் ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசுக்கு யுனிசெஃப் அமைப்பு சமர்ப்பித்து உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசுதான் முதல் முறையாக மாநிலக் கல்வியில் இந்த முறையைச் செயல்படுத்தி வருகிறது. இது ஒரு மாபெரும் மாற்றம். இதன் வெற்றி, வரும் காலச் சந்ததியின் சிந்தனை ஓட்டத்தையே மாற்றி அமைக்கப்போகிறது!