Published:Updated:

விடுதலைப் போராட்ட வீராங்கனை

வை.மு.கோதைநாயகி

விடுதலைப் போராட்ட வீராங்கனை

வை.மு.கோதைநாயகி

Published:Updated:
##~##

எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், கவிஞர், பத்திரிகை ஆசிரியர், விடுதலைப் போராட்ட வீராங்கனை எனப் பன்முகம் கொண்டவர், வை.மு.கோதைநாயகி. சென்னை, திருவல்லிக்கேணியில் டிசம்பர் 1, 1901-ம் ஆண்டு பிறந்தார். தந்தை - நீர்வளுர் என்.எஸ். வெங்கடாச்சாரியார், தாயார் - பட்டம்மாள்.

எழுத்துப் பணி:

விடுதலைப் போராட்ட வீராங்கனை

சிறுமியாக இருக்கும்போதே கோதைநாயகி அம்மாளுக்கு நாடகங்கள் மற்றும் இலக்கியத்தில் ஆர்வம் மிகுதியாக இருந்தது. ஆனால், அவர் பள்ளிக்கூடம் சென்றது இல்லை. வீட்டில் எப்போதும் திருவாய்மொழி, பாசுரங்கள் பாடிக்கொண்டு இருப்பார். அவரிடம் இருந்த கற்பனைத் திறனைக் கண்டு வியந்த அவரது கணவர் வை.மு.பார்த்தசாரதி, அவருக்கு முறைப்படி தமிழ் கற்றுத்தந்தார்.

கோதைநாயகி அம்மாள் முதல் முயற்சியாக 'இந்திர மோகனா’ என்ற நாடகத்தை உருவாக்கினார். இதை எழுதுவதற்கு, இவருடைய தோழி பட்டம்மாள் என்பவர் உதவினார். இந்த நாடகம் 1924-ம் ஆண்டு நூலாக வெளியானது. இந்த நாடகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, தமிழில் தீவிரமாக எழுதத் தொடங்கினார். 'வைதேகி’ என்ற நாவலை எழுதினார். அது, அவரது 'ஜகன்மோகினி’ மாத இதழில் தொடராக வெளிவந்தது.

'நாவல் ராணி' 'கதா  மோகினி’ என்று எல்லாம் போற்றப்பட்ட கோதைநாயகி அம்மாள், 35 ஆண்டு காலம் இணையற்ற எழுத்தாளராக வலம் வந்தார். அவர் 115 நாவல்களை எழுதி இருக்கிறார். இரு சிறுகதைத் தொகுதிகள், மூன்று நாடகங்கள், இரண்டு உரைநடை நூல்கள் ஆகியவையும் வெளிவந்து உள்ளன.

விடுதலைப் போராட்ட வீராங்கனை

விடுதலைப் போராட்டத்தில் பங்கு:

வை.மு.கோதைநாயகி அம்மாள் 1925-ம் ஆண்டு காந்தியடிகளைச் சந்தித்தார். அன்று முதல் கதர் ஆடை அணியத் தொடங்கினார். காந்தியிடம் இருந்து எளிமையைக் கற்றுக்கொண்டார். காந்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 1931-ம் ஆண்டு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டார். 1932-ல் சிறைக்குச் சென்றார். காங்கிரஸ் இயக்கத்தில் செயல்திறன் மிக்க உறுப்பினராக விளங்கினார். பல்வேறு கூட்டங்களில் தேசிய எழுச்சிமிக்க பாடல்களையும் பாடி இருக்கிறார்.

பெண்களின் வழிகாட்டியாகவும், நாட்டுப்பற்று மிக்க விடுதலைப் போராட்ட வீராங்கனையாகவும், இலக்கியவாதியாகவும் திகழ்ந்த கோதைநாயகி அம்மாள், பிப்ரவரி 20, 1960-ல் மறைந்தார்.