Published:Updated:

சமச்சீர் கல்வி: உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு

புதுடெல்லி, ஜூலை 19,2011

சமச்சீர் கல்வி: உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே செயல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது தமிழக அரசு. ##~~##

தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை 1 முதல் 10-ம் வகுப்பு வரை நடப்பு கல்வி ஆண்டிலேயே செயல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கியது.

மாணாக்கர்களின் நலன் கருதி, ஜூலை 22-ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாடப்புத்தங்களை வழங்கிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டது.

இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு இன்று தாக்கல் செய்தது.

சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழுள்ள பாடத்திட்டங்கள் தரமற்றவை என்று குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, பழைய பாடத்திட்டமே இந்த ஆண்டு தொடர அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளது.

தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வியாளர்கள் கேவியட் மனு தாக்கல்...

இதனிடையே, தமிழகத்தைச் சேர்ந்த ஷ்யாம் சுந்தர், பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, மணிமேகலை, சேஷாத்ரி உள்ளிட்டவர்கள் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு செய்துள்ள மேல் முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பை வழங்குவதற்கு முன்பு தங்களது கருத்துகளையும் கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

முன்னதாக, மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வதற்காக, தமிழக கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம், கல்வித்துறை செயலாளர் சபீதா, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் திங்கட்கிழமை இரவே டெல்லி விரைந்தது குறிப்பிடத்தக்கது.