Published:Updated:

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: பணம் வாங்கிக்கொண்டு `பிட்' வழங்கிய ஆசிரியர்கள்!

Vikatan Correspondent
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: பணம் வாங்கிக்கொண்டு `பிட்' வழங்கிய ஆசிரியர்கள்!
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: பணம் வாங்கிக்கொண்டு `பிட்' வழங்கிய ஆசிரியர்கள்!
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: பணம் வாங்கிக்கொண்டு `பிட்' வழங்கிய ஆசிரியர்கள்!

திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.  தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காப்பி அடிக்க ஏதுவாக பணம் வாங்கிக் கொண்டு பிட்  வழங்கியதாக தேர்வு மைய ஆசிரியர்கள் 7 பேர் பிடிபட்டனர்.

தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.  மாணவ-மாணவிகள் தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு  அவர்கள் தேர்வு மையங்களை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ராவின் இ-மெயிலுக்கு  ஒரு புகார் வந்தது.ஒரு மாணவியின் பெற்றோர் இந்த புகாரை அனுப்பி இருந்தனர்.

அதில்,”திருவண்ணாமலை நகரில் அவலூர்பேட்டை ரோட்டில் உள்ள மவுண்ட் செயின்ட்  ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் எனது மகள் படிக்கிறாள்.மிகவும் நன்றாக  படிக்கக்கூடிய அவள் இந்த தேர்வில் மிகவும் மன உளைச்சலுடன் இருக்கிறாள்.அந்த  பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு `பிட்'  வழங்கப்படுகிறது.அதனால் நன்றாக படிக்காதவர்கள் கூட நல்ல மதிப்பெண்கள் பெறும்  நிலை உள்ளது”என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து இப்பிரச்னையில் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா அதிரடி நடவடிக்கையில்  இறங்கினார்.சாதாரண காரில் குறிப்பிட்ட அந்த பள்ளிக்கு ரகசியமாக சென்றார்.

அங்கு அவர் 10.30 மணிக்கு நேராக பள்ளியின் அலுவலகத்திற்கு சென்றார்.அப்போது  நேற்று நடந்த கணித தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கான பதிலை எழுதி தேர்வு  மையங்களுக்கு வழங்க, அதை பள்ளி அலுவலகத்தில் உள்ள ஜெராக்ஸ் மிஷினில்  ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டிருந்தனர்.

கலெக்டர் சென்ற நேரத்தில் 20 ஜெராக்ஸ் காப்பிகள் எடுக்கப்பட்டிருந்தன.அதனை  கலெக்டர் கைப்பற்றினார்.பின்னர் தேர்வு மையங்களில் பணிபுரிந்த தேர்வுமைய  ஆசிரியர்களை தனித்தனியாக பரிசோதனை செய்தார்.

அப்போது 7 ஆசிரியர்களின் பாக்கெட்டுகளில் கட்டுக்கட்டாக பிட்டுகள் இருந்தன.இதை  பார்த்து கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார்.அவர்களிடம் இருந்த பிட்டுகளை பறிமுதல்  செய்தார்.அதை பார்த்து பிட் வைத்து தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவ-மாணவிகள்  அதை ஜன்னல் வழியாக வெளியே வீசினர்.அதையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

மொத்தம் 7 ஆசிரியர்களிடம் இருந்து பிட்டுகள் கைப்பற்றப்பட்டது. ஒரு ஆசிரியர்  பாக்கெட்டில் கவரில் ரூ.1,000 பணம்,அதில் ஒரு சீட்டில் குறிப்பிட்ட ஒருமாணவரின்  பெயர், அவருடைய தேர்வு எண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது.

விசாரணையில் தேர்வு மைய ஆசிரியர்கள் பணிக்கு வரும்போது அவர்களிடம் சில  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக ஒரு  கவரில் பணத்தை வைத்து,அதில் தனது பிள்ளையின் பெயர், தேர்வு எண் ஆகியவற்றை  குறித்து கொடுத்துள்ளது தெரியவந்தது.

அலுவலக அறையை பூட்டிக்கொண்டு பள்ளி நிர்வாகத்திடம் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா  விசாரணை நடத்தினார்.

பின்னர் வெளியே வந்த அவர்,இந்த செயலுக்கு கல்வி அதிகாரிகளும் உடந்தையாக  இருந்துள்ளனர்.மிகவும் கண்டிப்பாக இருந்த தேர்வுமைய ஆசிரியர்கள் ரவுடிகளால்  மிரட்டப்பட்டுள்ளனர்.அவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்”என்றார்.