Published:Updated:

ஊராட்சி ஒன்றியத் தலைவருடன் ஒரு நேர்காணல்!

த.சிங்காரவேலன், தருமபுரி. படங்கள்: வி.ராஜேஷ்

##~##

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நாகதாசம்பட்டி நடுநிலைப் பள்ளியில் பயிலும் 6-ம் வகுப்பு மாணவர்கள், தங்கள் பகுதியின் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் இரா.மதியழகனை நேர்காணல் செய்தனர். பள்ளியின்  அழைப்புக்கு இணங்க வகுப்புக்கு வந்த இரா.மதியழகன், ஊராட்சி ஒன்றியக் குழுவின் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவரித்தார். அந்த நேர்காணலின் விவரம்:

மு.மலர்விழி: ஊராட்சி ஒன்றியம் என்றால் என்ன?

''உள்ளாட்சி அமைப்பு முறையில் பல ஊராட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு அமைக்கப்படுவது, ஊராட்சி ஒன்றியம். 5,000 பேருக்கு ஒரு பிரதிநிதி அமையும் வகையில் இதற்கான வார்டு அமைந்து உள்ளது.

வெ.பிரவீன்குமார்: நீங்கள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்? பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? உங்களுக்கு அரசு ஊதியம் வழங்குகின்றதா?

''முதலில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக நான் வார்டு மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டேன். பின்னர், என்னைப் போன்று தேர்ந்து எடுக்கப்பட்ட 31 வார்டு உறுப்பினர்களும் வாக்களிக்கும் வகையில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இதன் மூலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஆனேன். இதன் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள். இது மக்களுக்கு சேவை செய்யும் ஒரு கௌரவப் பதவி என்பதால், அரசு ஊதியம் கிடையாது.''

ச.கோகுல்: ஊராட்சி ஒன்றியக் குழுவின் முக்கியப் பணிகள் என்ன?

''ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமங்களின் குடிநீர், சாலை வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்துதல், பள்ளிக் கட்டடங்கள் கட்டுதல், பழுதுபார்த்தல், வாரச் சந்தைகள், கால்நடை மருந்தகங்கள் போன்றவற்றை அமைத்தல் முதலான மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது.''

ஊராட்சி ஒன்றியத் தலைவருடன் ஒரு நேர்காணல்!

மு.இசையழகி: மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நிதி எப்படி கிடைக்கிறது?

''மத்திய, மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பெருமளவு நிதிஉதவி அளிக்கின்றன. அது தவிர நபார்டு வங்கி உதவியுடன் சில திட்டங்கள் நிறைவேற்றப் படுகின்றன. ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் போன்றவற்றுக்கு மத்திய அரசு நிதிஉதவி அளிக்கிறது.''

சு.பவித்ரா: பென்னாகரம் ஒன்றியத்தில் சிறப்பாகச் செயல்படுத்திவரும் பணிகள் சிலவற்றைச் சொல்லுங்களேன்...

''இந்த ஆண்டு ஆறு ஊராட்சிகளில் 'தாய்’ எனும் திட்டத்தின் கீழ், அந்த ஊராட்சிக்குத் தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்படும் வகையில் செயல்படுத்திவருகின்றோம். அதேபோல் தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான 'பசுமை வீடுகள்’ திட்டத்தின்படி 233 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது.''

ஊராட்சி ஒன்றியத் தலைவருடன் ஒரு நேர்காணல்!

அ.விஷ்வா: எங்கள் பகுதியில் குடிநீரில் ஃபுளோரைடு அதிகம் உள்ளது எனக் கண்டறியப்பட்டு உள்ளது. அதற்கான தீர்வாக என்ன திட்டம் உள்ளது?

''ஃபுளோரைடு பாதித்த பகுதிகளுக்கு வெகு விரைவில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டு உங்கள் பிரச்னை தீர்க்கப்படும்.''

மு.அர்ச்சனா: மக்கள் சுகாதாரத்துடன் வாழ என்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன?

''மக்களின் சுகாதாரத்துக்கு மிக முக்கியமான ஒன்று கழிப்பிட வசதி. ஒவ்வோர் வீட்டுக்கும் ஒரு கழிப்பிடம் என்பதை நிறைவேற்ற நிதிஉதவி செய்கின்றோம். அத்துடன், கிராமங்களில் பொதுக் கழிப்பிட வசதி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் கழிப்பிட வசதி செய்துதரப்பட்டுவருகிறது.''

எ.எல்லம்மாள்: கல்விக்கு ஊராட்சி ஒன்றியம் ஆற்றிவரும் பணிகள் யாவை?

''தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் பள்ளிக் கட்டடங்களைப் பழுதுபார்த்தல், பராமரித்தல், குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்துதருதல் ஆகியவை முக்கியமான பணிகள். தற்போது உங்கள் பள்ளியில் நடைபெற்றுவரும் இத்தகைய பணிகள்கூட அதன்கீழ் வருவதுதான்.''  

மா.வான்மதி: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நீங்கள் ஆற்றிவரும் பணிகள் என்ன?

''பொது இடங்கள், பள்ளிகள், வீடுகளில் சமூகக் காடுகள் வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம். மரங்கள் வளர்க்க ஊக்குவிப்பதுடன், மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடைசெய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. இதில் உங்களைப் போன்ற பள்ளி மாணவர்களும் பங்கேற்க வேண்டியது அவசியம்.''                  

பெ.பூவரசன்: மக்கள் கோரிக்கைகளுக்காக எந்த வகையில் உங்களை அணுகலாம்?

''ஊராட்சிகளின் கிராம சபைக் கூட்டங்களில் உங்களின் கோரிக்கைகளை வைக்கலாம். அடுத்து, உங்கள் வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஆகியோரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம். அந்தக் கோரிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.''

மு.இசையழகி: உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

''பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யும் வகையில் 'தாய்’ திட்டத்தை நிறைவேற்றுவதுதான் முக்கியமான எதிர்காலத் திட்டம்.''

இதேபோல் உங்கள் பகுதிக்கு உரிய ஊராட்சி ஒன்றியத் தலைவரை அழைத்துவந்து வகுப்பிலேயே மாணவர்கள் நேர்காணல் செய்யலாம். அவர்களின் ஈடுபாட்டுக்கு ஏற்ப ஆசிரியர்கள் மதிப்பீடு வழங்கலாம்.

ஒருங்கிணைப்பு:
தலைமை ஆசிரியை - கலைச்செல்வி
பாட ஆசிரியர் - செல்வராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு