Published:Updated:

67 ஆண்டுகளாகச் செயல்பட்ட அரசுப் பள்ளி மூடல்... பழங்குடியினரின் கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்குமா?

 67 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த அரசுப் பள்ளி மூடல்
67 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த அரசுப் பள்ளி மூடல்

பழங்குடிகளின் கல்விக்காக 1954-ம் ஆண்டு புற்களால் வேயப்பட்ட கூரையில் மக்களால் துவக்கப்பட்ட இந்தக் கல்வி நிலையம்,1964-ல் அரசுப் பள்ளியாக மாற்றப்பட்டது. தற்போது மத்திய அரசின் மறு குடியமர்வு திட்டத்தின் கீழ் முதுமலையில் இருந்து பழங்குடிகளை வெளியேற்றியுள்ளனர்.

இன்றளவும் முறையான போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமே சென்றடையாத பகுதி முதுமலை நாகம்பள்ளி. இதன் சுற்றுவட்டாரப் பகுதிளில் வாழும் பழங்குடியின மக்களின் கல்விக்காக 1954-ம் ஆண்டில் இதே பகுதியில் வாழ்ந்து வந்த பாலகிருஷ்ணன் என்பவரின் முயற்சியால் கிராம மக்களின் ஒத்துழைப்போடு புற்களால் வேயப்பட்ட கூரையில் கல்வி நிலையம் துவங்கப்பட்டது.

நாகம்பள்ளி
நாகம்பள்ளி

இந்தக் கல்வி நிலையத்தின் முதல் ஆசிரியர் கேரளாவைச் சேர்ந்த நம்பியார். இவர் மலையாள மொழியில் கல்வி புகட்டி வந்தார். 1964-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட இந்தக் கல்வி நிலையம் அரசு தொடக்கப்பள்ளியாக மாற்றப்பட்டது. அதன்பிறகு மாணவர் சேர்க்கையை அதிகரித்து தமிழ் மொழியில் கல்வி கற்பித்தனர்.

இப்போது இந்தப் பகுதியில் காலங்காலமாக வாழ்ந்து வந்த மக்களை மத்திய அரசின் கோல்டன் ஹேண்ட்ஷேக் என்ற திட்டத்தின் கீழ் மறு குடியமர்வுக்காக வெளியேற்றி வருகின்றனர். நாகம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழ்ந்து வந்த பெரும்பாலான பழங்குடிகள் அரசு வழங்கிய மாற்றிடத்துக்கு குடியேறிவிட்டனர். இதனால் இந்தப் பள்ளியின் மாணவர் சேர்க்கையும் படிப்படியாகக் குறைந்து வந்தது. கடைசியாக 6 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வந்த நிலையில், ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் சத்துணவு ஆசிரியர் மட்டுமே பணியாற்றினர். இதனால் இந்தக் கல்வியாண்டுடன் இந்தப் பள்ளியை மூடும் உத்தரவை பிறப்பித்துள்ளது கல்வித்துறை.

முதுமலை
முதுமலை

"முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட நாகம்பள்ளி, மண்டக்கரை, புலியாளம், பனங்கொள்ளி, காப்பூர் பகுதிகளில் இருந்த பழங்குடி மற்றும் பழங்குடியினர் அல்லாத மாணவ மாணவிகளின் எழுத்தறிவுக்கு முக்கிய பங்காக இருந்தது இந்தப் பள்ளி. இங்கு வாழ்ந்த மக்களில் பலரும் சன்னக்கொல்லி பகுதியில் அரசு வழங்கிய மாற்றிடத்தில் குடியேறிவிட்டனர். இந்தப் பள்ளியை மூடாமல் சன்னக்கொல்லிக்கு மாற்றித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு