Published:Updated:

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி பிரச்னை!

Vikatan Correspondent
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பெரியார் ஈ.வெ.ரா.  கல்லூரி பிரச்னை!
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி பிரச்னை!

டந்த 24-8-1965 அன்று திருச்சியில் பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலைக்கல்லூரி துவங்கப்பட்டது. இந்த கல்லூரி துவங்குவதற்கு தந்தை பெரியார், தங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை வழங்கினார்.

இந்த கல்லூரியில் திருச்சி மட்டுமல்லாமல், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக இங்கு படித்து முடித்துள்ளனர். பெரியார் இறப்புக்கு பிறகு இந்த கல்லூரிக்கு அவரின் பெயர் சூடப்பட்டது.

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பெரியார் ஈ.வெ.ரா.  கல்லூரி பிரச்னை!

இந்நிலையில், கடந்த 2003ல் இந்த கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் தொடங்கபட்டது.  இதே கல்லூரியில் படித்த துணைவேந்தர், முன்னாள் அமைச்சர்கள், அரசுக் கல்லூரி முதல்வர்கள் என ஏராளமானவர்கள் இந்த அமைப்பில் உள்ளார்கள். இக்கல்லூரியில் படித்த முன்னாள் மாணவரும், தி.மு.க. எம்.பி.யுமான திருச்சி சிவா, தனது தொகுதி வளர்ச்சி நிதியின் மூலம் ரூ.50 லட்சத்தில் கலையரங்கம் கட்டவும், ரூ.6 லட்சத்தில் வகுப்பறைகள் கட்டவும் நிதி ஒதுக்கி தந்தார்.

அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17ம் தேதி,  இக்கல்லூரி முன்னாள் மாணவர்கள்,  'சங்கமம்' எனும் பெயரில் சந்தித்து, தங்களது கல்லூரி நாட்களின் நினைவுகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதுடன், கல்லூரியின் முன்னேற்றத்திற்கு என்ன செய்யலாம் என்பது பற்றியும் ஆலோசித்து,  அதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பெரியார் ஈ.வெ.ரா.  கல்லூரி பிரச்னை!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி, இக்கல்லூரியில் பொன்விழா (50ம் ஆண்டு) தொடக்கவிழா கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதியுடன் பொன்விழா ஆண்டு நிறைவடைகிறது. இதை கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையிலான 3 நாட்கள் நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் துரைமுருகன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பேராசிரியர் காதர்மொய்தீன், எம்.எல்.ஏ. செந்தில்குமார், முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம், பா.ஜ.க. வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் மற்றும் தமிழகத்தின் முக்கிய தலைவர்கள், வி.ஐ.பி.க்கள், அரசியல் பிரபலங்கள், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சிக்காக கல்லூரியின் பொறுப்பு முதல்வராக இருந்த  ரங்கநாதன் என்பவரிடம், முன்னாள் மாணவர் சங்க பொதுச் செயலாளர் செந்தில்ராஜன் ஜூலை 31 ஆம் தேதி அனுமதிக்கேட்டு கடிதம் கொடுத்தார். அதற்கு முதல்வர்,  "நான் அனுமதி கொடுக்க முடியாது, கல்லூரி கல்வி இயக்குனர்தான் அனுமதி வழங்கனும்" எனக் கூற,  அடுத்து முன்னாள் மாணவர் சங்கத்தினர், கல்லூரி கல்வி இயக்குனரையும் சந்தித்தனர். அப்போது அவரும் அனுமதி கொடுக்காமல், நீங்கள் கல்லூரி முதல்வரை போய் பாருங்கள் என கூற, நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனிக்க முடியாமல் விழாக்குழுவினர் தடுமாறியுள்ளனர்.

இதையடுத்து  நிகழ்ச்சிக்கு அனுமதிக்கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்னாள் மாணவர் சங்கத்தினர் சார்பாக மனுதாக்கல் செய்யப்பட்டது. கல்லூரிக்கு சேதம் விளைவிக்கக்கூடாது, வகுப்புகளுக்கு இடையூறு செய்யக்கூடாது எனும் 6 நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், முதல்நாள் நடக்க இருந்த விளையாட்டு விழா நடக்காமல் போனது.

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பெரியார் ஈ.வெ.ரா.  கல்லூரி பிரச்னை!

பிறகு நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொண்டு, நேற்று விழா கொண்டாட முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் வந்தனர். ஒருநாள் நிகழ்ச்சி நடத்த முடியவில்லை என்றாலும், நேற்று முன்னாள் மாணவர்கள் ஆர்வமுடன் கல்லூரி வளாகத்திற்குள் வந்தனர்.

அதன்பிறகு நடந்ததை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் எம்.பி. சிவா.

''இந்த கல்லூரி நாங்கள் ஓடி விளையாடிய கல்லூரி. சாதி, மதம், அரசியல் என எல்லாம் கடந்து நண்பர்களாய் ஆன கல்லூரி. எப்போதெல்லாம் எங்களுக்கு மனசு கஷ்டமாக இருக்கிறதோ அப்போதெல்லாம், இந்த வளாகத்திற்குள் வந்து இங்குள்ள ஆல மரத்தின் அடியில் உட்கார்ந்து, கல்லூரி கால நினைவுகளை அசைபோட்டபடி, மீண்டும் வீட்டுக்கு செல்வோம். அப்படிப்பட்ட கல்லூரியில் படித்த மாணவர்கள் வருடாவருடம் சந்தித்து வருகின்றோம்.

ஆனால், இந்த வருடம் எங்கள் விழாவை தடுக்க திட்டமிடுகின்றார்கள். பெரியார் கல்லூரியில், 'சமூக வளர்ச்சிக்கு பெரியார் ஆற்றிய தொண்டு' எனும் தலைப்பில் பேச இருந்தார்கள். ஆனால், நிகழ்ச்சிக்கு இடையூறு செய்ய நினைத்தது கல்லூரி நிர்வாகம். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றோம்.  அந்த ஆணையை கொடுக்க மாணவர் சங்க பொதுச்செயலாளர் செந்தில்ராஜன் உள்ளிட்ட தோழர்களோடு, கல்லூரி முதல்வர் அறைக்கு சென்றோம்.

அந்த அறையில் கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் கலா, கல்லூரிக்கு புதிய முதல்வராக பொறுப்பேற்ற மஞ்சுளா மற்றும் 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கல்லூரி முதல்வர் அறையில் அமர்ந்திருந்தனர். நாங்கள் கல்லூரி முதல்வரிடம் நீதிமன்ற உத்தரவைக் காட்டி, கலையரங்க சாவியை கேட்டோம். அதற்கு முதல்வர் மஞ்சுளாவும், இணை இயக்குனர் கலாவும் சாவியை தர மறுத்து விட்டனர். உங்களுக்குதான் நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது என சொன்னபோது, எங்களுக்கு உத்தரவு வரவில்லை என இழுத்தடித்தார்கள். பிறகு வழியில்லாமல் 11 மணிக்கு கலையரங்க சாவியை வழங்கினார்கள். அதன்பிறகுதான் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்தோம்.

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பெரியார் ஈ.வெ.ரா.  கல்லூரி பிரச்னை!

ஒரு கல்லூரிக்குள் முன்னாள் மாணவர்களை வரக்கூடாது என சொன்ன முதல் கல்லூரி முதல்வரை இங்கேதான் பார்க்கிறோம். இங்கேயுமா கட்சி, அரசியல் பாகுபாடு பார்க்கிறார்கள் என கஷ்டமாக உள்ளது. ஆனாலும், முதல்வர் அறைக்கு சென்று, இந்த கல்லூரியின் புரவலர் என்கிற முறையிலும், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி எனும் முறையிலும் நிகழ்ச்சியில் வந்து கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தேன். அவர்கள் வர மறுத்துவிட்டார்கள். இப்போது படிக்கும் மாணவர்களையும் நிகழ்ச்சிக்கு போகக்கூடாது என மிரட்டியதை பார்க்க முடிந்தது. அவர்களிடம் மாணவர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாக வந்துள்ளோம். இப்படி செய்கிறீர்களே எனக் கேட்டுவிட்டு வந்துவிட்டேன்.

மணிக்கணக்காக காத்துகிடந்த பிறகு நிகழ்ச்சியை துவங்கினோம். ஆனால், இப்போதைய மாணவர்கள் யாரும் வரவில்லை. நாற்காலிகள் காலியாக கிடந்தால் என்ன, நிகழ்ச்சிதான் முக்கியம் எனும் அடிப்படையில் நிகழ்ச்சி நடத்துகிறோம்'' என்றார்.

மேடையில் பேசிய தமிழர் திராவிட இயக்க பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், ''தமிழகத்தின் இரண்டு கட்சியான தி.மு.க., அ.தி.மு.க. கரை வேட்டியும் ஒரு மேடையில் இருக்கிறது என்றால்  அது இந்த நிகழ்ச்சியில் மட்டுமே. புரவலர் சிவா தி.மு.க., பொதுச்செயலாளர் செந்தில்ராஜன் அ.தி.மு.க. நிர்வாகி.

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பெரியார் ஈ.வெ.ரா.  கல்லூரி பிரச்னை!

முன்னாள் மாணவர்களுக்கு கல்லூரி தொடர்பான உணர்வை ஊட்டி வளர்க்க வேண்டிய நிர்வாகம், தடையாக உள்ளது. முஸ்லீம், கிறிஸ்தவர், பிராமணர்களுக்கு மட்டும் திருச்சியில் கல்லூரி இருந்ததை பார்த்த பெரியார், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒரு கல்லூரி துவங்க விரும்பினார். தனது நிலம் 20 ஏக்கரையும், ரூ.5 லட்சம் நிதியையும் அரசிடம் ஒப்படைத்தார். பெரியார் தனக்குத்தான் சிக்கனமாக செலவு செய்வார். ஆனால், சமூகத்துக்கு வாரி வழங்கும் கொடை வள்ளல். அப்படி பெரியார் பெயரில் இயங்கும் கல்லூரியில், பொன்விழா நிகழ்ச்சிக்கு தடைவிதிப்பதா?'' என காட்டமாக கூறினார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியோ, ''காரணமே இல்லாமல்  இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துள்ளனர். அவர்களை  நினைத்தால் பரிதாபப்படவே முடிகின்றது. இவர்கள் அம்புதான். வில்லை எய்தவர்கள் மீதுதான் நாம் கோபப்பட வேண்டும். ஒரு கல்லூரியின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள்தான் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களை தவிர்த்துவிட்டால் கல்லூரியின் வரலாறு என்னவாகும். பெரியார் பேசாமல் சென்ற ஒரே மேடை, இக்கல்லூரி திறப்பு விழாவில் மட்டும்தான்.

கோயிலை கட்டிக்கொடுத்தவன் கருவறைக்குள் செல்லாமல் வெளியே நிற்பது போல, பெரியார் கட்டிக்கொடுத்த கல்லூரிக்குள் நம்மை வெளியே நிறுத்த முயற்சித்தால் அதுமுடியுமா? இன்று அனுமதி மறுக்கப்பட்ட கல்லூரியின் சாவி, சிவாவுக்கு நிரந்தரமாக கிடைக்கும்'' என்று முடித்தார்.

பெரியார் கல்லூரியில் பெரியார் பொன்விழா நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம், திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சி.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்