Published:Updated:

தகுதியற்ற பேராசிரியர்கள்… தடுமாறும் தனியார் கல்லூரி மாணவர்கள்!

Vikatan Correspondent
தகுதியற்ற பேராசிரியர்கள்… தடுமாறும் தனியார் கல்லூரி மாணவர்கள்!
தகுதியற்ற பேராசிரியர்கள்… தடுமாறும் தனியார் கல்லூரி மாணவர்கள்!

ள்ளி படிப்பு முடிக்கும் கிராமப்புற மாணவர்களின் உயர் கல்வியை பூர்த்திசெய்வது பெரும்பாலும் கலை அறிவியல் கல்லூரிகளே. ஆனால், தமிழக பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர்களாக பணியாற்றுபவர்களில் பலர் தகுதியற்றவர்களாக உள்ளனர் என்ற புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ள வேலூர் ஊரிஸ் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் அய்.இளங்கோவனிடம் பேசினோம்.

“திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம், அதன் கீழ் உள்ள கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியரின் தகுதிகள் போன்றவற்றில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து மனு செய்திருந்தேன். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒரு நிபுணர் குழுவை நியமித்து, ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யூஜிசி-க்கு உத்தரவிட்டிருந்தது.

தகுதியற்ற பேராசிரியர்கள்… தடுமாறும் தனியார் கல்லூரி மாணவர்கள்!

சென்னை பல்கலைக்கழகத்தின் அப்போதைய பொருளாதாரத் துறை தலைவர் துரைசாமி தலைமையில், கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் சென்று ஆய்வு நடத்தி, தகவல்களைத் திரட்டி, கடந்த பிப்ரவரி மாதம் யூஜிசி-யிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்கள். அந்த விவரங்களை நான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றேன். அந்த அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களின் கீழ் 107 கல்லூரிகள் இருக்கின்றன. அதில் 70-க்கும் மேல் சுயநிதிக் கல்லூரிகள். இவற்றில் பணியாற்றும் பேராசிரியர்களில் சொற்பமானவர்களே தகுதியானவர்கள். இந்த ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள சுயநிதிக் கல்லூரிகளிலும் இதேதான் நிலைமை.

அனைத்து பல்கலைக்கழகங்களும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைப்படியே இயங்குகின்றன. யூஜிசியின் 2010 ஒழுங்குமுறை, கல்லூரி பேராசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதியை நிர்ணயித்துள்ளது. அதன்படி ஒருவர் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களோடு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தேசிய தகுதித் தேர்வு எனப்படும் நெட் (NET) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வு எனப்படும் ஸ்லெட்டிலிலோ (SLET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் மட்டுமே உதவி பேராசிரியராக பணியாற்ற முடியும்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மட்டும் 4935 பேராசிரியர்களில் 3384 பேர் தகுதியற்றவர்கள் என்று பல்கலைக்கழகமே அறிக்கை அளித்துள்ளது. தகுதியற்றவர்கள் என்று கூறாமல் அங்கீகரிக்கப்படாதவர்கள் என்று வார்த்தை ஜாலம் காட்டியுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் பல கல்லூரியின் முதல்வர்களும் இதில் அடக்கம். கல்வியை வியாபாரம் சார்ந்ததாக பார்ப்பதே இத்தகைய கோளாறுகளுக்கு காரணம். சுயநிதி கல்லூரிகள் அனைத்தும் கட்டணமாக மாணவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கில் பணத்தை கறக்கின்றன. ஆனால், அதற்கு தகுந்த தரமான உயர்க்கல்வியை வழங்குவதில்லை.

தகுதியற்ற பேராசிரியர்கள்… தடுமாறும் தனியார் கல்லூரி மாணவர்கள்!

பேராசிரியர்களின் தகுதிக்கான விதிமுறை இருப்பதையே பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும், பதிவாளர்களும் மறந்துவிட்டு,  அவர்களின் ஆதாயங்களுக்காக கல்வித்தரத்தை இல்லாமல் செய்கிறார்கள். உயர்க்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் இதுப்பற்றி எல்லாம் அலட்டிக்கொள்வதேயில்லை.

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சி.பி.எஸ்.இ. தரத்தில் கல்வி தருவோம்' என்று சொல்லும் அரசியல்வாதியின் கல்லூரியிலும் இதே நிலைமைதான். இந்த பேராசிரியர்கள்தான் பிள்ளைகளுக்குப் பாடம் நடத்தி, அவர்களின் தேர்வுத்தாள்களை திருத்தி மதிப்பிடுகிறார்கள். இதுபோன்ற குறைபாடுகளால்தான் கல்வித்தரம் இல்லாமல், உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் ஒரு இடத்தைக்கூட பிடிக்க முடியாமல் நாம் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம். வேலைவாய்ப்பு இருந்தும், வேலை செய்யும் திறன் பெற்ற பட்டதாரிகள் குறைவு என்று  நிறுவனங்கள் சொல்வது, இதுபோன்ற குறைப்பாட்டின் பிரதிபலிப்புதான். தமிழக உயர்க்கல்வித் துறை உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் இது” என்றார்.

இந்த புகார் குறித்து பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

“சுயநிதி கல்லூரிகள் ஆசிரியர்களின் தகுதிகளைப் பற்றி கவலைப்படுவது இல்லை. முதுகலை பட்டம் முடிந்திருந்தால் சொற்ப சம்பளம் கொடுத்து வேலைக்கு சேர்த்துக்கொள்கிறார்கள். வேறு கல்லூரியில் இதைவிட அதிக சம்பளம் தந்தால் பாதியிலேயே தாவிவிடுகிறார்கள். காலியிடத்தை நிரப்ப தகுதி பற்றி கவலைப்படாமல் யாரையாவது சேர்த்துக்கொள்கிறார்கள். இதனைக் கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய பல்கலைக்கழகங்கள் கண்டுகொள்வதில்லை. இதுபோன்ற புகார்கள் எழுந்தால், கண்துடைப்புக்கு ஏதாவது நடவடிக்கை எடுத்து விட்டுவிடுவார்கள்.

இந்தப் பிரச்னை நம் மாநிலத்தில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் உள்ளது. ஆசிரியர் - மாணவர்கள் விகித இடைவெளி அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம். நெட், ஸ்லெட் தேர்வுகள் கடினமாக இருப்பதால் கிராமப்புற மாணவர்களால் அதில் தேர்ச்சி பெற முடிவதில்லை. அரசே இலவசமாக அதற்கென பயிற்சி வகுப்புகளை தொடங்க வேண்டும். மாநில அரசு பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கும் நிதியும் குறைவு. அதனையும் அதிகப்படுத்த வேண்டும். இந்த முறை நடத்த வேண்டிய 'ஸ்லெட்' தேர்வை இன்னும் நடத்தாமல் இருக்கிறார்கள். அதனை உடனுக்குடன் நடத்த வேண்டும்” என்றார்கள்.

முதலமைச்சர் உடனடியாக தாழ்ந்து கிடக்கும் உயர் கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

அ.அச்சணந்தி

படங்கள்: ச.வெங்கடேசன்