Published:Updated:

கர்ணன் கண்ணன் உரையாடல்!

கர்ணன் கண்ணன் உரையாடல்!

கர்ணன் கண்ணன் உரையாடல்!

கர்ணன் கண்ணன் உரையாடல்!

Published:Updated:
##~##

போர்க்களத்தில் வீழ்ந்துகிடக்கும் கர்ணனைக் காண  அந்தணர் வடிவில் வருகின்றான் கண்ணன். அவர்கள் இருவருக்கும் நடைபெறும் உரையாடல்...

கண்ணன்: ''வரையாது வாரி வழங்கும் வள்ளலே! உம்மை இந்தக் கோலத்திலா யான் காணுதல் வேண்டும்? என் உள்ளம் பதறுகின்றதே!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கர்ணன்: ''ஐயா! வாருங்கள். உங்களுக்கு உதவ இயலாத நிலையில் உள்ளதை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்.''

கண்ணன்: ''இவ்விடத்தில், என்னிடம் கொடுக்க உம்மிடம் ஒன்றும் இல்லை என்று யானும் அறிவேன். அதனால்...''

கர்ணன்: ''சொல்லுங்கள் அந்தணரே! இல்லை என்று இதுவரையில் யான் சொன்னதில்லை.''

கண்ணன்: ''இதுவரையில் சொன்னதில்லை. ஆனால் இப்போது... தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வியது போல் வீழ்ந்துகிடக்கும் உம்மிடம் யான் எதை யாசிப்பது?''

கர்ணன்  கண்ணன் உரையாடல்!

கர்ணன்: ''அந்தணரே... என் உடல்தான் வீழ்ந்து கிடக்கிறது. உள்ளம் வீழவில்லை. யான் இல்லை என்று சொல்லாது அடியேன் கொடுக்கக்கூடியதைக் கேளும். தருகிறேன்.''

கண்ணன்: ''பச்சைப் புரவிகள் பூட்டிய தேரின்கண் வரும் சூரிய குமாரா! நான் மேருமலையில் தவம்புரியும் வறியவன். நீ வேண்டியவர்க்கு வேண்டியன யாவும் வழங்கும் வள்ளல் எனக் கேள்விப்பட்டேன். உன்பால் யாசிக்கும் பொருட்டு வந்தேன். இந்த நிலையில் உன்னால் முடிந்ததைக் கொடுத்தருள்!''

கர்ணன்: ''அந்தணரே! உமது வார்த்தைகள் என் செவியில் அமுதம் போல் பாய்கின்றது. ஆனாலும் இந்த அமுதம் என் உயிரைக் காக்க வல்லது அல்ல. ஐயனே... அடியேன் கொடுக்கக்கூடியதை விரைந்து கேட்டருளுங்கள்.''

கண்ணன்: ''எண்ணில் அடங்கா தருமம் செய்த வீரனே! யான் எண்ணியதைக் கேட்கிறேன். உன் புண்ணியம் முழுதும் எனக்குக் கொடு.''

கர்ணன்: ''அந்தணன் பெருமானே! இப்போது என் உயிர் கலங்கித் தடுமாறுகின்றது. அவ்வுயிர் உள்ளேயோ, வெளியேயோ அறிகிலேன். அடியேன் அள்ளி அள்ளி வழங்கும் காலத்தில் நீர் வந்து கேட்க, யான் வழங்கும் பேறு பெற்றிலேன். பிரம்ம தேவரும் உமக்கு இணை இல்லை. ஆதலால், யான் செய்த புண்ணியம் உம்மைப் பார்க்கப் பெரிதோ? பெற்றுக் கொள்ளும்.''

கர்ணன்  கண்ணன் உரையாடல்!

கண்ணன்: ''வள்ளலே! என் உள்ளம் மகிழ்கின்றது. ஆனாலும் வெறும் வார்த்தைப் பயன் தருமோ? நீர் தாரை வார்த்துக் கொடு! வாங்கிக்கொள்கிறேன்.''

(தனது மார்பில் பாய்ந்து உள்ள அம்பைப் பிடுங்கி,  வெளிப்பட்ட உதிரத்தைக் கையில் ஏந்திக் கண்ணனிடம் தருகிறான் கர்ணன்.)

கர்ணன்: ''எனது புண்ணியம் அனைத்தும் தந்தேன் அந்தணரே!''

கண்ணன்: (மகிழ்ந்து) ''அப்பா கர்ணா! உலகில் தோன்றிய அனைத்திற்கும் அழிவு உண்டு. ஆனால், உனது வள்ளல் தன்மைக்கு மட்டும் அழிவே இல்லை. உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்... தருகிறேன்.''

கர்ணன்: ''பெருமானே! அடியேன் செய்த வினையின் காரணமாக எனக்குப் பல பிறவிகள் உண்டாகில், அப்பிறவிகள் தோறும் உதவி என்று கேட்டோர்க்கு இல்லை என்று உரைக்காத உள்ளத்தைக் கொடு. அது போதும்.''

கண்ணன்: ''கர்ணா, தரும தேவதையின் தலைமகனே! நீ எத்தனை பிறவி எடுப்பினும் அப்பிறவிகள்தோறும் ஈகையும், செல்வமும் பெற்று, முடிவில் முக்தியும் பெறும் வரம் தருகின்றேன்.''

கர்ணன்: ''எனது உயிர் என்னைவிட்டுப் பிரியும் நேரத்திலும்கூட உள்ளம் மகிழ்கின்றேன் அந்தணரே. ஓர் ஐயம்... எனக்கு வரமும் முக்தியும் அளிக்கும் தாங்கள் யாரோ?''

கண்ணன்: ''இன்னுமா தெரியவில்லை கர்ணா? உனது தர்மத்தையே தானமாகப் பெறும் சக்தி கண்ணனைத் தவிர வேறு யாருக்கு இருக்கிறது?''

கர்ணன்: (மகிழ்வுடன்) ''கண்ணா... நீயா...?''

கண்ணன்: ''நானேதான்! தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்! முடிவில் தர்மம் வெல்லும்!''

(நீலமேகம் போன்ற மேனியும், பஞ்சாயுதமும், பவளவாயும் கருணைக் கண்களுமாகக் கண்ணன் காட்சி தருகிறான். கர்ணன் கண்ணீருடன் கை தொழுகிறான்.)

* இந்த உரையாடலை, வகுப்பில் இரண்டு இரண்டு மாணவர்களாகச் சேர்ந்துப் பேசலாம். அவர்களின் ஈடுபாட்டுக்கு ஏற்ப ஆசிரியர்கள் மதிப்பீடு செய்யலாம்.

- கா.விஜயலட்சுமி, ஆசிரியை,
காமராஜ் மேல்நிலைப் பள்ளி,
கிருஷ்ணாபுரம், விருதுநகர் மாவட்டம்.