Published:Updated:

பி.இ. தேர்வில் 51% மாணவர்கள் தோல்வி: கல்வி தரத்தை உயர்த்த ராமதாஸ் கோரிக்கை!

பி.இ. தேர்வில் 51% மாணவர்கள் தோல்வி: கல்வி தரத்தை உயர்த்த ராமதாஸ் கோரிக்கை!
பி.இ. தேர்வில் 51% மாணவர்கள் தோல்வி: கல்வி தரத்தை உயர்த்த ராமதாஸ் கோரிக்கை!
பி.இ. தேர்வில் 51% மாணவர்கள் தோல்வி: கல்வி தரத்தை உயர்த்த ராமதாஸ் கோரிக்கை!

சென்னை: பி.இ. தேர்வில் 51% மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதால் கல்வி தரத்தை உயர்த்த அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் இளம் பொறியியல் மற்றும் இளம் தொழில்நுட்பவியல் (B.E./B.Tech) பட்டப்படிப்புகளின் தேர்ச்சி விகிதம் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. கல்வித்தரத்தின் எதிர்காலம் குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு ஏப்ரம் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்ட பருவத் தேர்வுகளில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு பயிலும் 7.02 லட்சம் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இவர்களில் 3.47 லட்சம் பேர் மட்டுமே, அதாவது 49.49% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட 51%  மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் 95 விழுக்காட்டுக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்களும் இதில் அடக்கம். சிறந்த உயர்கல்வியாகக் கருதப்படும் பொறியியல் படிப்பு பயில்பவர்களில் பாதிப் பேர் கூட தேர்ச்சி பெற முடியவில்லை என்பது தமிழகத்தில் கல்வியின் தரம் நாளுக்கு நாள் எவ்வளவு சீரழிந்து வருகிறது என்பதற்கு சிறந்த உதாரணம் ஆகும்.

பொறியியல் படிப்பு மிகவும் கடினமானது; அதனால்தான் அதிக அளவிலான மாணவர்களால் தேர்ச்சி பெற முடியவில்லை என்று கல்வித்துறை சார்பில் காரணம் கூறப்படுமானால், அதை ஏற்க முடியாது. ஏனெனில், இப்போது இருப்பதைவிட கடுமையான பாடத்திட்டம் நடைமுறையில் இருந்த 2000வது ஆண்டுகளின் தொடக்கத்தில் பொறியியல் படிப்பு படித்தவர்களில் 75 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் தேர்ச்சி பெறுவது வழக்கமானதாக இருந்திருக்கிறது. ஆனால், இப்போது பட்டப்படிப்பில் அதிக எண்ணிகையிலான மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது தமிழ்நாட்டில் கல்வியின் தரம் மோசமான திசையில் வேகமாக பயணம் செய்து கொண்டிருக்கிறது என்பதைத் தான் காட்டுகிறது.

தமிழ்நாட்டில் நடைபெறும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து 90 விழுக்காட்டைத் தாண்டி விட்டது. அதுமட்டுமின்றி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் கூட 100% மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. அதேநேரத்தில், பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர் எண்ணிக்கை 75 விழுக்காட்டிலிருந்து படிப்படியாக குறைந்து 49% என்ற நிலைக்கு குறைந்துவிட்டது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியின் தேர்ச்சி விகிதங்கள் எதிரெதிர் திசைகளில் செல்வதற்கான காரணங்கள் என்ன? என்பதைக் கண்டறிந்து சரிசெய்தால் மட்டுமே கல்வித்தரத்தை உயர்த்த முடியும்.

இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களில் (ஐ.ஐ.டி) சேரும் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர் எண்ணிக்கையும் வேகமாக குறைந்து வருகிறது. நடப்பாண்டில் 12 ஆம் வகுப்புத் தேர்வில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 65 பேர் மட்டுமே ஐ.ஐ.டியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இன்னொரு பக்கம் பொறியியல் பட்டப்படிப்புக்கான தேர்வில் 51 விழுக்காட்டினர் தோல்வியடைந்துள்ளனர். இதற்கெல்லாம் காரணம் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் மனப்பாடக் கல்வியை மட்டுமே ஊக்குவிக்கிறது; அறிவுசார்ந்து சிந்திக்கும் திறனை வளர்ப்பதில்லை என்பது தான் என்ற முடிவுக்கு வர பெரிய அளவில் பகுத்தறிவு எதுவும் தேவையில்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கான பத்தாம் வகுப்பு மற்றும் பணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்களை ஆய்வு செய்தால், பாடநூலில் உள்ள வினாக்கள் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே வந்திருப்பதை காணலாம். அப்படியானால், ஒவ்வொரு பாடத்திற்குமான உரைகளை (நோட்ஸ்) மொத்தமாக மனப்பாடம் செய்தால் 100% மதிப்பெண் பெற்றுவிடலாம். அதைத்தாண்டி மாணவர்களின் சிந்திக்கும் திறனையும், பகுப்பாய்வு செய்யும் திறனையும் வளர்க்க தமிழகப் பாடத்திட்டம் எந்த வகையிலும் உதவுவதில்லை. பள்ளித் தேர்வுகளில் சாதிக்கும் மாணவர்கள் கல்லூரிகளில் தோற்பதற்கு இதுவே காரணம் ஆகும்.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் கல்வித் தரம் மோசமாக இருப்பதும், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லை என்பதும் இன்னொரு காரணம் ஆகும். தமிழ்நாட்டில் பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்துவிட்டு வேலையில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை 3.52 லட்சம் என்று வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒருபுறம் பொறியியல் கல்லூரிகள் வேலைக்கு தகுதியில்லாதவர்களை உருவாக்கிவரும் நிலையில், இன்னொருபுறம் தமிழ்நாடு பள்ளிகள்  பொறியாளர் ஆவதற்குத் தகுதியில்லாத மாணவர்களை உருவாக்கி வருவது மிகவும் ஆபத்தான போக்கு ஆகும். இது அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை பின்னுக்குக் கொண்டு சென்றுவிடும்.

எனவே, ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் இனியாவது விழித்துக் கொண்டு கல்வித் தரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிந்திக்கும் திறன் கொண்ட மாணவர்களை உருவாக்கும் அளவுக்கு பள்ளிகளின் பாடத்திட்டத்தையும், வேலைவாய்ப்புக்கு தகுதி பெற்றவர்களை உருவாக்கும் அளவுக்கு கல்லூரிகளின் பாடத்திட்டங்களையும் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.