Published:Updated:

நீங்களும் பிரேமா ஆகலாம் !

நீங்களும் பிரேமா ஆகலாம் !

பிரீமியம் ஸ்டோரி
##~##

டாக்டர், இன்ஜினீயர் படிப்பு மட்டும்தானா மதிப்பு மிக்கது? இந்த இரண்டுக்கும் இணையாக பல துறைகள் இருக்கின்றன. அதற்கு அடித்தளமாக இருக்கிறது மூன்றாவது க்ரூப் (Group III).

கணக்குப்பதிவியல், வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய கட்டாயப் பாடங்களையும், வணிக கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், இங்கிலீஷ் ஃபார் கம்யூனிகேஷன்ஸ், வரலாறு, பொலிட்டிகல் சயின்ஸ், எதிக்ஸ் அண்ட் இந்தியன் கல்ச்சர் மற்றும் அட்வான்ஸ்டு லாங்குவேஜ் (தமிழ்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விருப்பப் பாடமாகவும் கொண்டதே இந்தப் பிரிவு.

மூன்றாவது க்ரூப்பை யாரெல்லாம் தேர்ந்தெடுக்கலாம்? அவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்ற கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார், விருதுநகர் - கிருஷ்ணாபுரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டி.செல்வராஜ்.

''பொதுவாக, கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் ஆர்வம் இல்லாத மாணவர்கள் மூன்றாவது க்ரூப்பைப் பரிசீலிப்பார்கள். ஆனால், கணக்குப்பதிவியல் என்ற பாடம் இருப்பதால், அவர்களில் பலருக்கும் தயக்கம் இருக்கும். வழக்கமான கணிதத்துக்கும், கணக்குப்பதிவியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தப் பாடத்தில் கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகள் மட்டுமே துணைபுரியும். மற்ற எந்தக் கணக்குகளுக்கும் இதில் தொடர்பு இல்லை.  

நீங்களும் பிரேமா ஆகலாம் !

வியாபார அமைப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள், அரசுத் துறை அமைப்புகள் என அனைத்து இடங்களிலும் வரவு - செலவு ஏடுகள் முறைப்படி பராமரித்து வர வேண்டும். இந்தக் கணக்குகளை முறைப்படி கணக்கேடுகளில் எழுதுவதற்கு சிறப்புத் தேர்ச்சியும், வியாபாரச் சட்டங்கள் சார்ந்த அறிவும் தேவை. அதைத்தான் கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் பாடப் பிரிவுகள் சொல்லித்தருகின்றன.

இந்தப் பிரிவில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. பி.காம், எம்.காம் போன்ற பட்டப்படிப்பில் பயின்று பட்டம் பெற்று, தொடர்புகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்பவர்களுக்கு, உள்ளூரில் தொடங்கி உலக நாடுகள் வரை உயர் பதவிகள் காத்திருக்கின்றன.

வணிகவியல் பிரிவில் கற்கும் திறமையுள்ள மாணவர்கள், சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.எஸ்.  போன்ற பட்டயப் படிப்புகளில் தேர்ச்சி பெற்று உயர் பதவிகளை வகிக்க முடியும். இந்தப் படிப்புகளுக்கு டாக்டர், இன்ஜினீயர் படிப்புகள்போல் அதிக செலவுகள் ஆகாது என்பது மற்றொரு சிறப்பு. பொருளியலும் முக்கியப் பாடமாக இருப்பதால், பிற்காலத்தில் போட்டித் தேர்வுகளில் அசத்த முடியும். நிர்வாகம், வணிகவியல் சார்ந்த துறைகளில் நாளுக்கு நாள் மாற்றங்கள் நிகழ்வதால், நீங்கள் ப்ளஸ்-2 முடிப்பதற்குள் இன்னும் புதுப்புது உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

எனவே, நீங்கள் க்ரூப்-1, க்ரூப்-2 பிரிவுகளில் சேர்வதற்குத் தேவையான அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், வணிகவியல், கணக்குப்பதிவியல் முதலான பாடங்களில் ஆர்வம் இருந்தால், தாராளமாக இந்தக் க்ரூப்பைத் தேர்வு செய்ய்யலாம். சமீபத்தில், சி.ஏ. தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தாரே... பிரேமா. அவரைப் போல் நீங்களும் அட்டகாசமான ஆடிட்டர் ஆகலாம்'' என்கிறார் செல்வராஜ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு