Published:Updated:

ஒற்றுமையே பலன் - நாடகம்

த.சிங்காரவேலன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ழிலனும் மணியும் அழகிய நல்லூர் பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவர்கள். அவர்களின் வகுப்பு ஆசிரியர் முத்துக்குமரன். ஒருநாள் மணி வகுப்பறையில் சோகமாக அமர்ந்திருக்கின்றான். அப்போது, வகுப்பு ஆசிரியர் அங்கே வருகிறார்.

மாணவர்கள்:  'வணக்கம் அய்யா!'

ஆசிரியர்: 'வணக்கம் குழந்தைகளே! (சோகமாக உள்ள மணியைப் பார்த்து) மணி, ஏன் உன் முகம் வாடியிருக்கிறது? கண்கள் அழுதழுது சிவந்ததுபோல் உள்ளதே?'

மணி :  'அய்யா, கடந்த சனிக்கிழமை இரவு எங்கள் வீட்டில் திருடன் நுழைந்து, பீரோவை உடைத்து, அக்காவின் திருமணத்துக்கு சேர்த்துவைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயையும் 10 சவரன் நகையையும் திருடிக்கொண்டு போய்விட்டான்.'

ஆசிரியர்: 'அடடா... அப்போது வீட்டில் யாரும் இல்லையா?'

மணி: 'எங்களுடைய மாமாவின் ஊரில் நடைபெற்ற விழாவுக்காக குடும்பத்தோடு சென்றிருந்தோம். அதைத் தெரிந்துகொண்ட திருடன், திருடிச் சென்றுவிட்டான்.'

ஒற்றுமையே பலன் - நாடகம்

ஆசிரியர்: 'உங்கள் பக்கத்து வீட்டில்தானே உன் நண்பன் எழிலன் குடும்பமும் வசிக்கிறது. வெளியூருக்குச் செல்லும்போது அவர்களிடம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாமே மணி!'

மணி: 'அய்யா, எங்கள் இரண்டு குடும்பமும் நட்போடுதான் இருந்தன. கடந்த மாதம் ஒரு சண்டை காரணமாக இரு குடும்பத்துக்கும் பகை உருவாகிவிட்டது. என்னையும் எழிலனோடு சேரக் கூடாது, பேசக் கூடாது என்று தடுத்துவிட்டனர். அதனால், அவர்களிடம் வீட்டைப் பாதுகாக்கச் சொல்லவில்லை.'

எழிலன்: 'அய்யா, எனக்குக்கூட வருத்தமாக இருக்கிறது. நானும் மணியும் ஒன்றாக விளையாடுவோம். படிக்கும்போதும் பாடத்தில் ஏற்படும் ஐயங்களைத் தீர்த்துக்கொள்வோம். ஆனால், கடந்த ஒரு மாதமாகப் பேசிக்கொள்வதில்லை.'

ஆசிரியர்: 'அடடா... பெற்றோர்களுக்குள் ஏற்பட்ட சண்டை உங்கள் நட்பைப் பிரித்துவிட்டதே. அதனால்தான் கடந்த வாரத் தேர்வில் உங்கள் இருவரின் மதிப்பெண்களும் வழக்கத்தைவிடக் குறைவாக இருந்தனவா?'

மணி: 'ஆமாம் அய்யா, முன்பெல்லாம் ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்து வாழ்ந்தோம். யார் வெளியூர் சென்றாலும் ஒருவர் வீட்டை ஒருவர் பாதுகாப்போம். எங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பகையை அறிந்த யாரோதான் திருடியிருக்க வேண்டும்!'

ஆசிரியர்: 'இதைக் கேட்டவுடன் எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. நம் நாட்டின் இராஜபுத்திர அரசர்களான பிருத்விராஜ், ஜெயச்சந்திரன் போன்றவர்கள் வீரம் மிக்கவர்கள். ஆனால், ஒருவருக்கு ஒருவர்  பகைமை பாராட்டித் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு கஜினி முகம்மது, கோரிமுகம்மது போன்ற அந்நிய நாட்டவர் பாரதத்தின் வளத்தைக் கொள்ளையிட்டதுடன், நம்மையும் அடிமைப்படுத்தினர். ஒற்றுமை இன்றி சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் சண்டையிட்டுக்கொண்டு இருந்தால், அனைவருக்கும் தாழ்வுதான் ஏற்படும் என்பதை உங்கள் குடும்பத்தின் பகைகூட உணர்த்துகிறது அல்லவா?'

மணி: 'ஆமாம் அய்யா. எங்களுக்குப் புரிகிறது. நானும் எழிலனும் இதனை எங்கள் பெற்றோருக்கு எடுத்துச்சொல்வோம். 'ஒற்றுமையே பலம்’ என்பதைப் புரியவைப்போம்.'

முத்துக்குமரன்: 'நல்லது! இது நீங்கள் மட்டுமல்ல, அனைவரும் வாழ்வில் பின்பற்ற வேண்டிய நல்ல செய்தி.'

மணி, எழிலன்: 'நன்றி அய்யா!'

(மாணவர்கள், ஆசிரியர் துணையுடன் இதுபோன்று ஒற்றுமையின் வல்லமையை வலியுறுத்தும் கருத்து அமைந்த நாடகங்களை வகுப்பில் நடிக்கலாம். ஆசிரியர்கள் அதனை மதிப்பீடு செய்யலாம்.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு