Published:Updated:

இராணி மங்கம்மாள் [நாடகம்]

இராணி மங்கம்மாள் [நாடகம்]

இராணி மங்கம்மாள் [நாடகம்]

இராணி மங்கம்மாள் [நாடகம்]

Published:Updated:
##~##

களம் - அரசவை; கதை மாந்தர்கள் - இராணி மங்கம்மாள், மன்னர் முத்துவீரப்பன், அமைச்சர், புலவர், நட்பு நாட்டு அரசர்கள் மற்றும் அவைக் காவலர்கள்...

மதுரையை ஆண்டுவந்த சொக்கநாத நாயக்கர் மறைந்தபோது, அவருடைய மகன் அரங்க கிருஷ்ணமுத்து வீரப்பன் இளம்வயதினராக இருந்தான். எனவே, சொக்கநாத நாயக்கரின் மனைவி மங்கம்மாள் காப்பாட்சியராக இருந்து ஆட்சி செய்தார். உரிய வயது வந்தவுடன் மகனை மதுரைக்கு அரசனாக முடிசூட்டி வைத்தார். அன்று...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவைக் காவலன்-1: ''மதுரை மன்னர்... நாயக்கர் குல திலகர் வருகிறார்... பராக்... பராக்...''

அவைக் காவலன்-2: ''மன்னரின் அன்னை இராணியார் அவைக்கு வருகிறார்... பராக்... பராக்...''

(இராணி மங்கம்மாளும், மன்னர் முத்துவீரப்பனும் அவைக்கு வருகை புரிகின்றனர்.)

அவையோர்: ''இராணி மங்கம்மாள் வாழ்க... வாழ்க... மன்னர் முத்துவீரப்பன் வாழ்க... வாழ்க..!''

(மன்னரும் அரசியாரும் அவையோருக்கு வணக்கம் தெரிவித்து அமர்கின்றனர்.)

இராணி மங்கம்மாள் [நாடகம்]

அமைச்சர்: ''மன்னருக்கும் அரசியாருக்கும் வந்தனம். நம் மன்னர் முடிசூட்டியதையட்டி நட்பு நாட்டரசர்கள் பரிசுப் பொருட்களோடு அவரை வாழ்த்த அவைக்கு வந்துள்ளனர். புலவர் பெருமக்களும் வாழ்த்துப் பாக்களோடு காத்திருக்கின்றனர் அரசியாரே...''

இராணி மங்கம்மாள்: ''அவர்களைச் சந்திப்போம் மந்திரியாரே... மகனே! புலவர் பெருமகனாருக்கு இந்நன்னாளில் அவர் மனம் மகிழ பரிசுப் பொருட்களை அளிப்பாயாக!''

முத்துவீரப்பன்: ''அப்படியே ஆகட்டும் தாயே!''

(மன்னர் முத்துவீரப்பன் நட்பு நாட்டு மன்னர்களின் வாழ்த்தினை ஏற்றுக்கொண்டு, புலவருக்கு பரிசினை அளிக்கிறார். பின்னர் இராணி மங்கம்மாளை நோக்கி...)

முத்துவீரப்பன்: ''தாயே... உங்களை வணங்குகிறேன். இதுநாள் வரை என் சார்பில் இந்த மதுரைப் பகுதியை ஆட்சி செய்துவந்தீர்கள். இன்று சான்றோர்கள் நிறைந்த அவையில் அரசனாக முடிசூட்டிவைத்தீர்கள். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தாங்கள் எனக்கு ஆசி வழங்குங்கள் தாயே..!''

இராணி மங்கம்மாள்: ''நலம் உண்டாகட்டும் மகனே! உனக்கு என் பூரண ஆசிகள். உனது தந்தையார் இறந்தபோது நான் மிக மனவேதனை அடைந்தேன். அவருடன் நானும் உடன்கட்டை ஏற முடிவுசெய்தேன். ஆனால், நீயோ சிறுவனாக இருந்தாய். இந்த மதுரை மக்களின் நலனுக்காக உடன்கட்டை ஏறும் முடிவைக் கைவிட்டேன். இன்று அரசனாக முடிசூட்டிக்கொண்ட நீ, மக்களுக்கு நல்லாட்சியைத் தரவேண்டியது கடமை மகனே!''

இராணி மங்கம்மாள் [நாடகம்]

முத்துவீரப்பன்: ''மிக்க மகிழ்ச்சி தாயே! நான் அரசனாக முடிசூட்டிக்கொண்டாலும் இதுநாள் வரை என் சார்பில் நல்லாட்சிபுரிந்துவந்த நீங்கள், உங்களது அனுபவம், ஆற்றல் ஆகியவற்றைக்கொண்டு ஆலோசனைகள் வழங்குங்கள் தாயே!''

இராணி மங்கம்மாள்: ''மகனே, முதலில் நாம் மக்களுக்காகவே ஆட்சி செய்கின்றோம் என்பதை மறந்து விடாதே! அடக்கத்தோடும் மதி நுட்பத்தோடும் ஆட்சிபுரிய வேண்டும்.''

முத்துவீரப்பன்: ''சரி தாயே... நம் நாட்டை எப்படி பகை அரசர்களிடம் இருந்து பாதுகாப்பது?''

இராணி மங்கம்மாள்: ''நீ பகைவரை எதிர்கொள்ள எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டியது அவசியம். அதே சமயம், நாம் பகைவரை ஆத்திரத்துடன் அணுகாமல் மிகுந்த பொறுமையுடன் செயல்பட வேண்டும்.''

முத்துவீரப்பன்: நாட்டில் ஏற்படும் முக்கியமான, சிக்கலான பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது தாயே?''

இராணி மங்கம்மாள்: ''சமயத்துக்கு ஏற்றவகையில் உன்னுடைய முடிவுகள் இருக்க வேண்டும். அதே நேரத்தில், எடுக்கின்ற முடிவைத் துணிச்சலுடன் எடுக்க வேண்டும். அதற்கான மன வலிமையை ஏற்படுத்திக் கொள்.''

முத்துவீரப்பன்: ''ஆஹா... மிக அருமை தாயே! என் மனக் கலக்கத்தைப் போக்கிவிட்டீர்கள்.''

இராணி மங்கம்மாள்: ''மகனே... இன்னொன்றையும் சொல்கிறேன் கேள். நீ இன்று நாடாளும் பொறுப்புக்கு வந்துவிட்டாய். மக்கள்தான் நமக்கு முக்கியம். அனைவரையும் உன் குழந்தைகள்போல் எண்ணி அன்பு செலுத்து. அதுதான் நீ மக்கள் மனதில் இடம்பெறுவதற்கான அடிப்படைக் குணமாகும்.''

முத்துவீரப்பன்: ''தாயே, உங்கள் அறிவுரைப்படியே ஆட்சிபுரிவேன். தந்தை சொக்கநாதர் இழந்த பகுதிகளைப் பகைவரிடம் இருந்து மீட்பேன். மக்களின் இறையுணர்வு வளர, கோயில்களைக் கட்டி அறச்செயல்கள் பல புரிவேன். அவர்களின் பசிப் பிணி போக்க நாடெங்கும் சத்திரங்களையும் சாவடிகளையும் கட்டுவேன். நேர்மையைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை என்பதே எனது ஆட்சியின் தாரக மந்திரமாக இருக்கும். அதற்கு உங்கள் ஆலோசனை இன்று மட்டுமல்ல; என்றென்றும் தொடர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.''

இராணி மங்கம்மாள்: ''நல்லது மகனே! உனது எண்ணமும் பேச்சும் என்னைப் பூரிக்கவைக்கிறது. இன்றுமுதல் உன் நல்லாட்சி தொடரட்டும்.''

முத்துவீரப்பன்: நன்றி அம்மா. நான் மக்கள் நலம் காண நகர்வலம் சென்றுவருகின்றேன்.

அவையோர்: ''இராணி மங்கம்மாள் வாழ்க... வாழ்க... மன்னர் முத்துவீரப்பன் வாழ்க... வாழ்க..!''

              (திரை)

நடிப்பு: தருமபுரி மாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கூத்தப்பாடி 8-ம் வகுப்பு மாணவர்கள்.

ஒருங்கிணைப்பு: தலைமை ஆசிரியை மைதிலி மற்றும் பாட ஆசிரியை வளர்மதி.

இந்த நாடகத்தை ஒத்திகையைப் பார்த்து, உங்கள் வகுப்பிலும் அரங்கேற்றுங்கள். மாணவர்களின் ஈடுபாட்டுக்கு ஏற்ப ஆசிரியர்கள் மதிப்பீடு செய்யலாம்.

- த.சிங்காரவேலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism